Search This Blog

Jan 13, 2017

பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !


பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !

போகியன்று அதிகாலை எப்போதும்போல நடக்கச் செல்லும்போது தெருக்கள் முழுதும் பெரிய புகை மண்டலம் சூழ்ந்திருக்கக் கண்டேன். எதிரே பத்தடிக்குப் முன்னால் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. கண்களோ எரியத்  தொடங்கிவிட்டன! பிறகென்ன? வெற்றிகரமாக வாபஸ் வாங்கி வீடு திரும்பினேன்!

அதிகாலையிலேயே இப்படி! இன்னும் போகப் போக என்ன ஆகும்? 

வார்தா புயலில் விழுந்த மரங்களின் கிளைகளும் இலைச்சருகுகள்  இன்னும் அகற்றப்படாமல் ஒரு மூலையில் குவித்து விடப்பட்டு இருக்கின்றன.  "இவைகளைக்  கூட , விளையாட்டுக்காக போகியன்று  யாரவது எரித்துவிடக்  கூடும்" என்ற பேச்சும் அடிபடுகிறது. 

இப்படி ஆனால்  சென்னை தாங்குமா? புகையில் மூழ்கிவிடுமே ! பொங்கலை இது எப்படிப் பாதிக்கும்? காலையில் சூரியனுக்கு பொங்கலைப்  படைத்து வழிபடவேண்டுமே ? இந்தப் புகைமூட்டத்தில் சூரியனைப் பார்க்க முடியாவிட்டால்? இது  போன்ற கற்பனைகளுடன்  சேர்த்து  ஒரு பொங்கல் வாழ்த்துக் கவிதை! 

வாழ்த்துக்கள்!

அன்புடன் 

ரமேஷ் 


பொங்கல் வாழ்த்து (அல்லது) சூரியனைக் காணோம் !

திங்கள்  தையின் மங்கள முதல்நாள் 
பொங்கல் பானை பொங்கிய பின்னே 
பொங்கல் சோற்றை ஞாயிறுக் களிக்க 
எங்கள் வீட்டு மாடிக்குச் சென்றால் -------

நேற்றுக் கொளுத்திய குப்பையில் எழுந்து 
காற்றில் கலையா போகிப் புகையோ 
எங்கும் சூழ்ந்து பார்வையைத் திரையிட 
மங்கிய வானம் மெலிதாய்த் தெரிய 

கங்குல்  மறைந்தால்  கங்கென உதித்து 
செங்கதி ரொளியை  பரப்பும் ஞாயிறைக் 
எங்கு தேடியும் காண வில்லையே !
பொங்கலை அவனுக் கெங்கனம்  படைப்பேன்?

எனினும் இந்நாள் உங்கட் கெல்லாம் 
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரைப்பேன்.
மனிதர், மாடுகள், நெற்கதிர் வயல்கள் 
இனிதே இவைகள் நலம்பெற வாழ்த்து. 

கருநாடகத்தில் கனமழை பொழிந்து 
காவிரி நிரம்பி ஓடிட வாழ்த்து.
திராவிட மக்கள் தடியடி இன்றி 
நீரைப் பகிர்ந்து வாழ்ந்திட வாழ்த்து.

ஏரைப் பிடிக்கும் உழவர் எல்லாம் 
டிராக்டர்* களுக்கு மாறிட வாழ்த்து                                       * Tractor 
"ஸ்மார்ட்போன்*    ஆப்"பால்  சந்தையில் நெல்லை       * smartphone app 
தாமே நேராய்  விற்றிட வாழ்த்து.

ஜல்லிக் கட்டு ஆட்டத்  தடையை 
சடுதியில் கோர்ட்டுகள் நீக்கிட வாழ்த்து 
துள்ளி அதில் ஓடும் காளைகட் கெல்லாம் 
அடிகள்  படாமல் அமைந்திட வாழ்த்திடு. 

கடைசியாக

"வாழ்த்துக்கள் " என்றுசொல்லி வாயார வாழ்த்திடாமல்  
"வால்த்துக்கல்  " என்றுசொல்லி   வார்த்தையைக்   கொல்லும்பலரும்   
நாக்கினை நன்குவளைத்து   மேலண்ணம்* தன்னைத்தொட்டு         
வாக்குசுத்த மாகப்பொங்கல்  வாழ்த்துக்கள் சொல்லிடவாழ்த்து.

பொங்குக பொங்கல் ! பொங்குக பொங்கல் !
தங்குக எங்கும் பொங்கும் மங்களம்! 


* மேலண்ணம்=roof of the mouth





1 comment:

  1. Zhayirai pongalandru kaana Vaazthukal ( adutha naalandro zhayiru) Enjoyed your kavidai

    ReplyDelete