Search This Blog

Jan 31, 2016

கரம்சந்த் காந்தி இன்று இருந்தால்


இன்று காலை என் மனைவியோடு காலைக் காப்பி அருந்தியவாறு பேசிக்கொண்டிருக்கையில் அவள் சொன்னாள்  - "நேற்று  காந்தி இறந்த நாள். இதை ஒருவரும் கண்டு கூடக் கொள்ளவில்லை.".

இது சுருக்கென்று என் மனதில் தைத்தது.

தினசரிகளைப் புரட்டிப் பார்க்கையில் அது பற்றி ஒரு செய்தி கூட தென்படவில்லை.

" வாழ்க நீ எம்மான் " என்று பாரதி பாடிய நாள் போய் , " தேச பிதா" என்று போற்றிய நாள் போய் ,

சற்றேறக்குறைய அவரை முற்றும் மறந்து , அவர் கொள்கைகளைத துறந்து வெகு தூரம் வந்து விட்டோம்.

யாரைக் குறை சொல்வது?

அவர் பெயர் சொல்லி ஆட்சிக்கு  வந்து, சுய நலத்திலும், லஞ்ச ஊழல்களிலும் திளைத்து , காந்தியை "பொருத்தமில்லாதவராக" (irrelevant ) ஆக்கிவிடவர்களையா , அதை  தொடர்பில்லாத காட்சியாளர் போல் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மையா?

அன்புடன்
ரமேஷ்

கரம்சந்த் காந்தி இன்று இருந்தால்
 
ஜனவரித் திங்கள் முப்பதாம் நாள்
          கோட்சே காந்தியைச் சுட்ட தினம்.
இனவெறி மதவெறி  இரண்டையும் எதிர்த்த
          காந்தித் தாத்தா செத்ததினம்.
 
தினம்வரும் தினசரிப் பத்திரி கைகளில்
           நினைவுச் செய்திகள் ஏதுமில்லை.
மனம்மிக வருந்துது சினம்மிகப் பொங்குது
           இந்த மாந்தரை நினைக்கையிலே!

தினம்தினம் புழங்கும் பணநோட்  டுகளில்  
              காந்தியின்  படமின்று  இல்லையெனில் 
இனம்கண்டு கொள்ளார்  இன்றைய தலைமுறை
              இப்படி ஒருவர் இருந்ததையே!
 
சுதந்திர இந்தியா ராம ராஜ்யமாய்
           ஆக வேண்டுமெனக்  கனவுகண்டார்.
மதம்தலைக்  கேறிய ஆட்சி  யாளரால்
          ரோம^  ராஜ்யம்போல் அழிகிறதே!                ^ roman  empire 

 சுயமாய் நம்மைநாம் ஆளுங் காலம்
           வந்தது எனநாம்    மகிழ்ந்ததுபொய்
சுயநலக் காரர் ஆட்சியில் அமர்ந்து
            சூறை யாடுறார், இதுவேமெய்.
துயர்படும் உழவர் நிலைகண்டு வருந்தி
           மேலா  டைஅணி  வதைத்துறந்தார்.
இவர்பெயர் சொல்லி ஆட்சிக்கு வந்தோர்
            இடுப்பா டையுமே   உருவுகிறார்!

 நாதுராம் அவரை குண்டொன்று போட்டு
             ஒருமுறை  தானே கொன்றிட்டான்!.
தீதொன்றும் நினையா தூயவர் இவரை
             தினம் தினம் இவரோ கொல்லுகிறார்.

முச்சந்தி முனையில் இவர்சிலை நிறுவி
              வருடம் ஒரேமுறை வணங்கிவந்தார்.
இச்சம  யத்தில் அதையும் விடுத்து
              கோட்சே சிலையை நிறுவுகிறார்!
 
