Search This Blog

Jul 28, 2017

முப்பெரும் பெண் தெய்வங்கள்

சென்ற வாரம் பதிப்பித்திருந்த "பிரம்மா, விஷ்ணு, பரமசிவன் பற்றிய குழந்தைகளுக்கான பாடலைப் பற்றி கருத்துத் தெரிவிவித்து இருந்தவர்களுக்கும், படித்துப் பாராட்டியவர்களுக்கும்  நன்றி.
முப்பெரும் ஆண் தெய்வங்கள் பற்றிய பதிப்பைத்  தொடர்ந்து , அவர்களின் துணைவியராகவும், சக்தியின் மூன்று வடிவங்களாகவும் இருக்கும் முப்பெரும் பெண் தெய்வங்களான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி பற்றிய ஒரு சிறு பாடல் - குழந்தைகளுக்காக.

அன்புடன்
ரமேஷ்






முப்பெரும் பெண் தெய்வங்கள்




ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அம்மா
அப்பா பின்னே  இருப்பதுபோல்
சிவன் பிரம்மா திருமால் பின்னே
சக்தி ஒருவள் இருக்கின்றாள்.


 





சக்திக்கு உருவம் மூன்றுண்டு-  அவை
சரஸ்வதி,பார்வதி,லட்சுமியென்பார் .
பக்தியுடன் தினம் இருவேளை - அவள்
பாதம் தொழுது பயனுறுவோம்.                        








கலைமகள் என்று பெயர்கொண்டு- ஆய
கலைகளை அளித்தவள் சரஸ்வதியே!
விலைமதிப் பில்லாப் பொருளான- கல்வி  
அறிவினை  அருள்வது அவள்தானே!








பார்வதி என்பவள் மலைமகளாம்- அவள்
வீரத் திற்கே  உறைவிடமாம்.
யாரெவர் நம்மை எதிர்த்தாலும்- நாம்
அவளருள் இருந்தால் வென்றிடுவோம்









திருமகள் என்னும்  லட்சுமியே   - நற்
செல்வம் நமக்கு அருள்பவளாம் .
பொருளும் பொன்னும் குறைவின்றி - தன்னைத்
தொழுவோர்க் கெல்லாம்  அளித்திடுவாள்.                  







இந்த மூவரையும்  அனுதினமும்-நாம்
வந்தனை செய்து வழிபட்டால்
வந்தடையும்  நம் அனைவரையும்- உயர் 
கல்வியும் செல்வமும் வெற்றிகளும் .






























.

Jul 21, 2017

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------

சென்ற சில நாட்களில் வந்த செய்தித்தாள் தலைப்புச் செய்திகள்: வாசிப்பது -------


1. எம்.எல்.ஏ சம்பளங்கள் இரண்டு மடங்காக உயர்வு.
2. நிதிநிலைமை மோசமானதால் அம்மா உணவகங்கள் குறைப்பு.
3. சசிகலாவுக்கு சிறையில் தனி சமையலறை/சமையலாட்கள் 
4. தமிழ்நாட்டில் பெண்குழந்தை/ஆண்குழந்தை விகிதாச்சாரம் குறைந்து 911: 1000 என்ற நிலைமை.
5.தமிழ் நாட்டில்  கொசுத்தொல்லை; டெங்கு பரவும் அபாயம்.
6. மருத்துவமனையில் லஞ்சத் தொல்லை: இறந்தவரின் சடலங்களை எடுத்துக்கொள்ளக் கூட , உறவினர்களிடம் பணம் பிடுங்கும் அவலம்.
7. சாராயக்  கடைகளை மூடக்கோரி பெண்கள் நடத்தும் போராட்டத்தில் தடியடி.
8. தமிழ்நாட்டில் 2016ம் ஆண்டு செய்யப்பட முதலீடுகள் அகில இந்திய முதலீடுகளில் 2.1% மட்டுமே!

இவை பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 


செய்திகள் - வாசிப்பது --------

எம்எல்ஏ     சம்பளத்தை    இரட்டிப்பு    செய்கிறார்
அவர்செய்யும்    ஊழல்களை     இருட்டடிப்பு    செய்கிறார்.
அம்மா    உணவகங்கள்    நடத்துவதை    நிறுத்துறார்
சின்னம்மா   உணவகங்கள்    சிறையில்கூட    அமைக்கிறார்.

பசுவதையைப்    பற்றியிவர்    பார்லிமென்டில்   பேசுறார்- பெண்
சிசுவதையை    தமிழ்நாட்டில்    தடுப்பதை    விடுக்கிறார்.
கொசுவதையைக்    கூடஇவர்   சரியாய்ச்    செய்யாததால்
விசுவரூப   மாய்டெங்கு    காய்ச்சல்   எடுக்குமோ?

