Search This Blog

Jan 28, 2017

முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி

முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி


வாழ்க்கையின் சில அனுபவங்கள் சுகமானவை. 

அனுபவிக்கும்போது மட்டுமன்றி, திரும்பத் திரும்ப நினைத்து ஆனந்தப்பட்டு வைக்கின்ற அனுபவங்கள்.

இது போன்ற அனுபவங்கள்  எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். 

இவற்றை நேரிலோ, நினைவிலோ அனுபவிக்கையில், நம்மை அறியாமல் முகத்தில் ஓர் புன்னகை பூக்கும். மட்டற்ற  ஓர் மகிழ்ச்சியும், மன அமைதியும்   நம்மை வந்தடையும். 

வாழ்வில் ஏற்படும்  அனுபவங்களில் , சில (பல?) கசப்பானவைகளாவும் இருக்கும். கசப்பானவற்றைப் பற்றியே நினைத்து உழலுவது மனித இயல்பு. 

ஆனால் இதை விடுத்து நம்மை மகிழ்ச்சி அடையச் செய்த தருணங்களையே நினைத்தால்  ...............

 இது பற்றி ஒரு கவிதை!

அன்புடன் 
ரமேஷ் 



முகத்தில் முறுவல் ;அகத்தில் அமைதி



இதழை விரித்து மலரும் பூவின்
மடலின் நுனியில் முத்தாய்  மிளிரும்
பனியின் திவலைத் துளியில்  பட்டு
தெறிக்கும் எழுநிறக் கலவையைக் காண்கையில்
                   முகத்தில் முறுவல்
                   அகத்தில் அமைதி




மடலின் நுனியில் பனித்துளி மிளிர
இதழை விரித்து மலரும் பூக்கள்  
மக ரந்தசுகந்த  மணத்தைப்   பரப்ப
நுகர்ந்ததை நாசியும் சுகமாய் விரிகையில்
                   முகத்தில் முறுவல்  .                
                   அகத்தில் அமைதி 



பொலபொல பொலவெனக் காலை விடிய 
சிலுசிலு சிலுவெனக் காற்றும் வீச 
கருகரு மேகம் பன்னீர் தெளிக்கும் 
சிறுசிறு துளிகள் முகத்தில் விழுகையில்  
                     முகத்தில் முறுவல் 
                     அகத்தில் அமைதி 


இருகை தூக்கி சிறுகால் உதைத்து 
கருவிழி இரண்டிலும் முறுவலை ஏற்றி 
கன்னம் குழிவிழ குமிழிதழ் விரித்து 
சின்னக் குழந்தை சிரிப்பதைப்  பார்க்கையில் 
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில் அமைதி  
       
        
துயிலைக் கலைத்து தூக்கம் துறக்கையில் 
வெயிலின் வெளிச்சம் விளிம்பில் இருக்கையில் 
குயிலின் குக்கூ கூவலின் கூட 
புள்ளினம் பாடும் பாடல்கள்  கேட்கையில்
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில் அமைதி 



ஐந்து நட்சத்திர விடுதி களிலே  
அறுசுவை உண்டி உண்பதை விடவே 
பாசம் கலந்த பழந்தயிர் சோற்றைப்  
பசிக்கும் வேளையில் பகிர்ந்துண் ணுகையில்  
                        முகத்தில் முறுவல் 
                        அகத்தில்  அமைதி.

சுவை, ஒளி ,ஊறு,  ஓசை,  நாற்றம் 
இவ்வைம் புலன்கள்  இயக்கும்  இவ்வாழ்வே  
இயந்திர கதியில்  இடைவெளி யின்றி 
இயங்கிடும் ; அதிலுள அனுபவங் களிலே  
இனிதாய் இருக்கும் அனுபவம் பலவாம் ;
நினைத்து  அவற்றை நிறுத்தி மனதினில் 
முகத்தில் என்றும் முறுவல்  பதித்தும்  
அகத்தில் அமைதியை  அணிந்தும் வாழ்வோம். 


