Search This Blog

Oct 9, 2018

போனாப் போகட்டும்


போனாப் போகட்டும் 




நித்தம்நித்தம் நீர்பாச்சி
நான்வளத்த தென்னமரம்
பக்கத்து வீட்டுப்பக்கம்
தலைசாச்சு குலபோட
குலபோட்ட காயையெல்லாம்
களவு செஞ்சானே !- அதை
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே









மாங்கன்னை நான்நட்டு                       
மல்கோவா மரம் வளத்தேன்.
மதில்தாண்டி மரக் கிளைகள்
அவன்வீட்டு மாடியிலே
பழமாக பழுத்துத் தொங்க
பரிச்சு தின்னானே - அதயும்
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே






வேலிக்குப் பக்கம் நட்ட                            
எலுமிச்சஞ் செடியினிலே 
பச்சமஞ்ச நிறமாக  
காச்சிருந்த பழமெதையும் 
மிச்சம்மீதி வெக்காமல் 
பறிச்சுக் கொண்டானே - அதயும் 
போனாப்போ கட்டுமின்னு
வுட்டுப் புட்டேனே 






தேரிழுத்து தவமிருந்து                            
மாரியம்மன்  அருளாலே
காத்திருந்து பெத்துப்போட்டு 
பாசமா வளத்தபொண்ணை
வீடுதாண்டி கூட்டிப்போயி
ஓடிப் போனானே - அதத்தான்
போனாப்போ கட்டுமின்னு
விடமுடி யலையே!




கவிதை  எழுதியது  :  கனித்தோட்டம்  ரமேஷ் 

Oct 6, 2018

பிரதோஷப் பாடல் -12

இன்றைய சனிப் பிரதோஷத்தன்று ஒரு சிறு பிரதோஷப் பாடல் !

அன்புடன் 

ரமேஷ் 

பிரதோஷப் பாடல் -12






திருப்புங் கூர்த் தலத்தில்
தரிசனம் செய்ய வந்து
இடபச் சிலையொன் றங்கு
இடையிலே இருந்து ஈசன்
வடிவினைக்  காணு தற்கு 
தடையாக இருந்த படியால் 
வருந்தி வாடிய பக்தன் 
இருதயம் இன்புறும் விதமாய்  
நந்தியை நகரச்  செய்து
நந்தனுக்கு காட்சி தந்த
சுந்தரச்  செஞ்சடை  யோனை
வந்தித்து வணங்கிடு வோமே! 

பாட்டியும் பேத்தியும்

பாட்டியும் பேத்தியும் 


இன்று பல குடும்பங்களில் மகன்களும் மகள்களும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். தங்கள் பேராக் குழந்தைகளுடன்  தமிழில் உரையாட முடியவில்லையே என்பது தாத்தாக்களுக்கும் பாடல்களுக்கும் ஒரு பெரிய குறைதான்.
அவர்கள் ஆண்டு விடுப்பில்  சென்னை வருகையில் முடிந்த அளவு அவர்களுக்கு தமிழைக் கற்றுத் தரவேண்டும் என்ற முயற்சியில் தாத்தா-பாட்டிகள் ஈடுபடுகிறார்கள்.. 

அப்படிப்பட்ட ஒரு முயற்சியின் முடிவுதான் இது !

அன்புடன் 

ரமேஷ் 





இரண்டு மாதம் கோடை விடுப்பில்  
-----வந்தாள் அமெரிக்கப் பேத்தி.
தமிழில் பேசக் கற்றுக் கொடுக்க  
-----முயன்றாள்  நம்மூர்ப்  பாட்டி 
இரண்டு மாதம் ஆனபின்னே 
-----பேத்தி திரும்பிப் போச்சு.  
பாட்டி  இப்போ அமெரிக்கன்  இங்கிலீஷில்    
-----பொளந்து தள்ளல் ஆச்சு!                                                                                                  3


Sep 29, 2018

பேத்திகளுக்குப் புரிவதில்லை




பேத்திகளுக்குப் புரிவதில்லை

கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில்

வெள்ளைத் தாள்களில் கிறுக்கிக் கிறுக்கிக் கிழித்துப் போடும் தாத்தாவைத் திட்டாத அம்மா

தான் செய்தால் மட்டும் ஏன் திட்டுகிறாள் என்று !


