Search This Blog

Jan 1, 2016

வாழ்வின் விடை

இது ஒரு சுய ஆய்வுக் கவிதை.

சில நாட்களாக என் மனதில் அலைபாய்ந்து கொண்டிருந்த எண்ணங்களின் வடிகால் இது.

இதை பல நாட்களுக்கு முன்னமேயே நான் எழுதி இருந்தாலும், இதை வெளியிட ஒரு தயக்கம்; ஏன், பயம் என்று கூட கூறலாம்!

என்ன பயம் என்றால், இந்த  முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா என்று தெரியாது. நான் 
கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நோக்கினால், வெற்றிக்கான  விகிதம் மிகக் குறைவே என்று எண்ணுகிறேன்.


இந்த மாதிரி "விழிப்புணர்வு எண்ணங்கள் " எல்லோருக்கும் அவ்வப்போது தோன்றும்; உங்களுக்கும் கூட தோன்றியிருக்கும்!

ஆனால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், இவ்வாறு அவ்வப்போது தோன்றுவதையே ஒரு வெற்றியாகக் கொண்டு, அதற்கு அடுத்த படிகளைக் கடக்க முயல்வதில்லை.இது மனித இயற்கை.
இவ்வாறு இருக்கையில், இதை வேறு ஒரு கவிதையாக படம் போட்டுக் காட்டிவிட்டு , பிறகு அதன் படி நடக்கவில்லை என்றால், அந்தத் தோல்வியையும் ஏன் பட்டவர்த்தனமாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஒரு பயம்தான்.

என்றாலும், இந்த புதிய ஆண்டின் துவக்கத்தில் , ஒரு (அசட்டு?) தைரியத்துடன்  இதைப் பதிக்கிறேன்!

நான் வேண்டியது எனக்குக் கிடைக்க வாழ்த்துங்கள்!

அன்புடன்
ரமேஷ்
இருபதாம்    நூற்றாண்டை    இரண்டாகப்    பகுத்திட்டு

முதல்பாதி    முடியும்    நாளில் *                                             31/12/1949

கருவிட்டு     உருப்பெற்று    கலியாளு    மிவ்வுலகில்

கால்தடம்     நான் பதித்    தேன்,


ஓரைந்து    ஆண்டுகள்    தாய்தந்தை    மடிமீது

கவலையறி     யாமல் தவழ்ந்    தேன்.

ஈரைந்து*     ஆண்டுகளாய்    பள்ளிகள்    பலசென்று          * 2*5=10

பாடங்கள்    பலவும்    பயின்றேன்.


வேறைந்து     ஆண்டும்     அதனோடு    ஓரிரண்டும் *       ( *5+2=7years of engineering)

பொறியியல்    கற்றுத்     தேர்ந்தேன்.

ஆறேழு**    ஆண்டுகளாய்    இங்கோடி     அங்கோடி       (** 6*7=42 years of work)

அலுவல்கள்    செய்திளைத்    தேன் .


நாடுகள்    பலசுற்றி    நகர் பலவும்     வலம்  வந்து

ஓடோடி    மூச்சிரைத்    தேன் .

ஏடுகள்     பலபடித்தும்    அனுபவத்    தோல் தடித்தும்

தலையும்     மனதும்     நரைத்தேன்.


கடிவாள    மிட்டுப்பின்     கண்திரையும்    போட்டபின்

ஒருதிசையே     நோக்கும்     புரவி -அதுபோல் 

அடிவானம்     தொட எண்ணி    தொழிலொன்றே    குறிஎன்று

கிணற்றி ட்ட     தவளை     ஒத்தேன்.


வீடுமனை     வாங்குவதும்     வங்கிப்பணம்     தேங்குவதும்

வாழ்க்கையின்     வெற்றி     என்றால்

தேடுமவ்    வெற்றியென்     வசம்வந்து     சேர்ந்ததென

தீர்வாகச்    சொல்லிவிட    லாம்.