அன்புடன் 

ரமேஷ் (கனித்தோட்டம்)
www.kanithottam.blogspot.com





Jan 23, 2017

ஜல்லிக்கட்டு செய்திகள் - 2 பின்னே திரும்பிய பன்னீர் செல்வம்

ஜல்லிக்கட்டு செய்திகள் - 2

நேற்றைய நிகழ்வு 

அன்புடன் 

ரமேஷ் 

பின்னே திரும்பிய   பன்னீர் செல்வம்

ஜல்லிக் கட்டுப் போட்டியைக் காக்க 
அள்ளித்  தெளித்த கோலம் போல 
அவசரச்  சட்டம் அரசு போட்டதில்  
தவறுகள் பலவும் இருக்குது என்று
அணங்கா நல்லூர் மக்கள் அதற்கு 
இணங்கா திருந்து  எதிர்த்த தனாலே  
மதுரை சென்ற முதல் அமைச்சரும்   
முதுகைக் காட்டி திரும்ப லாச்சுதே!

ஜல்லிக்கட்டுப் பாடல்கள் -1


ஜல்லிக்கட்டுப் பாடல்கள்  -1

செய்தி :
ஜல்லிக்கட்டை ஆதரித்தும், தடையை விலக்கப் கோரியும், சென்ற ஆறு நாட்களாக மெரினா கடற்கரையில் பல்வேறு தரப்பான மக்கள் குழுமி போராட்டம் நடத்துகிறார்கள்.

அன்புடன்

ரமேஷ்

துள்ளிக் குதித்தோடும்  காளை யுடனாடும்
சல்லிக்கட் டென்ற  மரபு  விளையாட்டை
கிள்ளிய கீரையென  தள்ளித் தடைசெய்த
கள்ளத்தைப் போட்டே  உடை.                                                   1.

சல்லிக்கட்  டைக்காக்க  வேற்றுமைகள்  பாராமல்
வெள்ளப் பெருக்கென  விரைந்தோடி  வந்திங்கே
எள்விழவும் இடமின்றி கடற்கரையை நிறைத்திட்ட
நல்லுள்ளத் தமிழர்க்கு நன்றி.                                                     2. 





Jan 21, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் - செய்யுள் 8

ஈசாவாஸ்ய உபநிஷத் -  செய்யுள் 8

இந்த எட்டாவது செய்யுள் , ஆன்ம அனுபூதி அடைந்தவனின் அனுபவத்தை விளக்குகிறது.
இந்தச் செய்யுளுக்கு, சற்றே வேறான இரு விளக்கங்களை நான் படித்தேன். ஆனால் இந்தப் பதிவில், பொருளும், அதைத் தொடரும் பாடலும், ராமகிருஷ்ண மடத்தின் வெளியீட்டைப் பின் பற்றி உள்ளன.

அன்புடன்

ரமேஷ்
           
8            ஸ பர்யகாச்சுக்ரமகாயமவ்ரணம் 
                        அஸ்னாவிரகம் சுத்தமபாபவித்தம் I 
               கவிர்மனீஷீ பரிபூ: ஸ்வயம்பூர் யாதாதத்யதோஅர்தான் 
                         வ்யததாச் சாச்வதீப்ய: ஸமாப்ய:    II
பொருள் 

ஆன்ம அனுபூதி பெற்றவன் , அனைத்தின் ;உட்பொருளையும் காண்பவன்; மனத்தை   வயப்படுத்தியவன்;  எல்லா அறிவையும் உள்ளடக்கியவன்; யாரையும் சாராதவன்; அனைத்துப் பொருள்களின் உண்மை இயல்பை அறிந்தவன்; அவன் உடம்பற்ற, தசைகள் இல்லாத, தூய , பாபமற்ற இறைவனை அடைகிறான்.


பாடல் 

மொத்தமாய் சித்தம் வசப்படுத்தி
----------அனைத்தின் உட்பொருள் தனையுணர்ந்து
எதனையும் எவரையும் சாராமல்
----------இறைநெறி அறிவினை உள்ளடக்கி
ஆத்தும அனுபூதி யைப்பெற்றால்
----------அதன்பின் அறிவதற்  கேதுமுண்டோ?'
உடலுறு தசையென் பெதுவுமிலா
----------ஒளிமிகு தேசனைச் சென்றடைவர்..

English  Translation

One who has achieved complete realisation ,
that person is able to reach Him ,
the one who is  All pervasive,
Pure, Bodiless, Taintless, Untouched by sin,
Immanent and Transcendent.



Jan 13, 2017

பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !


பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !

