Search This Blog

Jan 10, 2017

ஞானம் தேடாத மனித வாழ்வு -----

இன்று பிரதோஷம்.
சிவபிரானுக்கு உகந்த இந்த நாளன்று , ஞானம் தேடலில் ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்

ஞானம் தேடாத மனித வாழ்வு -----

ஓடாத கடிகாரம்,  பாடாத இசைப் பாட்டு
மணமற்ற  காகித மலர்
ஆடாத ஊஞ்சல், மீட்டாத  வீணை - நெறி
காட்டாத ஏட்டுக் கல்வி

சொல்லாத காதல், செல்லாத காசு -கல்வி
கல்லாமல் கழிந்த  இளமை- பூசைக்கு
கிள்ளாத பூக்கள் ,  மெல்லாத உணவு  - அன்பு
இல்லாத வாழ்க்கைத் துணைகள்

நீரற்ற ஊருணி , நீறற்ற நெற்றி- ஒளி
சேர்க்காத கை  விளக்கு- நடம்
ஆடாத அரங்கிவை  போலவே  - ஞானத்தைத்
தேடாத மனித வாழ்வும்  

பயனற்று வீணாகப்  போகும் அதனாலே
பவபயம் நீக்க வேண்டி- அன்னை
சிவகாமிக் கிடப்பக்கம் இடம்தந்தோன் சேவடியைப்
பற்றியே வணங்கு வோமே!













8 comments:

  1. Superb Ramesh.Words fail me when I want to compliment your scholarship.
    God bless you!

    ReplyDelete
  2. படிட்த்தோம பற்றினோம் ஞான மார்கத்தை

    கல்லாத கழிந்த அல்லது கழித்த இளமையா? அது போல் வாழ்க்கை துணைகளா அல்லது துணைவிகளா ? விளக்கம் தேவை நண்பா

    ReplyDelete
  3. நண்பரே,
    கழித்த , கழிந்த இரண்டும் சரியே. கழிந்த என்பது இளமைக்கு உரிச்சொல். கழித்த என்பது செய்தவருக்கு உரிச்சொல்.
    துணை என்று எழுதியதால் அது இரு பலரின் துணைக்கும் பொருந்தும்.

    ReplyDelete

  4. Excellent poem. Impressed with your writings.

    ReplyDelete
  5. மிக எளிமையாக , கருத்து ஆழத்துடன் அமைந்துள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. விவேக சிந்தாமணியை நினைவூட்டும் பாடல்.
    "ஆபத்துக் குதவா நண்பன்
    அரும்பசி தீர்க்கா அன்னம்
    பாபத்தை போக்கா பன்னீர்
    பசிப்பணி தீர்க்கா மன்னன்
    தாகத்தை தீர்க்கா தண்ணீர்
    தரித்திரம் அறியாப் பெண்டிர்.......
    ...................:.....,,,,,...
    பயனில்லை ஏழுந்தானே!"

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நம்பி.
      இது போன்று பழம் தமிழ்ப் படல்களை மேற்கோள் காட்டி கொடுக்கப்படும் கருத்துக்கள் , மேலும் என் அறிவை விரிவு படுத்துகின்றன.
      தொடர்ந்து கருத்துக்களை பதிவு செய்யவும்.

      Delete