Search This Blog

Aug 29, 2015

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .

 

பவித்ரா வரலக்ஷ்மி விரதம் கொண்டாடுகிறாள் .


 பெரிய பன்னாட்டு நிறுவனமொன்றில்
பதவி வகிக்கும் பவித்ரா
வரும் வெள்ளிக்கிழமை
வரலக்ஷ்மி விரதம் கொண்டாடப் போகிறாள்.
 
அம்மாவுமில்லாமல்,மாமியாருமில்லாமல்
தலை நோம்புக்குப் பிறகு
முதல் தடவை
தனியாக செய்யப் போகிறாள்.
அவள் புருஷன் கூட " அவுட் ஆப் தி கண்ட்ரி ".
ஒரே டென்ஷன்.
 
பல தடவை தொலைபேசியிலும் ஸ்கைப் பிலும்
அம்மாவிடமும் , மாமியாரிடமும் பேசி
என்னன்ன செய்யவேண்டும் என்றும்
 'எது நம்ம ஆத்துப் பத்ததி ' என்றும் விசாரித்து
செக் லிஸ்ட் செய்து  கொண்டாகிவிட்டது. 
 
வேண்டிய  சாமானெல்லாம்  வாங்கி  வைத்துவிட்டாள்.
அலுவலகத்துக்கும் வெள்ளிக்கிழமை விடுப்பு சொல்லிவிட்டாள்.
பூஜை செய்ய வாத்தியாருக்கும், சமையல் மாமிக்கும்  சொல்லியாகிவிட்டது.  ( அன்று சாயங்காலம்
சுமங்கலிகளை அழைத்து வெற்றிலை பாக்குடன் ஹை டீ யும் கொடுப்பதாக ஏற்பாடு.)
 
 நாளை வெள்ளிக்கிழமை !
 வியாழன் அன்று மாலையே வெள்ளிக் கலசத்தில் தேங்காய் வைத்து ,
அம்மன் முகத்தைப் பொருத்தி 
மஞ்சள் கொத்து , மாவிலைத் தோரணங்களுடன்  அலங்காரம் செய்தாகிவிட்டது.
 
இரவு முழுதும் எக்சைட் மென்ட் டில் தூக்கம் வராமல் விடிகாலையிலேயே எழுந்துவிட்டாள்.
குளித்து முடித்து ரெடிமேட் பட்டு மடிசார் கட்டிக்கொண்டாள்.
கை , காது , கழுத்து நிறைய நகை அணிந்துகொண்டாள்.
பூஜை  சாமான் எல்லாம் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள்.
எல்லாம் ரெடி,. வாத்தியாரவரவேண்டியது தான் பாக்கி.
 
நேரம் இருப்பதால் ,அம்மனுடன் சேர்ந்து ஒரு செல்பி எடுத்து
அம்மாவுக்கு அனுப்பிவிட்டு வாத்தியாருக்காகக்  காத்துக் கொண்டிருக்கையில்   ---------
 
அம்மாவிடமிருந்து போன்.!
 
எடுத்துப் பேசுகிறாள் பவித்ரா.
 
' ஏண்டி, இவளே  , கழுத்திலே மாங்கல்யம் எங்கேடி ??"
 
 பவித்ராவுக்கு ஷாக்.!
 ஓடுகிறாள் மாடிக்கு -
 எப்போதோ கழட்டி , எங்கேயோ மாட்டி வைத்த ,
மாங்கல்யச் சங்கிலியைத்
தேடி எடுத்து சூடிக் கொள்ள!  
 

 அன்புடன் 

ரமேஷ் 

 

Aug 28, 2015

ஒரு தமிழ் லிமெரிக்

ஒரு தமிழ் லிமெரிக் 

 
ஆங்கிலக் கவிதை வகைகளில் லிமெரிக் (LIMERIK ) என்று ஒரு வகை. இது ஒரு ஐந்தடிப் படைப்பு.

1,2 மற்றும் 5-ம்  அடிகளின் ஈற்றுச் சீர் ஒரே சந்தத்துடன்  இருக்கும்.
அது போல் 3,4 ம்  வரிகளின் ஈற்றுச் சீரும் ஒரே சந்தத்தைப்  பெற்றிருக்கும். 1.2 மற்றும் 5 ம் அடிகளை விட இந்த அடிகள் சிறியதாக இருக்கும்.
இது எனக்குத் தெரிந்த இலக்கணம்.
பொதுவாக இவை குறும்புக் கவிதைகளாக அமைத்திருக்கும். ஹாஸ்ய ரசம் ததும்பும்.