இந்தியா    முழுதுமான     முதலீட்டுக்    கணக்கிலே
வந்தபணம்    இரண்டே    இரண்டுவிழுக்   காடுதான்.
நான்எனக்கு   என்பதையே    தலைவர்கள்   நினைப்பதால் 
டீஎன்னுக்கு*    இவ்வளவே     கிடைத்ததிலோர்     வியப்புண்டோ? (*TN- Tamil Nadu) 

ஆசுபத்திரி    சேவைக்கும்    காசுபணம்   கறக்குறார். 
டாசுமாக்கில்     சாராயம்   ஊத்திஊத்திக்   கொடுக்கிறார்.
பேசுபுக்கில்    பலருமிவரை     ஊத்திஊத்திக்   கழுவுறார்*.
பாசுமார்க்    கூடஆட்சிப்    பரிட்சையிலே   வாங்கலே !



*- "ஊத்திக் கழுவுதல்" என்ற இந்த வார்த்தைப் பிரயோகம் எனக்கும் புதியதே. எந்த ஒரு அகராதியிலும் இதற்குப் பொருள் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால், ஊடகங்கள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் இவைகளிருந்து நான் கற்றுக்கொண்டது இது.
"ஒருவருக்குள்ளிருக்கும் குறைகளை  அலசி வெளியே எல்லோருக்கும் தெரியும்படி செய்வது" என்பது என் புரிதல். இந்தப் பொருளில்தான் இதை பயன்படுத்தி  இருக்கிறேன்.



Jul 17, 2017

பிரம்மா விஷ்ணு சிவன்

பிரம்மா விஷ்ணு சிவன் 

என்னுடைய பேரக்  குழந்தைகள்  மூன்று பேர் சென்னை வந்து  இன்று முதல்  எங்களுடன் சென்னையில் சில வாரங்கள்  தங்கப் போகிறார்கள்.  அதைக் கொண்டாடும் வகையில் குழந்தைகளுக்கான ஒரு பாட்டு.

பெரியவளுக்கு ஐந்து வயது. சாதாரணமாக இந்த வயதுக் குழந்தைகளுக்கு நாம் கற்பிப்பது  அர்த்தம் புரியாத சமஸ்க்ருத ஸ்லோகங்கள் அல்லது அர்த்தம் இல்லாத ஆங்கில nursery rhymes .

குழந்தைகளுக்கு புரியும் படி பாடல்களை எழுதி , கற்பித்து , அவர்கள் மனதில் நம் கலாச்சாரத்தைப் பற்றிய கதைகளையும் நல்ல கருத்துக்களையும்  பதிக்க வேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.

அந்த ஆசையில் விளைந்த ஒரு பாடல் இது.

இது குழந்தைகளுக்குப் புரியுமா, அல்லது இன்னும் எளிதான நடையில் இருக்க வேண்டுமா ? 

உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்! ஏதாவது திருத்தங்கள் தோன்றினாலும் சொல்லுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 

பி.கு. : இதையே ஆங்கிலத்திலும் எழுதி இருக்கிறேன். அதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

பி.பி.கு : இந்தப் பாடலைப் பதித்த பிறகு, நண்பர் ராம. கிருஷ்ணன் கூறிய திருத்தங்களை ஏற்று மாறுதல்களை செய்திருக்கிறேன்.





மூன்று தெய்வங்கள்



பிரம்மா விஷ்ணு சிவன்என்று  
          பெரிய தெய்வங்கள் மூன்றுண்டு.                       
கரங்கள் கூப்பி அம்மூவரையும்
          காலையும் மாலையும் வணங்கிடுவோம்.






நான்கு முகமுடை பிரம்மனோ 
          நான்கு வேதங்கள் தந்தவராம்.  
அண்ட சரங்கள்  அத்தனையும்          
          ஆக்கிப் படைப்பது அவர்தொழிலாம்.






பாலாங் கடலில்   பாம்பின் மேல்                                    
          படுத்துப்  பள்ளி கொண்டிருக்கும்
மாலெனும்   பெயர்கொண்ட விஷ்ணுவுமே 
            மகிழ்ந்து நம்மைக் காத்திடு வார்.






சிவனுக்கு மூன்று கண்ணென்பார்                               
           சிவந்து பரந்த நெடுந்தோற்றம் 
தவறுகள் செய்யும் துட்டர்களை 
            நெற்றிக்  கண்ணால்   எரித்திடுவார்.





படைத்தல், காத்தல், அழித்தலையே   
            பாரில் மக்கள் உய்யுறவே    
இடை விடாமல் செய்பவரை
            என்றும் வணங்கி நலமடைவோம்.












Jul 14, 2017

கப்பலா கவிழ்ந்து போச்சு?

கப்பலா கவிழ்ந்து போச்சு?