போகியன்று அதிகாலை எப்போதும்போல நடக்கச் செல்லும்போது தெருக்கள் முழுதும் பெரிய புகை மண்டலம் சூழ்ந்திருக்கக் கண்டேன். எதிரே பத்தடிக்குப் முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கண்களோ எரியத்  தொடங்கிவிட்டன! பிறகென்ன? வெற்றிகரமாக வாபஸ் வாங்கி வீடு திரும்பினேன்!

அதிகாலையிலேயே இப்படி! இன்னும் போகப் போக என்ன ஆகும்? 

வார்தா புயலில் விழுந்த மரங்களின் கிளைகளும் இலைச்சருகுகள்  இன்னும் அகற்றப்படாமல் ஒரு மூலையில் குவித்து விடப்பட்டு இருக்கின்றன.  "இவைகளைக்  கூட , விளையாட்டுக்காக போகியன்று  யாரவது எரித்துவிடக்  கூடும்" என்ற பேச்சும் அடிபடுகிறது. 

இப்படி ஆனால்  சென்னை தாங்குமா? புகையில் மூழ்கிவிடுமே ! பொங்கலை இது எப்படிப் பாதிக்கும்? காலையில் சூரியனுக்கு பொங்கலைப்  படைத்து வழிபடவேண்டுமே ? இந்தப் புகைமூட்டத்தில் சூரியனைப் பார்க்க முடியாவிட்டால்? இது  போன்ற கற்பனைகளுடன்  சேர்த்து  ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதை! 

வாழ்த்துக்கள்!

அன்புடன் 

ரமேஷ் 


பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !

திங்கள்  தையின் மங்கள முதல்நாள் 
பொங்கல் பானை பொங்கிய பின்னே 
பொங்கல் சோற்றை ஞாயிறுக் களிக்க 
எங்கள் வீட்டு மாடிக்குச் சென்றால் -------

நேற்றுக் கொளுத்திய குப்பையில் எழுந்து 
காற்றில் கலையா போகிப் புகையோ 
எங்கும் சூழ்ந்து பார்வையைத் திரையிட 
மங்கிய வானம் மெலிதாய்த் தெரிய 

கங்குல்  மறைந்தால்  கங்கென உதித்து 
செங்கதி ரொளியை  பரப்பும் ஞாயிறைக் 
எங்கு தேடியும் காண வில்லையே !
பொங்கலை அவனுக் கெங்கனம்  படைப்பேன்?

எனினும் இந்நாள் உங்கட் கெல்லாம் 
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரைப்பேன்.
மனிதர், மாடுகள், நெற்கதிர் வயல்கள் 
இனிதே இவைகள் நலம்பெற வாழ்த்து. 

கருநாடகத்தில் கனமழை பொழிந்து 
காவிரி நிரம்பி ஓடிட வாழ்த்து.
திராவிட மக்கள் தடியடி இன்றி 
நீரைப் பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்து.

ஏரைப் பிடிக்கும் உழவர் எல்லாம் 
டிராக்டர்* களுக்கு மாறிட வாழ்த்து                                       * Tractor 
"ஸ்மார்ட்போன்*    ஆப்"பால்  சந்தையில் நெல்லை       * smartphone app 
தாமே நேராய்  விற்றிட வாழ்த்து.

ஜல்லிக் கட்டு ஆட்டத்  தடையை 
சடுதியில் கோர்ட்டுகள் நீக்கிட வாழ்த்து 
துள்ளி அதில் ஓடும் காளைகட் கெல்லாம் 
அடிகள்  படாமல் அமைந்திட வாழ்த்திடு. 

கடைசியாக

"வாழ்த்துக்கள் " என்றுசொல்லி வாயார வாழ்த்திடாமல்  
"வால்த்துக்கல்  " என்றுசொல்லி   வார்த்தையைக்   கொல்லும்பலரும்   
நாக்கினை நன்குவளைத்து   மேலண்ணம்* தன்னைத்தொட்டு         
வாக்குசுத்த மாகப்பொங்கல்  வாழ்த்துக்கள் சொல்லிடவாழ்த்து.

பொங்குக பொங்கல் ! பொங்குக பொங்கல் !
தங்குக எங்கும் பொங்கும் மங்களம்! 


