சென்ற சில நாட்களாக , என்னுடைய உறவினர்களுடன் செய்திகள் பகிர்ந்து கொள்ளும் "whatsapp " குழுவில் ஏராளமான பரிமாற்றங்கள்! தீபாவளி வாழ்த்துக்கள், சென்னை மழை பற்றிய தகவல்கள், கடி ஜோக்குகள் இவற்றோடு கூட ஏராளமான புகைப்படங்கள் பகிரப்பட்டன !
எங்கெங்கிருந்தோ தேடி, தோண்டி எடுக்கப்பட்ட படங்கள் ; பலரும் முதல் முறையாகப் பார்ப்பவை. சில பழைய புகைப்படங்கள் என்னைப் போன்ற வயதானவர்களுக்கு "அந்தக் காலத்தை" நினைவூட்டின. மனம் நெகிழ வைத்த நினைவுகள்!
புகைப்படங்கள் , என்ன ஒரு சிறப்பான பொக்கிஷங்கள் !
புகைப்படங்களின் புகழ் பாடி ஒரு கவிதை. நீங்களும் என்னைப் போலவே உணருவீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
ரமேஷ்.
புகைப்புடங்கள் -
அழகான அந்நாளைய ஆனந்த நிகழ்வுகளை
அலுங்காமல் குலுங்காமல் அழகெதுவும் குறையாமல்
நிழலாகப் பதித்துப்பின் பத்திரமாய்ப் பூட்டிவைத்த
நிகரேதும் இல்லாத பேரழகுப் பெட்டகங்கள்.
சிறகில்லா சிந்தனைப் பறவைகளைக். கட்டவிழ்த்து
பறந்து பலகாலம் பின்னோக்கிக். கொண்டுசென்று
இறந்த கால நிகழ்வுகளை 'இம்'மென்று. சொல்லுமுன்னே
சிறப்பாகப் படம் காட்டும் காலப்பொறி இயந்திரங்கள்.
இரைச்சல். மிகநிறைந்த. இயந்திர. வாழ்விடையே
இளமைக் காலத்து இனிய நினைவுகளை
அரைத்தமர்ந்து அசைபோட இடமமைத்துத் தருகின்ற
அட்டையிலே அச்சடித்த அழகிய பூங்கொத்துக்கள்.
கருப்பு வெளுப்பாக அன்றெடுத்த நிழற்படத்தின்
வண்ணங்கள் பழுதாகி பழுப்பேறிப் போனாலும்
கருத்தில் நிறைந்துஅவை எழுப்புகின்ற எண்ணங்கள்
பலநாட்கள் ஆனாலும் பழுப்படைந்து போவதில்லை.
நம் மக்கள் மணமுடித்த வரவேற்பு வைபவத்தில்
குழுவாக அனைவரையும் கூட்டிவைத்து எடுத்த படம்
பலவருடம் கழிந்தபின்னே இன்றையநாள் பார்க்கையிலே
யார்யார் எங்கெங்குள்ளார் எனத் தேடல் மிகமகிழ்ச்சி.
பல்லிழந்து உடல் தளர்ந்த பாட்டியையும். பாட்டனையும்
பார்த்து அந்த உருவங்களே. உள்மனதில். பதித்திருந்தோம்.
பருவத்திலே அவர் இருந்த அழகுப் படம் பார்த்து
சொல்லிழந்து நிற்கின்றேன். கண்ணில் நீர்த் திரையுடனே!
வாலிபம் வடிந்து பின்னர் வயதாகிப் போகையிலே
வேலை விடுத்த பின்னர் வாட்டும் வெறுமையிலே
தனிமைத் துயர் நம்மைத் துரத்துகிற வேளையிலே
இனிய துணை ஆகிடுமே இனியிந்தப் புகைப்படங்கள்.
No comments:
Post a Comment