ஒருவர் கவலையுடன் இருக்கும்போது அவரை நோக்கி கேட்கப்படும் கேள்வி - ' ஏன் இப்படி இருக்கே? கப்பலா கவிழ்ந்து போச்சு?".
கடலில் செல்லும் கப்பல், புயல் அடித்தாலும், கடல் கொந்தளித்தாலும்
கவிழுவதில்லை - அதனுள்  தண்ணீர்  புகும் வரை.
அமைதியான கடலானாலும் , ஒரு சிறு ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே வந்தால் கவிழுவது நிச்சயம்!
அதுபோலவே, கவலைகளை உள்ளே விடாத வரையில், மனதும் செயலும் தெளிவாக இருக்கும்!
கவலைகளை உள்ளே விட்டால் --- கவிழ்ந்த கப்பல் கதைதான்!

அன்புடன்

ரமேஷ்

கப்பல்

அகண்டு விரிந்த ஆழிக் கடல்மேல்
---------அனைத்து திசையிலும் அலைகள் அணைக்க
சுகமாய் மிதந்து செல்லும் கப்பல்---
----------வெளியுள உவர்நீர் உட்புகும் வரையில் !

நீருட் புகும்  வரை நேராய்ச் செல்லும் 

------------கப்பலின்  சுவரில் தப்பெதும்  நேர்ந்து 
தவறியும் உவர்நீர் உட்புக நேரின் 
------------கப்பலும் கவிழும்; கடலுள் முழுகும் 

அதுபோல்

சுழலும் உலகில் உழலும்நம் வாழ்க்கைக் 

------------கப்பலின் வெளியே கவலை அலைகள் 
சூழ்ந்து அடிக்கையில் திடமாய் நின்று 
------------மனத்துள் கவலையின் திவலைகள் கூட 

உட்புகு தலையே தடுத்தோ மாயின் 

------------தெளிவாய்ச் செயல்படும் மூளையும் மனமும்.
செய்திறம் சிறக்கும்; சிந்தனை செழிக்கும்.   
------------வாழ்க்கைக் கப்பல்  வளமாய் விரையும்.







Jul 8, 2017

செயற்கை

இயந்திர கதியில் செல்லும் இன்றைய வாழ்க்கையில் உடலும், உள்ளமும் இயற்கையை விடுத்து செயற்கைக்கு அடிமை ஆகி விட்டன!

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 

செயற்கை


புரை விழுந்த*  கண்ணில்       திரைவிழுந்த பார்வை-        *cataract
சரிசெய்ய  அதையே     விழிவில்லை* அணிந்தோம்..        * artificial lens
கேட்கின்ற ஆற்றலை      காதுகள்  இழக்க
மீட்க அப்புலனை     செவித்துணை* அணிந்தோம்               * hearing aid

மைய்யெனக் கருத்த    முடிகொட்டிப் போக
பொய்  மயிர்த் தோகை*      போட்டதை மறைத்தோம்.          * wig
பல்லெலாம் உதிர்ந்து      சொல்குளறும் பொது
கட்டுப்பல் வரிசை*      கட்டிச்சரி செய்தோம்.                            *artificial dentures


கால்சியம்  சத்து      குறைவான  தாலே
கால்கை எலும்புகள்      பலவீன மாக
கீழே விழுந்துடைந்த      காலெலும்பைக் சேர்க்க
டைட்டானி*  யத்தில்       தகடுகள் புதைத்தோம் .                     * titanium

துடிக்கும்  இதயத்தின்       ஆற்றலைத் தூண்டி
முடுக்கும்  கருவியை*        மேல்வைத்துத் தைத்தோம் .          * pace maker
மூட்டுகள் தேய்ந்து       வலிவந்த தாலே
முட்டிகளை மாற்றி      புதிதாக வைத்தோம் .

பாதிக்கு மேலான       இயற்கை உறுப்பு
பாதிப்புக் குள்ளாகி       செயற்கையாய்ப்  போச்சு
இதனால் தானோ      இன்றுநம்  முகத்தின்
உதட்டுச் சிரிப்பும்      உயிரற்ற  பூச்சு!

சந்தனமும்  நீறும்     நெற்றியில் பூசி
வந்தனம் இறைவனை      செய்திடும் வேளை
சிந்தனைகள்  சிதறி       எங்கெங்கோ செல்ல
செய்யும் தொழுகைச்      செயல்களும்  செயற்கை.

வண்ணங்கள்  மட்டும்       உடல்மேலே   ஏற்றி
வாசனை  விடுத்த       காகிதப் பூப்போல்
எண்ணிச் செய்கின்ற        ஈடுபா  டின்றிநாம்
செய்யும் செயல்கள்      அனைத்துமே  செயற்கை

இயற்கையோ டுறவுகள்        முற்றும்  முறிந்து
செயல்களும்  சிந்தனையும்       செயற்கையாய்ப் போச்சே!
இந்நிலைமை மாறி       உடலோடு மனமும்
நன்னிலைமை அடையும்      நாளென்று வருமோ?