சில மாதங்களுக்கு முன், நானும் என் மனைவியும் , அமெரிக்காவில் வசிக்கும் என் மூத்த மகனுடன் சில மாதங்கள் தங்கி இருந்தோம். அப்போது, மகன்,மருமகள்,பேத்தியுடன் பெர்க் ஷயர் என்னும் இடத்திலுள்ள ஒரு விடுமுறை விடுதியில் சில நாட்கள் கழித்தோம். இயற்கை அன்னையின் மடிமேல் அமைந்திருந்த அந்த இடத்தின், அதன் சுற்றுப் புறங்களின் அழகே அழகு. அழகே அழகு.
மனிதரின் கைபடாது வளம் கொழிக்கும் எந்த ஒரு இடத்தைப் பார்க்கையிலும் " இது போல் உண்டா!" என்று வியக்கத் தோன்றும்.
இந்த இடமும் அதற்கு விலக்கல்ல. ஒரு படி மேலே என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போது , அது பற்றி நான் எழுதிய ஒரு பாடல் இது; பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
அன்புடன்,
ரமேஷ்
பெர்க்
ஷயரில விடுமுறை
மலைநிழலில் மரச்செறிவில் மறைந்திருந்த ஒதுக்கந்
தனிலமைந்த அழகியதோர் விடுமுறைச் சதுக்கம்
அங்கிருந்த சிலநாட்கள் மனவேட்டில் பதிக்கும்
மகிழ்வான நினைவுவாழ் நாள்முழுதும் நிலைக்கும்
வெளிர்வான நிறவானில் வெண்பஞ்சுக் குவியல்
இடையிடையே மழைதாங்கி முகங்கருத்த மேகம்
துளிர்பச்சை மரமுடியால் மேகம்தொடும் முகடு
அங்கங்கே வழித்தெடுத்த பனிச்சறுக்கல் வகிடு
இளங்காற்றில் அங்கிங்கு மலைபாயும் மேகம்
கலைந்தாடிப் பலவுருவம் எடுத்து விளையாடும்
உலவுமந்த மேகத்தின் நிழல்படிந்த மலையின்
இளம்பச்சை நிறப்போர்வை கரும்போர்வை ஆகும்
மலைமுகத்தில் நட்டுவைத்த காற்றாலைக் கூட்டம்
காற்றடிக்கும் திசைநோக்கி தலைதிருப்பி நிற்கும்
வலியாரின் வாக்கையெல்லாம் வேதமென ஒப்பி
தலையாட்டும் வறியவரின் செயலதனை ஒக்கும்
அடர்ந்தமலைச் செறிவுகளில் துள்ளிடும் அருவி
கொடிபடர்ந்து நெடிதுயர்ந்த மரம்நிறைந்த காடு
இவற்றிடையில் வளைந்துசெல்லும் ஒற்றையடிச் சுவடு
சலசல(வெ)ன அலம்பலுடன் ஓடும் சிற்றோடை
சிலநேரம் அருகில்வந்து பாதைதொட் டோடும்
மறுநேரம் கண்மறைந்து ஒலிமட்டும் கேட்கும்
இலைமறைத்து இருள்கவிந்து இருக்கும்சில பகுதி
இருள்விடுத்து இரவிகதிர் நுழையும்பிற பகுதி
மறைந்திருந்து மரங்களிடை புட்கள்கவி பாடும்
சிறகடிக்கும் சிறுகுயிலின் இசைநம்செவி நிறைக்கும்
இயற்கையன்னை இருகரத்தில் நமைஅணைக்கும் வேளை
துயரங்களை மனம்மறந்து உயரே பறக்கும்
மலைநிழலில் மரச்செறிவில் மறைந்திருந்த ஒதுக்கந்
தனிலமைந்த அழகியதோர் விடுமுரைச் சதுக்கம்
அங்கிருந்த சிலநாட்கள் மனவெட்டில் பதிக்கும்
மகிழ்வான நினைவுவாழ் நாள்முழுதும் நிலைக்கும்