* மேலண்ணம்=roof of the mouth





Jan 10, 2017

ஞானம் தேடாத மனித வாழ்வு -----

இன்று பிரதோஷம்.
சிவபிரானுக்கு உகந்த இந்த நாளன்று , ஞானம் தேடலில் ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்

ஞானம் தேடாத மனித வாழ்வு -----

ஓடாத கடிகாரம்,  பாடாத இசைப் பாட்டு
மணமற்ற  காகித மலர்
ஆடாத ஊஞ்சல், மீட்டாத  வீணை - நெறி
காட்டாத ஏட்டுக் கல்வி

சொல்லாத காதல், செல்லாத காசு -கல்வி
கல்லாமல் கழிந்த  இளமை- பூசைக்கு
கிள்ளாத பூக்கள் ,  மெல்லாத உணவு  - அன்பு
இல்லாத வாழ்க்கைத் துணைகள்

நீரற்ற ஊருணி , நீறற்ற நெற்றி- ஒளி
சேர்க்காத கை  விளக்கு- நடம்
ஆடாத அரங்கிவை  போலவே  - ஞானத்தைத்
தேடாத மனித வாழ்வும்  

பயனற்று வீணாகப்  போகும் அதனாலே
பவபயம் நீக்க வேண்டி- அன்னை
சிவகாமிக் கிடப்பக்கம் இடம்தந்தோன் சேவடியைப்
பற்றியே வணங்கு வோமே!













Jan 7, 2017

ஈசாவாஸ்ய உபநிஷத் செய்யுள் - 6 & 7


ஈசாவாஸ்ய உபநிஷத் செய்யுள் - 6 & 7

இந்த இரண்டு செய்யுள்களும்  , தன்னிலும் , பிற எல்லா உயிர்களிலும் நிறைந்திருக்கும் ஆன்மா  ஒன்றேதான் என்பதை உணர்ந்தவனின் மனோபாவத்தையும், அவன் வாழ்க்கையை எவ்வாறு எதிர் கொள்ளுகிறான் என்பதையும் விளக்குகின்றன.

இந்த இரண்டு ஸ்லோகங்களும் , மொழிபெயர்ப்புடனும், தமிழக கவிதை வடிவிலும் !

அன்புடன் 

ரமேஷ் 


யஸ்து ஸர்வாணி பூதான்-யாத்மன்-யேவானு பச்யதி
ஸர்வபூதேஷு சாத்மானம் , ததோ ந விஜுகுப்ஸதே .                     6

யஸ்மின் ஸர்வாணி  பூதான்- யாத்மைவாபூத் விஜானத :
தத்ர கோ மோஹ: க: சோக ஏகத்வ-மனுபச்யத:                                  7


Translation**

Those who see all creatures in themselves
And themselves in all creatures know no fear.


Those who see all creatures in themselves
And themselves in all creatures know no grief.
How can the multiplicity of life
Delude the one who sees its unity?

மொழிபெயர்ப்பு *

யார் எல்லா உயிர் இனங்களையும் ஆன்மாவிலும்  ( தன்னிலும்), ஆன்மாவை  ( தன்னை) எல்லா உயிரினங்களிலும் காண்கிறானோ , அவன் யாரையும் வெறுப்பதில்லை.

ஆன்மாவே எல்லா உயிரினங்களாகவும் ஆகி இருக்கின்றது என்ற  ஒருமையுணர்வைப் பெறுகின்ற ஒருவனுக்கு மனமயக்கங்களும் , கவலைகளும் இல்லை.

பாடல் 6 & 7

அனைத்து உயிரிலும் ஆன்மாவே .
----------ஆன்மா அனைத்தின் உயிர்வடிவம்.
நினைத்து இதனை உணர்பவர்கள்
----------எதையும் எவரையும் வெறுப்பாரோ?

எல்லா உயிரும் ஒன்றென்ற
----------ஒருமை உணர்வைப் பெற்றாயின்
பொல்லா மயக்கம், மனக்கவலை
----------இல்லாதோடும், இது உண்மை.

பொருள் விளக்கம் :


தன்னிலிருந்து மாறுபட்ட ஒன்றைத்தான்  ஒருவன் தீயது   என்று எண்ணி வெறுப்பான். அனைத்தும் ஒன்றேதான் என்று உணர்ந்தவனுக்கு , மற்றவற்றைப் பற்றிய வெறுப்போ , திரிபுணர்வோ (பொல்லா மயக்கம்), கவலையோ தோன்றுவதற்கு ஏது இடம்?