கரம்சந்த் காந்தி இன்று இருந்தால்
              தற்கொலை செய்து கொள்வாரோ? இல்லை
கரந்தனில் "கலஷ்நி கோவை"^  எடுத்து              ^ Kalashnikov gun 
             கயவ     ரிவரையே   கொல்வாரோ?














Jan 30, 2016

ஆவி பறந்தது

http://tse1.mm.bing.net/th?&id=OIP.M751f79fc02f126173c971cb73b21e9e3o0&w=298&h=299&c=0&pid=1.9&rs=0&p=0


இந்தப் பதிவிற்கு முன்னுரை தேவை இல்லை!

அன்புடன்

ரமேஷ்

ஆவி பறந்தது



பன்னாட்டு விமான மையத்தில்
உயர் வகுப்புக்கான சொகுசுச் சாய்வரையில்
புகை பிடிப்பவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியில்
அவன்(ள்) அமர்ந்திருந்தான்(ள்)
அவன்(ள்) முன் மேசை மீது
கொதிக்கும் சூட்டில் காபிக்கோப்பை.
அவன்(ள்) உதட்டிடையில்
புகையும் வெண்  சுருட்டு.
இரண்டில் இருந்தும்
ஆவி
பறந்துகொண்டு இருந்தது.
 

Jan 28, 2016

நோகாமல் நானிருக்கும் நாளுமினி வந்திடுமோ ?

எப்போது வேலையிலிருந்து ஒய்வுபெறுவேன் என்று காத்துக்கொண்டிருந்ததுபோல் பல்வேறு உபாதைகள் ஒய்வு பெற்ற உடனேயே வந்தடைகின்றன!

இது என்னுடைய அனுபவம் மட்டும் அல்ல! என் நண்பர்கள் பலரும் இதையே சொல்கிறார்கள் !

மிகவும் பிரபலமான உபாதைகள் மூட்டு வலி, முதுகு வலி, சர்க்கரை வியாதி ஆகியவை.!  அவற்றுள் என்னை ஒரு  ஆறு மாதத்திற்கு மேலாக விடாமல் பிடித்து ஆட்டுவது கழுத்து-தோள்பட்டை வலி.
 
இதனால் நான் படும் பாடு பற்றி ஒரு கவிதை!

இது என் வயதொத்த  பலரின் நிலையைப் பிரதிபலிக்கும் என்பதில் ஐயம் இல்லை!

அன்புடன்

ரமேஷ்

நோகாமல் நானிருக்கும் நாளுமினி  வந்திடுமோ ?

எழுத்துப்  பிழை என்றால் அழித்துத் திருத்திடலாம்
கழுத்துப் பிழை திருத்த வழியின்றித்  தவிக்கின்றேன்
அழுத்திப் படுத்தாலும் அவதிகள் குறையாமல்
விழித்துக் கழிக்கின்றேன் இரவுகள்  முழுதையுமே !


வாய்வுப் பிடிப்பென்று பலநாட்கள் வரைநானும்
வேதனையைப் பொறுத்திட்டு வாளா திருந்திட்டேன்.
தேய்ந்திட்ட எலும்புகளும் தொய்ந்திட்ட தசைநாரும்
தானிதற்குக் காரணமாம் என்றே பிறகறிந்தேன்.


காந்தக் கதிர்வீச்சு^  சோதனைகள் பலசெய்து                (^mri )
எந்தெந்த தசை நார்கள் கிழிந்ததெனக் காட்டிட்டார்.
பந்து கிண்ண மூட்டொன்று பழுதாகிப் போனதென்றார்.
நொந்துபோய் வலிதீர வழிதேடி அலைகின்றேன்.

 
மூலிகை மருந்துகள் தடவியும் குறையவில்லை.
வாலினி ஸ்பிரே^^ அடித்தும் வலியோ  அடங்கவில்லை
பெங்கே^^ தடவினாலும் எங்கே குறைகிறது?              
மங்கிப் போகாமல் பொங்கி எழுகிறது.


