Search This Blog

Apr 26, 2022

ஏகாதசி விரதச் சிறப்பு

ஏகாதசி விரதச் சிறப்பு 

இன்று ஏகாதசி.  ஏகாதசியன்று  விரதம் இருப்பதின் சிறப்பைப் பற்றி ஒரு சிறு பாடல், என் அன்புப் பேத்தி ஆதிராவின் அழைப்புடன்!

அன்புடன் 
ரமேஷ் 



ஏகா தசியன்று உண்ணாமல் நோன்பிருந்து

ஏகாந்த சிந்தனையோ  டீசனை வேண்டிட்டால் 

நோகா உடல்நலமும் மீண்டும் மறுபிறப்பில்

சாகா வரமும்*கிட் டும்

( இன்னிசை வெண்பா )

*மறுபிறப்பில் சாகா வரமும் =
    பிறப்பினை   அறுக்கும் எனப் பொருள் கொள்க.  

Apr 22, 2022

லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை. -தோனி அண்ட் சி,எஸ் .கே பற்றி

லிமெரிக் (LIMERIK)- ஒரு குறும்புக் கவிதை.

-தோனி அண்ட் சி,எஸ் .கே  பற்றி 

நேற்று நடந்த விறுவிறுப்பான ஐ.பி .எல் போட்டியில் சென்னை அணி மும்பை  தோற்கடித்தது.

கடைசி ஓவரில் தோனி நான்கு பந்துகளில் பதினாறு ஓட்டங்கள் எடுத்து சென்னையை வெற்றி பெறச் செய்தார்.

இது தோனிக்கு சகஜமாகிவிட்டது.! 

2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது பற்றி ஒரு லிமெரிக் எழுதினேன். நேற்றும் சரித்திரம் திரும்பியது!

அந்தப் பாடல் மறுபதிவாக மீண்டும் இன்று!

அன்புடன் 

ரமேஷ் 





 
CSK    தல    ரொம்பக்           கூலு 
அடிப்பாரு    six     லாஸ்ட்     பாலு 
     அவர் பேரு    தோனி 
     மேட்ச் பாக்க வாநீ 
விசில் போட்டு கிளப்பலாம் தூளு

லிமெரிக் பற்றிய ஒரு சிறு குறிப்பு 
இது ஒரு ஐந்தடிப் படைப்பு. 1,2 மற்றும் 5-ம் அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் .
அதுபோல் 3,4 ம் வரிகளின் ஈற்றுச் சீர் ஒரே மாதிரி ஒலிக்கும் 
பொதுவாக இவை ஹாஸ்யரசம் ததும்பும் குறும்புக் கவிதைகள்!


Apr 21, 2022

பலிக்கல் எட்டிய படிக்கல்

தீபிகா பலிக்கல் எட்டிய படிக்கல் 

ஆறு மாதங்களுக்கு முன்புதான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான தீபிகா பலிக்கல் , மீண்டும் ஸ்குவாஷ் ஆட்டப் பந்தயங்களில் பங்குபெறத்  துவங்கி , உலக ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை  வென்று சாதனை படைத்தது, சென்ற வாரத்திய நிகழ்வு!

இந்த சாதனையைப் பாராட்டி ஒரு சிறு பாடல்!

அன்புடன் 

ரமேஷ் ( கனித்தோட்டம் )






இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்த பின்னாலும்

இரட்டையர் ஆட்டத்தில் இருபெரும் கோப்பைகளை

ஒருசேர வென்றிட்ட தீபிகா பலிக்கல்லின்

பெருமையினைப்   புகழ்வோம் நாம்  போற்றி  

Apr 19, 2022

(புதுக்) கவிதைப் பெண்


(புதுக்) கவிதைப் பெண்




வெண்பட்டு ஆடை உடுத்தோர்  

-----கன்னியென் கனவில் வந்தாள் 

சின்னவோர் சிரிப்பைச் சிந்தி 

-----காதலைச் சொல்லிச் சென்றாள் 


தினம்தினம்  இரவில்  தோன்றி

-----மனதினை வாட்டு கின்றாள்

உறக்கத்தைத் துறக்கச் செய்து

-----கிறக்கத்தை ஊட்டு கின்றாள்


எதுகை எழிலாடை போர்த்தி

-----மோனைமுகப் பொட்டை இட்டு

பதுமையவள் வளைக் கரத்தில்

-----தளைகளைச் சீராய்ச் சேர்த்தேன்


"வந்தெந்தன் கனவில் மட்டும்

----தோன்றியே மறையும் உன்னை 

சந்திப்ப தெப்போ " தென்றேன்

-----"சிந்தித்துச் சொல்வேன்" என்றாள்


மறுநாளே மீண்டும் வந்தாள்

----- முகத்திலே முறுவல் நீக்கி. 

"வருத்தமேன் பெண்ணே" என்றேன்

-----"உறுத்துதென் உடைகள்" என்றாள்.


"ஆடையும் பொட்டும் வேறு

-----ஆபரணம் கூட எதற்கு

கூடிநாம் இருவர் மட்டும்

-----கனவிலே களிக்கும் போது"


என்றவள் சொன்ன தாலே

----- எதுகையை எடுத் தெறிந்தேன்.

இலக்கணத் தளைகள் விலக்கி

-----புதுக்கவிதை படைக்கப் போனேன்!.


அன்புடன் 

ரமேஷ் 








Apr 13, 2022

சுபகிருது ஆண்டு வரவு

சுபகிருது  ஆண்டு வரவு 

"தமிழ் ஆண்டு" என்று நாம் கூறினாலும்,சாதாரணமாக நாம் பயன்படுத்தும்  ஆண்டுப்பெயர்கள் வடமொழிச் சொற்களாகவே இருக்கும். ஆனால் அனைத்து அறுபது ஆண்டுகளுக்கும் தமிழ்ப்பெயர்கள் உண்டு. உதாரணமாக சென்ற சில ஆண்டுகளின் பெயர்கள் வருமாறு- 

விகாரி = எழில்மாறல் ; சார்வரி= வீரியெழல் ; பிலவம் = கீழறை :       சுபகிருது =நற்செய்கை 

வருகின்ற தமிழாண்டை வரவேற்கும் இப்பாடலில் மேற்கூறிய தமிழ்ப்பெயர்களை பயன்படுத்தி இருக்கிறேன்!

வரும் "நற்செய்கை" ஆண்டில் "நற்செய்கைகளைச் செய்வோம்" என்ற உறுதி பூண்டு , புத்தாண்டை வரவேற்போம்!

வாழ்த்துக்களுடன் 

ரமேஷ்  


சுபகிருது  ஆண்டு வரவு 





எழில்மாறல்* தமிழாண்டில் உட்புகுந்த தீநுண்மி**             (*விகாரி ** வைரஸ் )  