இப்போது இந்த இலக்கணத் திற்கு உட்பட்டு ஒரு தமிழ் "லிமெரிக்".

இந்த "லிமெரிக்"., இப்போது காரசாரமாய் டெல்லியில் கேஜ்ரிவால் ஆட்சிக்கும், எல்.ஜீ  ஜங்- குக்கும் இடையே நடைபெறும் இழுபறியைப் பற்றியது.

 


 

டில்லியோட     எல்ஜீ பேரு             ஸ்ரீநஜீப்              ஜங்கு .

தோரணையி       லேபெரிய              ராஜாதே             சிங்கு.

                           ஆப்(AAP)பு        போடும்              ரூலு

   அடுத்த            நாளே                        ஓவர்                   ரூலு

செஞ்சு                ஊதுகிறார்            பூம்பூம்பூம்          சங்கு. 

 

அன்புடன் 

 

ரமேஷ் 

       

 

 

 

 

 

Aug 27, 2015

விநாயகர் பதிகம் - பாகம் 2

இதுவரையில் வெளியிட்ட  பதிவுகளைப் பார்த்து, படித்து தொலைபேசி மூலாமாகவும் , மின் அஞ்சல் மூலமாகவும் வாழ்த்துக்களையும் , கருத்துக்களையும் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி.

ஒரு வேண்டுகோள்!- இந்த கருத்துகளை இந்த கனித்தோட்டம் பதிவு மூலமாகவே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். அனைவரும் அறிந்துகொள்ள இது ஏதுவாகும்.

இப்போது விநாயகர் பதிகத்தின் அடுத்த ஐந்து பாடல்களுடன் பாகம் 2,

அன்புடன்

ரமேஷ்

விநாயகர் பதிகம் - பாகம் 2


பாடல்
குறிப்பு .
செவ்விய தமிழிலே பாடல்கள் பலபுனைந்த
அவ்வைக் கிழவிக்கு அருள்செய்து- அவர்தம்மை
கவ்வித் தன்வாயால் கைலாயம் சேர்த்தானை
பவ்(வி)யமாய்ப் பணிவோம் தினம்            (6)               
அவ்வையும் அவரது நண்பர்கலான சுந்தரமூர்த்தி நாயனாரும், சேர மன்னனும் கைலாயம் போகத் திட்டமிட்டார்கள். புறப்படும் நாளன்று அவ்வை விநாயகர் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் போயிற்று. அவர் பூஜையில் ஈடுபட்டிருந்த போதிலே , மற்றவர் இருவரும் கைலாதுக்கு புறப்பட்டு விட்டார்கள்- முன்னவர்   இந்திர லோகத்து  யானை ஐராவதத்தின்  மீதும், பின்னவர் அவரது புரவி மேலும் அமர்ந்து. அவ்வையாரின் மனக்கலக்கத்தை அறிந்த விநாயகர் , பூஜை முடிந்ததும் அவரை தன தும்பிக்கையால் தூக்கி கைலாசத்தில்- அவரது நண்பர்கள் அங்கடையும் முன்னே - சேர்த்தார் என்பது வரலாறு.
அருகம்புல் மாலையை அணிவித்து அதனோடு
எருக்கம்பூ சேர்த்தவரைப் * பூசித்து -- உருக்கமுடன்
வேண்டுமடி யார்க்கவர்கள் நாடும்வரம் நல்குவனைத்
தண்டமிட்   டுத்தொழுவம்  நாம்.                             (7)
               