இதமான சூடதின்பின்   பதமான பனிக்கட்டி
கதகதக்கும் மெழுகென்று விதவிதமாய் முயன்றாச்சு
அகச் சிவப்பு ^ அலை வீச்சு தசை இழுக்கும் கருவியென
மிகப்பலவாய்  மருத்துவ முறைகளுமே  வீண் செலவே!

 
ஆயுர்வேத மருந்துகளும் அக்குபங்க்சர் ஊசிகளும்
நோயிதனைத் தீர்க்குமென்று நம்பினதே மிச்சம்!
வருமக் கலையொன்றே  மருந்தாகும் இதற்கென்று 
ஒருசிலரும் உரைத்தாலும் முயன்றிடவே எனக்கச்சம்!


யோகா பயிற்சிகளைத் தவறாமல் செய்தாலும்
போகாமல்  துரத்துதே பாழாய்ப் போகும் வலி.
சாகா வரம் பெற்று சேர்ந்திட்டதோ என்தோளில் ?
நோகாமல் நானிருக்கும் நாளும் வந்திடுமோ

                                          ^^ வலி நீக்கி மருந்துகள்
                            ^    infra red

என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.


please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .
 

Jan 25, 2016

காஞ்சி காமாட்சி பாமாலை

இந்த கனித்தோட்டம் பதிவுத் தொகுப்பை நான் ஆரம்பிக்கும் சில மாதங்களுக்கு முன்னமாகவே நான் எழுதியது இந்த காஞ்சி  காமாட்சி  பாமாலை.ஒரு கன்னி முயற்சி என்று சொல்லலாம். 

'மருங்கினில் அசைந்தாடும் ' என்று தொடங்கும் இரண்டாவது செய்யுள்தான் முதலில் எழுதியது- காஞ்சி காமாட்சி கோவிலில் அம்மனுக்கு முன் அமர்ந்திருந்தபோது தோன்றியது.


இதை சில உறவினர்களோடு அப்போது பகிர்ந்து கொண்டேன்.

இது வெண்பா வடிவத்தில் இருந்தாலும் எல்லா வெண்பா இலக்கணங்களும் பொருந்தவில்லை. இதைத் திருத்திய பிறகு பதிக்கலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் , சொல் நயமும், ஓசை நயமும் மாறாமல் முழுதும் திருத்த என்னால்  இயலவில்லை.

இந்த சிறு  குறைகளுடன் , இதோ, நான் எழுதிய  காஞ்சி  காமாட்சி  பாமாலை. (இது வெண்டுறை என்ற வெண்பா வகைக்குள் அடங்கும் என்றும் அறிந்தேன்!)

அன்புடன்
ரமேஷ்.


 காஞ்சி  காமாட்சி  பாமாலை
1.
ஐந்தவித்த முனிவர்களும் வானவரும் தானவரும்
வந்திங்கு வணங்குபுகழ் காஞ்சிகா மாட்சிதனை
செந்தூர நிறத்தாளை வண்டூரும் முகத்தாளை
வந்தனை செய்வோம் நினைந்து.
2.
மருங்கினில் அசைந்தாடும் நந்தா விளக்கொளிதான்
கருவறையில் உறைகின்ற காமாட்சி முகந்தனில்
நெருங்கியும் நீங்கியும் நடமிடுதல் காண்கையில்
உருகிடும் உள்ளமெல் லாம்.
3.
சாமமறை நாயகனின் வாமபாகத் தினளின்,
காமனை எறித்தவனைக் கடிமணம் புரிந்தவளின்,
காமத்திரு கண்ணினளின், வரமருளும் புண்ணியளின்
நாமமதை நாளும் நவில்வோம்.
4.
பத்துமா தம்தாங்கி நமைப்பெற்ற அன்னைபோல்
மொத்தமா வுலகையும் ஈன்றெடுத்துக் காப்பவளை
பத்(து)மா சனநிலையில் அமர்ந்திருந்து அருள்புரியும்
சித்தமா சக்தியைத் தொழு.
5.
இருகையில் பாசமங்  குசங்கள் பிடித்தவள்
கரும்புவில் ஒருகையில் தாங்கித் தரித்தவள்
மறுகையில் தாமரை மலரொன்றைக் கொண்டவளின்
திருப்பாதம் துதிப்போம் தினம்.
6.
ஆதிசங்  கரரமைத்த திருச்சக்  கரத்தமர்ந்து
மேதினியில் தீதொழிய அருள்புரிபவள் அவள்
காதினிக்க சௌந்தர்ய லாஹிரியைப் பாடியவள்
பாதங்களைப் பணிந்து தொழுவோம்.
7.
ஊசிமுனை  தனில்நின்று உறுதவம் செய்துப்பின்
ஈசனை மணந்துஅவன் இடம் சேர்ந்தவள்-அவளைப்
பூசித்து மலர்கொண்டு அனுதினமும் அருள்வேண்டி
யாசித்து அடைவோம் நலம்.

