Search This Blog

Apr 19, 2022

(புதுக்) கவிதைப் பெண்


(புதுக்) கவிதைப் பெண்




வெண்பட்டு ஆடை உடுத்தோர்  

-----கன்னியென் கனவில் வந்தாள் 

சின்னவோர் சிரிப்பைச் சிந்தி 

-----காதலைச் சொல்லிச் சென்றாள் 


தினம்தினம்  இரவில்  தோன்றி

-----மனதினை வாட்டு கின்றாள்

உறக்கத்தைத் துறக்கச் செய்து

-----கிறக்கத்தை ஊட்டு கின்றாள்


எதுகை எழிலாடை போர்த்தி

-----மோனைமுகப் பொட்டை இட்டு

பதுமையவள் வளைக் கரத்தில்

-----தளைகளைச் சீராய்ச் சேர்த்தேன்


"வந்தெந்தன் கனவில் மட்டும்

----தோன்றியே மறையும் உன்னை 

சந்திப்ப தெப்போ " தென்றேன்

-----"சிந்தித்துச் சொல்வேன்" என்றாள்


மறுநாளே மீண்டும் வந்தாள்

----- முகத்திலே முறுவல் நீக்கி. 

"வருத்தமேன் பெண்ணே" என்றேன்

-----"உறுத்துதென் உடைகள்" என்றாள்.


"ஆடையும் பொட்டும் வேறு

-----ஆபரணம் கூட எதற்கு

கூடிநாம் இருவர் மட்டும்

-----கனவிலே களிக்கும் போது"


என்றவள் சொன்ன தாலே

----- எதுகையை எடுத் தெறிந்தேன்.

இலக்கணத் தளைகள் விலக்கி

-----புதுக்கவிதை படைக்கப் போனேன்!.


அன்புடன் 

ரமேஷ் 








4 comments:

  1. ஐயா
    மோனையை மட்டும் விட்டு வைத்தீரே.
    மரபு கவிதையை விட்டு புதுக் கவிதைக்குள் புகுந்து விளையாடும்.
    அருமையான படைப்பு.

    ReplyDelete