வழிமாற்றி நம்வாழ்வை பாடாய்ப்  படுத்தியபின்  

வீரியெழல் சார்வரியில் வீரியம் மிகப்பெருகி 

காரிருளில் நமையாழ்த்தி கொடுமைகள்  பலகொடுத்து 


கீழறையாம் பிலவத்தில் அதன்செறிவும் * சிறிதாகி            *செறிவு = சீற்றம் 

பாழ்நோயின் தாக்கங்கள் கீழிறங்கி இயல்புநிலை

பெற்றே வருகையிலே  முகிலோர வெண்பூச்சாய்    

நற்செய்கை சுபகிருதுவில் நாம்நுழையும் இந்நாளில் 


சென்றசில ஆண்டுகளின் இன்னல்கள் நீங்கிடவும்  

இன்பங்கள் மீண்டும்  நமைவந்து சேர்ந்திடவும்  

நீர்வள ங்கள்பெருகி  நெற்பயிர்கள்   தழைத்திடவும்  

போர்முரச ஒலிகள்இப் பார்விட்டு நீங்கிடவும்  


உற்பத்தி உயர்ந்திடவும்  ஒற்றுமை ஓங்கிடவும் 

தொற்றுநோய்த் தலைவலிகள் சொற்பனமாய் மறைந்திடவும்

கற்றநற்   பாடத்தை   கருத்திலே நிலைநிறுத்தி 

நற்புத்தி நாம்பெற்று நலமோடு வாழ்ந்திடவும் 


நற்செயல்கள் நாள்தோறும் நாம்செய்து சிறந்திடவும்   

கற்கண்டு போலேயிவ் வாண்டு  இனித்திடவும்

விற்குன்றை* வில்லாய் வளைத்திட்ட தற்பரனை           *மேருமலை 

                                                                                                                      **தற்பரன்-பரம்பொருள்    நெற்றிக்கண் நாதனைநாம்   வேண்டியே  தொழுதிடுவோம்..

Apr 5, 2022

குழந்தைப் பேணுநர் ( BABY SITTER )

குழந்தைப் பேணுநர் ( BABY SITTER )

இன்றைய செய்தித்தாளில் நான் கண்ட செய்தி ஒன்று உள்ளத்தைத் தொட்டது.

தாய் தந்தையர் இருவரும் வயல் வேலைக்கு சென்றாலும், தன்  சிறு தம்பியுடன் பள்ளிக்கு வந்து, அவனை அணைத்துப் பேணிய  வண்ணம் கல்வி கற்கும் இந்தச் சிறுமியைப் பாராட்டுவதா அல்லது அவள் கல்வி கெடாத வண்ணம் பள்ளிக்கு அனுப்பிய அவள் பெற்றோரைப் பாராட்டுவதா ? 

அதன் தாக்கத்தில் எழுந்த ஒரு சிறு பாடல் - வெண்பா வடிவில்.

அன்புடன் 

ரமேஷ் 





பாலூட்டும் தாயவளும் தோள்கொடுக்கும் தந்தையுமே 

சாலோட்டச்* சென்றாலும் தான்கற்கும் பள்ளிக்கு  

நூல்நாட்டம் குன்றாது  தம்பியுடன் தான்சென்று

தாலாட்டும் தன்மையினைப் போற்று  

                                                                                                              (இன்னிசை வெண்பா) 

*சாலோட்டுதல்- நிலம் உழுதல் 

Apr 2, 2022

குறள் மேல்வைப்பு வெண்பா - 21

குறள் மேல்வைப்பு வெண்பா - 21

Restarting this series after a long, long gap. Hence I think a small recap on the format will be in order.

குறள்  மேல்வைப்பு வெண்பா  ( the Kural with a story )

Thirukkural is called Tamil Marai - meaning The Vedas in Tamil Language.
It contains 1330  Kurals.  Each Kural ,  as the name implies, is a small poem , in two lines.

The Kurals have a message for us to follow. There are stories of great men and women who have lived true to these messages.

I have taken a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it.

I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope/ Suththaananda Bharathiyar.

The Kural this time depicts the plight of the ill advised Russian war against Ukraine.

Read on !

அன்புடன் 

ரமேஷ் 


திருக்குறள்   50-ம் அதிகாரத்தில்  ( இடனறிதல்)  வரும் குறள் இது.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 

உறைநிலத்தோ தொட்டல் அரிது.

இக்குறளின் பொருள் -

பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே குறள்  கொடுத்த இந்த அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் என்பதற்கு ரஷ்ய-உக்ரேனியப் போரின் இன்றைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டு.

இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு சுத்தானந்த பாரதியார் வார்த்தைகளில் :

To face a foe at home is vain
Though fort and status are not fine.        499

இக்குறளை ஈற்றடிகளாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு பலவிகற்ப இன்னிசை வெண்பா இதோ!



உக்ரேன்மேல் போர்தொடுத்த ரஷ்யப் பெரும்படைகள் 

திக்குமுக் காடுவதைக் காணுகிறோம் இன்று! 

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 

உறைநிலத்தோ தொட்டல் அரிது.