8.
வளியவள் வெளியவள் அனலவள் புனளவள்
ஒளியும் நன் னிலங்களும் அவள்படைப்பு தான்..
களிப்புடன்  அவளது கழல்களைப் பற்றினால்
ஒளிந்திடும் மனக்கவலை கள் .

9.
கயிலையில் களிநடம் புரிகின்ற ஈசனை
இயக்கும்நல்  விசையே மகாசக்தியே- அவள்
மயக்குமுக அழகினை மகிழ்வுடன் பாடினால்
பயனுறும் இப்பிறப் பே.

10.
சக்தியவள் இல்லையேல் சிவனிங்கு இல்லையே
முக்திதரும் அவள்நாமம் தினம்சொல்லியே -நாளும்
பக்தியுடன் தொழுவோர்க்குப் பிறவிச்சுழல் நீங்கியே
சித்திக்கும் சொர்க்கலோ கம்.

Jan 22, 2016

புல்வெளியில் முளைக்கும் களைகள்


புல்வெளியில் முளைக்கும்  களைகள்
 
சில மாதங்களுக்கு முன், என்னுடைய மூத்த மகனின் வீட்டில் , ஒரு புல்வெளி அமைத்தோம்.
முதலில் நிலத்தை சமன் செய்து, புது மண் பரப்பினோம்.அதன் மேல், புல்விதைகளைத் தூவி,
அவை முளைக்கும் வரை அவற்றை மிகையான வெயிலில் இருந்து காக்க, அதன் மீது வைக்கோல் பரப்பினோம். 
தினமும் தேவையான அளவு நீர் பாய்ச்சி , அதன் மீது ஒருவரும் நடக்காமலும், பறவைகள் அவ்விதைகளைத தின்று விடாமலும் பாதுகாத்து , நன்கு வாரங்களுக்குப் பின், பச்சைப் பசேல் என்று புல்வெளி உருவானது! 
ஆனால் , புல்லின் நடுவே பெருமளவு பூண்டுகளும் வளர்ந்து, புல்வெளியின் அழகைப் பாழ் செய்துவிட்டன!
இவைகளை களைந்தெடுத்த பின்புதான், புல்வெளி முழுஅழகுடன் ஜொலித்தது!
இதிலிருந்து, நாம் கற்கும் வாழ்க்கைப் பாடம் ஒன்றை, இந்தக் கவிதை மூலம் கூறுகின்றேன்.