Sep 27, 2018

தோல் வைத்தியம் -Thol Vaiththiyam


தோல் மருத்துவர் முருகு சுந்தரம் அவர்கள் பதிப்பித்து வரும் "தோல் மலர்"  இதழுக்காக  நான் எழுதி பகிர்ந்து கொண்ட ஒரு பாடல்.

அன்புடன் ரமேஷ் 

சில ஆண்டுகளுக்கு முன் தோல் அரிப்பாலும் , தொடக்க நிலை படுக்கைப் புண்ணாலும் பாதிக்கப்பட்டிருந்த  என் உறவினருக்கு செய்து பயனளித்த ஒரு மருத்துவம் இது.

தோல் வைத்தியம்

கத்தாழை இலையைக் கசக்கிப் பிழிந்து
-----சத்தான அதன்சா றெடுத்து
அத்தோடு தேன்கொஞ்சம் சேர்த்துக் குழைத்து
-----பதமான ஒர்கலவை செய்து
நித்தமும் தடவினால் சருமத்  துபாதைகள்
-----மொத்தமும் மறைந்து போகும்


வாள்போன்று  நீண்டகற் றாழை இலையை 
நீள்வாக்கில் வெட்டியுள் ளுள்ள சதையை  
கூழ்போல அரைத்துஅக் குழம்பை நாளும் 
தோல்மீது தவறாமல் தடவி வந்தால் 
உலர்சருமம் அம்மைநோய்த் தழும்பு போன்ற 
பலகுறைகள் விலகியே பொலியும் தோலே !



Sep 22, 2018

பிரதோஷப் பாடல் - 11 Pradosham song 11

இன்று சனிக்கிழமை.
அதனுடன் கூட பிரதோஷம்.
சனிப் பிரதோஷ சிவ தரிசனம் மிகவும் விசேஷம் என்று கூறுவர்.
அத்தைகைய  பிரதோஷ நாளன்று ஒரு பிரதோஷப் பாடல்- வெண்பா வடிவில்

அன்புடன்

ரமேஷ்
பிரதோஷப் பாடல்- 11 
சனியுடன் சேர்ந்த பிரதோஷ நாளில்    
பனிமலைப் புண்ணியன்  பாதம் பணிந்தால் 
இனிவரும் துன்பங்கள்  ஆதவனைக் கண்ட 
பனிபோல் பறந்திடும் காண் .

Sep 14, 2018

சூரி 60

சூரி 60

அகவை அறுபது ஆண்டுமுடித்து
அடுத்த ஆண்டில் அடிவைத்த
சூரியநாரா யணனெனும்  சூரி!
சீரிய வளமுடன் வாழ்ந்திடுக.

எங்கே இருந்தோ வந்தான் இவனே
பெற்றது அவனை  பெருந்தவமே
என்றே அன்று கண்ணனைப்பற்றி
பாரதி பாடிய பாடலைப் போல்

முதியோர்க் கெல்லாம்  சேவகனாய்
இளையோர்க் கெல்லாம் காவலனாய்
மதிமொழி கூறும் மந்திரியாய்
குறைகளைத் தீர்க்கும் தந்திரியாய்

தம்பி, தமையன் மாமன்,மருகனாய்
நம்பிக் கைதரும் நண்பனுமாய்
பரிமா ணங்கள் பலவும்எடுத்து
பரிமளம் வீசும்  பண்புடையான்

உடல்நலம் புஜபலம் நிலபுலம்மனநலம்
எனப்பல நலமுனைச் சேர்ந்திடவும்
ஆண்டுபல தாண்டி ஈண்டு நீவாழ
ஆண்ட வனைநான்  வேண்டுகிறேன் !