ஆயினும்     இப்பொழுதில்     அடிமனதில்      ஒருசிறிது

உளைச்சல்     உறுத்தி     வருதே!

போய்விட்ட     நாட்களெல்லாம்     பயனின்றிப்  போயினவோ     
என்ற ஒரு      எண்ணம் எழுதே!


ஆறைந்து*     ஆண்டுகளாய்    தசை நரம்பு     எலும்பான       * 6and5=65;

உடலை    வுயிரால்     நிறைத்தேன்.

ஆராய்ந்து     பார்க்கையிலே      வேறெந்த     சாதனையும்

இல்லையென     எண்ணித்     திகைத்தேன்!


மைந்தரிரு     வரைப்பெற்று     கற்பித்து     மணமுடித்து

என்கடமை     ஆற்றினேன்     அல்லால்

சொந்தங்கள்     சுற்றங்கள் என்ற     ஒரு வட்டம்     விட்டு

சிறிதும்     வெளிச் சென்றே     னில்லை.


வித விதமாய்     விஞ்ஞானத்     தொழில்நுட்பக்     கேள்விகளின்

விடைகண்டு     வாழ்த்துப் பெற்றேன் -    ஆயின்

இதயத்தில்     மெய்ஞானம்     பெற்றேனா ?     இல்லையென

இன்றதனை     நானு    முணர்ந் தேன்.


தவறான     கேள்விகளை     தினம்தினமும்     கேட்டதற்கு

சரியான     பதிலும்     சொன்னேன்.

இவ்வுலக     வாழ்க்கைஎனும்     விடுகதையின் விடை   என்ன

இக்கேள்வி     கேட்க     மறந்தேன்.


இந்தநாளில்    தொடங்கி     இக்கேள்வி     விடைபெறவே

இடைவிடா     முயற்சி செய்   வேன்- உடல்

வெந்த நாள்     வருமுன்னே     நல்லறிவு     நேர்ந்திடவே

கந்தவேள்     அருள்     புரிகவே.


அறுபடையில்      குடிகொண்டு      அடியவர்க்      கருள்புரியும்

அறுமுகக்     குமர     வேளே!

சிறியவனென்     சித்தக்     குழப்பங்கள்      நீங்கிடவே

நல்லருள்     புரிக     நீயே!


.







.










5 comments:

  1. A fabulous one- I think this an honest confessions of a man who is still searching for an achievement that will give his Soul some satisfaction. You have only echoed the mental turmoil of all the average mortals. This is precisely the introspective mind and the imminent danger of reaching your state of mind, that keeps me pursuing my goal to contribute something tangible to this planet Earth- Time will only tell !

    ReplyDelete
  2. அருமையான முயற்சி., தொடரட்டும்.

    ReplyDelete
  3. அருமையான் பதிவு. நமது வயதினர் பலருக்கும் எழும் ஏக்கம் இது. நமது வாழ்க்கையைப் பின்னோக்கிச் சென்று பார்த்தோமானால் எல்லோரும் செய்வதை விட நாம் ஒன்றும் புதியதாக எதையும் செய்ய வில்லை என்று அறிவதனால் வரும் ஒரு தாபம். இதை அருமையாக பதிவிட்டதே மாறுபட்ட ஒன்றுதான். என்னுள்ளும் உள்ளது இந்த ஏக்கம். தினமும் திருவராதனத்தில் பாசுரங்களைச் சொல்லும் பொழுது திவ்ய பிரபந்தங்களைக் கற்காமல் இவ்வளவு நாட்களும் அருமையான தமிழை இழந்து விட்டோமே என்று தோன்றும். இப்போதாவது ஆரம்பித்தோமே இன்னும் நாட்கள் இருக்கின்றனவே திளைப்பதற்கு என்று ஆறுதல் அடைகிறேன்.

    ReplyDelete
  4. This poem comes from my heart, not only yours. Excellent.Hope to receive more and more.
    SUNDER

    ReplyDelete