அன்புடன்
ரமேஷ்


 புல்வெளியில் முளைக்கும்  களைகள்

நிலமுழுதும்  சமன்செய்து புதிதாக மணல்பரப்பி

இளம்புல்லின் விதைவிதைத்து அதன்பின்னே  உரம்தெளித்து

நாள்தோறும் நீர் பாய்ச்சி புல்வெளியைப் பேணுகையில்

நல்கவனம் அதில்செலுத்த நாம்சிறிது மறப்போமால்

புல்லதனைப்  புறம்தள்ளி அதனூடே பூண்டுபல

வல்லியதாய் வளர்ந்திடுமே ; இதிலுண்டு ஓர்பாடம்

 

மனமென்னும்   விளைநிலத்தை  நன்றாகப் பதம்செய்து

குணமென்னும்  விதைவிதைத்து நல்லறிவாம் உரமிட்டு

நன்னடத்தை நீர்பாய்ச்சி நாளும்நாம் வாழுகையில்

நற்குணங்கள்  மட்டும்நாம் விளைத்திடவே நினைத்தாலும்

தற்செயலாய் அவற்றிடையே  கோபங்கள் , காமங்கள்

தற்பெருமை , தன்னலங்கள்  இவைபோன்ற  பூண்டொக்கும்

வற்குணங்கள் வந்தடைய வாய்ப்புகளும் பலவுண்டு ;

சற்றுமவை சேராமல் களையெடுத்து வாழ்வோமே !


என் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எளிதாக நீங்கள் அளித்திட  உதவியாக ஒரு புதிய 'பன்முகத் தெரிவுப்  பகுதி ' ((multiple choice option )இணைக்கப்பட்டுள்ளது. (see at the bottom of the page). இதில் சென்று உங்கள் மதிப்புரைகளைப் பதிக்கலாம். தவறாமல் செய்யுங்கள். இதை முந்தைய எல்லாப் பதிப்புகளுக்கும் செய்யலாம். உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் உதவும். நன்றி.


please take a few  seconds to rate this poem using the multiple choice option section , at  the bottom  of  the blog. This feedback will  be useful to me for improving . The rater,s identity is protected . Please do this for the earlier posts also .
 


 

Jan 1, 2016

வாழ்வின் விடை

இது ஒரு சுய ஆய்வுக் கவிதை.

சில நாட்களாக என் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்களின் வடிகால் இது.

இதை பல நாட்களுக்கு முன்னமேயே நான் எழுதி இருந்தாலும், இதை வெளியிட ஒரு தயக்கம்; ஏன், பயம் என்று கூட கூறலாம்!

என்ன பயம் என்றால், இந்த  முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா என்று தெரியாது. நான் 
கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நோக்கினால், வெற்றிக்கான  விகிதம் மிகக் குறைவே என்று எண்ணுகிறேன்.


இந்த மாதிரி "விழிப்புணர்வு எண்ணங்கள் " எல்லோருக்கும் அவ்வப்போது தோன்றும்; உங்களுக்கும் கூட தோன்றியிருக்கும்!

ஆனால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், இவ்வாறு அவ்வப்போது தோன்றுவதையே ஒரு வெற்றியாகக் கொண்டு, அதற்கு அடுத்த படிகளைக் கடக்க முயல்வதில்லை.இது மனித இயற்கை.
இவ்வாறு இருக்கையில், இதை வேறு ஒரு கவிதையாக படம் போட்டுக் காட்டிவிட்டு , பிறகு அதன் படி நடக்கவில்லை என்றால், அந்தத் தோல்வியையும் ஏன் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பயம்தான்.

என்றாலும், இந்த புதிய ஆண்டின் துவக்கத்தில் , ஒரு (அசட்டு?) தைரியத்துடன்  இதைப் பதிக்கிறேன்!

நான் வேண்டியது எனக்குக் கிடைக்க வாழ்த்துங்கள்!

அன்புடன்
ரமேஷ்
இருபதாம்    நூற்றாண்டை    இரண்டாகப்    பகுத்திட்டு

முதல்பாதி    முடியும்    நாளில் *                                             31/12/1949

கருவிட்டு     உருப்பெற்று    கலியாளு    மிவ்வுலகில்

கால்தடம்     நான் பதித்    தேன்,


ஓரைந்து    ஆண்டுகள்    தாய்தந்தை    மடிமீது

கவலையறி     யாமல் தவழ்ந்    தேன்.

