Search This Blog

Apr 13, 2022

சுபகிருது ஆண்டு வரவு

சுபகிருது  ஆண்டு வரவு 

"தமிழ் ஆண்டு" என்று நாம் கூறினாலும்,சாதாரணமாக நாம் பயன்படுத்தும்  ஆண்டுப்பெயர்கள் வடமொழிச் சொற்களாகவே இருக்கும். ஆனால் அனைத்து அறுபது ஆண்டுகளுக்கும் தமிழ்ப்பெயர்கள் உண்டு. உதாரணமாக சென்ற சில ஆண்டுகளின் பெயர்கள் வருமாறு- 

விகாரி = எழில்மாறல் ; சார்வரி= வீரியெழல் ; பிலவம் = கீழறை :       சுபகிருது =நற்செய்கை 

வருகின்ற தமிழாண்டை வரவேற்கும் இப்பாடலில் மேற்கூறிய தமிழ்ப்பெயர்களை பயன்படுத்தி இருக்கிறேன்!

வரும் "நற்செய்கை" ஆண்டில் "நற்செய்கைகளைச் செய்வோம்" என்ற உறுதி பூண்டு , புத்தாண்டை வரவேற்போம்!

வாழ்த்துக்களுடன் 

ரமேஷ்  


சுபகிருது  ஆண்டு வரவு 





எழில்மாறல்* தமிழாண்டில் உட்புகுந்த தீநுண்மி**             (*விகாரி ** வைரஸ் )  

வழிமாற்றி நம்வாழ்வை பாடாய்ப்  படுத்தியபின்  

வீரியெழல் சார்வரியில் வீரியம் மிகப்பெருகி 

காரிருளில் நமையாழ்த்தி கொடுமைகள்  பலகொடுத்து 


கீழறையாம் பிலவத்தில் அதன்செறிவும் * சிறிதாகி            *செறிவு = சீற்றம் 

பாழ்நோயின் தாக்கங்கள் கீழிறங்கி இயல்புநிலை

பெற்றே வருகையிலே  முகிலோர வெண்பூச்சாய்    

நற்செய்கை சுபகிருதுவில் நாம்நுழையும் இந்நாளில் 


சென்றசில ஆண்டுகளின் இன்னல்கள் நீங்கிடவும்  

இன்பங்கள் மீண்டும்  நமைவந்து சேர்ந்திடவும்  

நீர்வள ங்கள்பெருகி  நெற்பயிர்கள்   தழைத்திடவும்  

போர்முரச ஒலிகள்இப் பார்விட்டு நீங்கிடவும்  


உற்பத்தி உயர்ந்திடவும்  ஒற்றுமை ஓங்கிடவும் 

தொற்றுநோய்த் தலைவலிகள் சொற்பனமாய் மறைந்திடவும்

கற்றநற்   பாடத்தை   கருத்திலே நிலைநிறுத்தி 

நற்புத்தி நாம்பெற்று நலமோடு வாழ்ந்திடவும் 


நற்செயல்கள் நாள்தோறும் நாம்செய்து சிறந்திடவும்   

கற்கண்டு போலேயிவ் வாண்டு  இனித்திடவும்

விற்குன்றை* வில்லாய் வளைத்திட்ட தற்பரனை           *மேருமலை 

                                                                                                                      **தற்பரன்-பரம்பொருள்    நெற்றிக்கண் நாதனைநாம்   வேண்டியே  தொழுதிடுவோம்..

5 comments:

  1. வடமொழிச் சொல்லுக்கு நல்ல தமிழ்ப் பெயரை மொழி மாற்றம் செய்து தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் நல்லதொரு கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Excellent as usual and timely
    Sunder

    ReplyDelete
  3. ஐயா
    கவிதையில் நலன்களை எடுத்தியம்பி புலன்களுக்கு சித்திரை திருநாளில் விருந்து அளித்து உள்ளீர்.அருமை.

    ReplyDelete
  4. Excellent! Learning lot of Tamil words through your poem.

    ReplyDelete