* சேர்த்து அவரைப்
 
                               
இந்தப் பாடலுக்கு விளக்கங்கள் தேவையில்லை. என்றாலும் ஏன் அருகம் புல் விநாயகருக்கு விசேஷம் ? ஒரு கதை உண்டு. ஒரு சமயம் பார்வதியின் கோபத்துக்கு உள்ளாகி சபிக்கப்பட்டார் நந்தி தேவர். சாபம் விலக வழியை அவர் தேவியிடம் வேண்ட, தேவியும் " உனக்குப் பிரியமான ஒன்றை விநாயகருக்கு அர்ப்பணித்துவிட்டால்  சாபம் விலகும்"என்று அருளினார். உடனே நந்தி தேவர் அவருக்குப் பிடித்த உணவான அருகம் புல்லை அர்ப்பணித்ததாகவும் , அதனாலேயே பிள்ளையாருக்கு அருகம்புல் விசேஷம் என்றும் கூறுவர் .
புறஅறிவின் பூரண உருவகமாய்  புத்தியினை 
ஒருபுறம் அமர்த்திக் கொண்டு -- மறுபுறம்
மெய்ப்பொருள் தத்துவமாய்   சித்தியை       வைத்திட்ட
அய்ங்கரனி னடிகள் பணிவோம்.                           (8)
பிள்ளையாரை பிரம்மச்சாரியாகவே  நாமெல்லாரும் நினத்திருந்தாலும், அவர் பிரஜாபதியின் ( சிலர் பிரமனின் என்பர்) மகளிரான சித்தியையும் புத்தியையும் துணையாக ஏற்றதாகவும் வரலாறு உண்டு. விநாயகர் இருக்கும் இடத்திலே அறிவின் பூரணத்துவத்தைக் காணலாம் என்பதையே சித்தியும், புத்தியும் உணர்த்துகிறார்கள் என்பதின்  உருவகமே இது என்றும் கொள்ளலாம்.
மோதகமும் முக்கனியும் பாலோடு சர்க்கரையும்
சாதித்து சிரம்தாழ்த்தி  வணங்கிடின் -- காதலுடன் 
வேதனைகள் நமைச்சேரா! விக்னங்கள் விலகிவிடும்!
தீதகன்று நலம்சேரும்  காண்.                                   (9)
" சாதித்து.   சிரம்தாழ்த்தி  காதலுடன் வணங்கிடின் "-- என்று படித்துப் பொருள் கொள்க. வேறு விளக்கங்கள் தேவையில்லை
முச்சந்தி தோறும் மரத் தடிகள் மீதும்
எச்சமயமு மர்ந்த்தருள் புரிபவனை   - இச்சையுடன்
மெச் சியே  தொழுவோர்க்கு நலமெலாம் சேருமே
நிச்சயமி தென்றே உணர்.                                       (10)               
பொருள் விளக்கங்கள் தேவையில்லை.
அனைவரும் விநாயகனை வணங்கி நலம் பெறுவோம்!

 

Aug 24, 2015

வெங்காயம்

வெங்காயம்


ஒவ்வொரு வருஷமும் ஒரு மாதம் வெங்காய விலை வானை எட்டும்.

இந்த வருடமும் அதற்கு விதி விலக்கல்ல!

வெங்காய விலை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு மேல் போய்விட்டது என்று செய்திகள்.

இது பற்றி ஒரு பாடல்.






 தோலை உரித்தாலே   கண்ணீர்  வரவழைக்கும் 

பொல்லாப் புகழுடைத்தாம் வெங்காயம் - இன்றோ   

விலையை உரைத்தாலே  கண்ணீர் பெருகும் 

நிலையதனை நேரிலே  காண்.


பல விகற்ப இன்னிசை வெண்பா

இந்தப் பாடலைப் படித்து ரசித்து சிரித்து கண்ணீர் சிந்தலாமே!

 

அன்புடன் 

 

ரமேஷ் 

விநாயகர் பதிகம் - பகுதி -1




விநாயகர் பதிகம் - பகுதி -1

சென்ற பதிவில் சொல்லியிருந்தபடியே பதிகத்தின் பாடல்களை , தகுந்த விளக்கக் குறிப்புகளுடன் எழுதி இருக்கிறேன். ஆனால் இந்த முறை முதல் ஐந்து பாடல்களை மட்டும் வெளியிடுகிறேன். ( பாதி மட்டும் வெளியிடுவதால் இதை பாதிகம் என்று சொல்லலாமோ?).

மற்றவை அடுத்த வாரங்களில்.