ஈரைந்து*     ஆண்டுகளாய்    பள்ளிகள்    பலசென்று          * 2*5=10

பாடங்கள்    பலவும்    பயின்றேன்.


வேறைந்து     ஆண்டும்     அதனோடு    ஓரிரண்டும் *       ( *5+2=7years of engineering)

பொறியியல்    கற்றுத்     தேர்ந்தேன்.

ஆறேழு**    ஆண்டுகளாய்    இங்கோடி     அங்கோடி       (** 6*7=42 years of work)

அலுவல்கள்    செய்திளைத்    தேன் .


நாடுகள்    பலசுற்றி    நகர் பலவும்     வலம்  வந்து

ஓடோடி    மூச்சிரைத்    தேன் .

ஏடுகள்     பலபடித்தும்    அனுபவத்    தோல் தடித்தும்

தலையும்     மனதும்     நரைத்தேன்.


கடிவாள    மிட்டுப்பின்     கண்திரையும்    போட்டபின்

ஒருதிசையே     நோக்கும்     புரவி -அதுபோல் 

அடிவானம்     தொட எண்ணி    தொழிலொன்றே    குறிஎன்று

கிணற்றி ட்ட     தவளை     ஒத்தேன்.


வீடுமனை     வாங்குவதும்     வங்கிப்பணம்     தேங்குவதும்

வாழ்க்கையின்     வெற்றி     என்றால்

தேடுமவ்    வெற்றியென்     வசம்வந்து     சேர்ந்ததென

தீர்வாகச்    சொல்லிவிட    லாம்.


ஆயினும்     இப்பொழுதில்     அடிமனதில்      ஒருசிறிது

உளைச்சல்     உறுத்தி     வருதே!

போய்விட்ட     நாட்களெல்லாம்     பயனின்றிப்  போயினவோ     
என்ற ஒரு      எண்ணம் எழுதே!


ஆறைந்து*     ஆண்டுகளாய்    தசை நரம்பு     எலும்பான       * 6and5=65;

உடலை    வுயிரால்     நிறைத்தேன்.

ஆராய்ந்து     பார்க்கையிலே      வேறெந்த     சாதனையும்

இல்லையென     எண்ணித்     திகைத்தேன்!


மைந்தரிரு     வரைப்பெற்று     கற்பித்து     மணமுடித்து

என்கடமை     ஆற்றினேன்     அல்லால்

சொந்தங்கள்     சுற்றங்கள் என்ற     ஒரு வட்டம்     விட்டு

சிறிதும்     வெளிச் சென்றே     னில்லை.


வித விதமாய்     விஞ்ஞானத்     தொழில்நுட்பக்     கேள்விகளின்

விடைகண்டு     வாழ்த்துப் பெற்றேன் -    ஆயின்

இதயத்தில்     மெய்ஞானம்     பெற்றேனா ?     இல்லையென

இன்றதனை     நானு    முணர்ந் தேன்.


தவறான     கேள்விகளை     தினம்தினமும்     கேட்டதற்கு

சரியான     பதிலும்     சொன்னேன்.

இவ்வுலக     வாழ்க்கைஎனும்     விடுகதையின் விடை   என்ன

இக்கேள்வி     கேட்க     மறந்தேன்.


இந்தநாளில்    தொடங்கி     இக்கேள்வி     விடைபெறவே

இடைவிடா     முயற்சி செய்   வேன்- உடல்

வெந்த நாள்     வருமுன்னே     நல்லறிவு     நேர்ந்திடவே

கந்தவேள்     அருள்     புரிகவே.


அறுபடையில்      குடிகொண்டு      அடியவர்க்      கருள்புரியும்

அறுமுகக்     குமர     வேளே!

சிறியவனென்     சித்தக்     குழப்பங்கள்      நீங்கிடவே

நல்லருள்     புரிக     நீயே!


.







.