பாடல்
குறிப்பு .
வானுறை ஈசரும்  ஏனைய தேவரும் 
கானுறை மாத்தவ ஞானியோரும்  ---தீநிறை
வேள்விகள் செய்யுமுன் வேண்டி வணங்குவது 
வேழமுகன் பாதந்  தனை                              (1)
எந்தக் காரியத்தையும், , கடவுளர்கள்,பிற தேவர்கள், முனிவர்கள் ஆகிய எல்லோரும் கூட விநாயகனைத் தொழுதா பினனரே தொடங்குவார்கள். இல்லையேல் காரியம் வெற்றி ஆகாது! சிவபெருமான் ஒரு சமயம் போருக்குச் செல்லுமுன் இதைச் செய்ய மறந்ததால் , அவரது தேர்ச் சக்கரம் உடைந்தது என்பது புராணம்.
காரியம் யாவையும் எண்ணித்  தொடங்குமுன்
பாருறை மாந்தர் தொழுவர்     --- கரிமுகத்
தூயவன் மாயோன்  மருகனுறை கோயிற்கு
போயவன்  காலில் விழுந்து                          (2)
தெய்வங்களே   இப்படி என்றால், இவ்வுலகு மாந்தர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அவர்களும் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று பூசித்த பின்னரே காரியம் தொடங்குவர்.
காவியமாம்  பாரதக்  காதையினைப்  பன்னூறு 
பாயிர மாய்ச்செய்த  மாமுனிவன்  -வாயுரைக்க
தந்தம் உடைத்தெழுது  கோலாகச் செய்தானை  
வந்தனை செய்வோம் தினம்  .                        (3)
வேதவியாசர் சற்றும் நிறுத்தாமல் தொடர்ச்சியாக பாரதக் கதையைச் சொல்லவேண்டும் என்றும், அவர் சொல்லச் சொல்ல அவர் சொல்லுவதைப் புரிந்து கொண்டு , சற்றும் நிறுத்தாமல் விநாயகர்  எழுதவேண்டும் என்று ஒப்பந்தம். அவர் வேகமாக எழுதும்போது எழுதுகோல் உடைந்துவிட்டது! என்ன செய்வது? உடனே விநாயகர் ஒரு தந்தத்தை உடைத்து , அதை எழுத்தாணியாக உபயோகித்து பரதக் கதையை எழுதி முடித்தார்!  அதை விளக்கும் பாடல் இது.
கைலையில் குடிகொண்ட பெற்றோர் தமைச்சுற்றி
எலிவா கனமேறி வலம்வந்து -உலகைஎலாம்
சுற்றியதற் கொப்பிதெனச் செப்பிட்டு              மாங்கனியைப்
பெற்றவனின் பாதமதைப்  பற்று.                       (4)
விநாயகர் பற்றிய கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற கதை-- அன்னையையும் தந்தை வலம் வந்து மாங்கனியைப் பெற்ற கதை.  விளக்கம் எதுவும் தேவையில்லை.      (4)
குறுமுனி  அகத்தியன் கைலயம் சென்றவண்
இருந்து கொணர்ந்ததண்  கங்கைநீர் – நிறைஜபக்
கலத்தினைக்  கவிழ்த்துக் காவிரியாய்த்  தென்திசை
நிலம்செழிக்க  விட்டவனை  வணங்கு.            (5)
விந்தியமலையின் தெற்குப் பகுதிகளின் தண்ணீர்ப்  பற்றாக்குறையை நீக்க ஒரு ஜீவ நதியை  உருவாக்க அகத்திய முனி கங்கை நீரை  ஒரு மண்டலத்தில் எடுத்து  வந்தார். தென்மேற்கு  மலையில் ஒரு இடத்தில் தன்  கமண்டலத்தை கீழே வைத்து  இளைப்பாறுகையில் , விநாயகர் ஒரு காக்கை வடிவில் வந்து ( ஒரு அந்தணச் சிறுவன் வடிவில் என்றும் சொல்வதுண்டு), அந்தக் கமண்டலத்தைக் கவிழ்த்தார். அங்கிருந்து காவிரி உற்பத்தி ஆகியது ; அந்த இடம் தான் தலை காவேரி : -என்பது ஐதீகம்.





Aug 19, 2015

பாராளுமன்றத்தில் கலாட்டா


பதிவு எண்  -- 3


சென்ற வாரம்,  விநாயகர் பதிகத்தை அடுத்த பதிவில் பதிப்பேன் என்று கூறியிருந்தேன். ஓவ்வொரு பதிகப் பாட்டும் விநாயகர் பற்றிய ஒரு கதையைக்  குறிப்பதாக அமைந்துள்ளதாலும், சில கதைகள் படிப்பவுருக்குப் புதிதாக இருக்கலாம் என்பதாலும் , அந்த அந்த பாடல்களுக்கு நேராக , சம்பந்தப்பட்ட கதை பற்றிய சிறு குறிப்புகளை இணைக்கும் ஒரு நகாசு வேலை செய்துகொண்டிருக்கிறேன். படிப்போரும் , பிள்ளையாரும் இன்னும் சில நாட்கள் பொறுத்தருள்க!

இப்போது----

சென்ற வாரங்களில் ஆங்கிலத் தொ(ல்)லைக்காட்சி சேனல்களிலும் , பத்திரிகைகளிலும் பர பரவென்று அடிபட்ட நிகழ்வுகள் இரண்டு .

ஒன்று - பார்லிமென்ட்டில் கூச்சல்-குழப்பம் விளைவித்து எதிர்க்கட்சிகள் - முக்கியமாக காங்கிரஸ்- நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைத்தது.

இரண்டு- பாராளு மன்ற காண்டீனில் , அங்கத்தினர்களுக்குக் கிடைக்கும் "அநியாய சலுகை விலை (subsidized price ).

இந்த இரண்டு நிகழ்வுகளையும் சேர்த்து ஒரு குறும்(புக்) கவிதை.

அன்புடன்

ரமேஷ்.

 
 




நாடாளு மன்றத்தில் நாள்தோறும் கூச்சலிட்டு

முடக்கிட்ட எம்பீக்கள் எல்லோரும்-- உடல் களைத்து

ஓடியே சலுகை விலைக் கேன்டீனில் சாப்பிட்டு

விட்டார்கள் பெரிய ஏப்பம்.







Aug 13, 2015

kavi vanakkam

என்னுடைய முதல் பதிவை ஆனைமுகனுக்கு ஒரு விண்ணப்பத்துடன் ஆரம்பிக்கிறேன்.



கவி வணக்கம்

 

மதங்கொண்ட களிர்முகத் தரக்கனைப் பொருதிட்டு
வதம்செய் தவன்மீத மர்ந்தவா  ---- நிதமுமே
பணிந்துன்னைப்   பண்பாடி பைந்தமிழில் வாழ்த்தவே
முனைந்தே புனைந்தேனோர் பாடல்                                                1                                          


அரன்அரிந்த சிரம்விடுத்து  கரிமுகம் தரித்தவனை
பரம்பொருளும் கரம்குவித்து வணங்குமே ---- கரமைந்து
பெற்றவனை வணங்கிநான்  வேண்டிடும் வரமொன்று
நற்றமிழ்க் கவிதைத் திறம் .                                                               2
 
குறிப்பு:
1. யானை முகம் கொண்ட கஜமுகாசுரன் என்ற அரக்கனைக்  கொன்று அவனைத் தன்  வாகனமாக மாற்றிய கதையைக் குறிக்கும்.
2. பார்வதியின் உத்தரவின்படி வாயிலைக் காத்துக்கொண்டு இருந்த சிறுவனான விநாயகர் ,சிவபெருமானையே உள்ளே விட மறுத்ததால் சினம் கொண்ட சிவன் , அச் சிறுவன் தன்  மகன்தான் என்று உணராமல் ,அவரது தலையைக் கொய்து எறிந்தார்! பின்னர்  ஒரு யானையின் தலை அவருடைய உடலுடன் இன்னைக்கப்பட்டது என்பது வரலாறு. இது ஒரு கதைச் சுருக்கமே!  விரிவான கதையை அறிய வேண்டுவோர் இணையதளத்தின் இன்னைப்புகளை அணுகவும்.
 
இடைத் தொடர்ந்து அடுத்து வரும் பதிவுகளில் , அவர் மீது தொடுக்கப்பட ஒரு பதிகத்தை பதிப்பேன்.

அன்புடன்

ரமேஷ்
13-8-2015
 

Aug 11, 2015

முன்னுரை

முன்னுரை 

இன்று என்னுடைய வலைப்பதிவு (blog) க்கு  பிள்ளையார் சுழி போடப் போகிறேன்- !

இதை ஆரம்பத்திதற்கு முக்கிய உந்துதல்கள்  பல. ஆனால் அவற்றுள் முக்கியமானது இது - நான் வேலையிலிருந்து ஓய்வெடுத்த பின்னர் பொழுது போக்காக தமிழ் கவிதைகள் புனைய ஆரம்பித்தேன்.
அவற்றை என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பியபோது " அட, பரவாயில்லையே! நன்றாக இருக்கிறதே! " என்ற விமர்சனங்கள் வந்தன. இதனால்  ஊக்கம் கொண்டு மேன்மேலும் நான் கவிதைகள் அனுப்பி கருத்துக்கேட்க ஆரம்பித்தேன். அவைகளுக்கும் நல்ல பாராட்டுக்கள் வந்தன. நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் , நண்பர்களிடமிருந்தும் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதைத் தவிர , வேறு ஒரு, மேலும் நடுநிலையான, தமிழ் கவிதைகளுடன் சற்று அதிகமான உறவு கொண்டிருக்கும்படியான, ஒரு " வாக்காளர் தொகுதி"(constituency ) யிடமிருந்து திறனாய்வு செய்த மதிப்பீட்டைப் பெற வேண்டினேன்.( உறவினர்களே! நண்பர்களே! உங்கள் தமிழ் அறிவை குறைத்து மதிப்பிடவில்லை! உங்கள் மதிப்பீடு ' காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு  --' போல இருக்கலாம் இல்லையா?  ஷொட்டுக்களோடு அவ்வப்போது சில திட்டுக்களும் கிடைத்தால் திருத்திக்கொள்ளலாம்  இல்லையா?  ). இப்படி நான் யோசிக்கையில்
'ஏன் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கக்கூடாது' என்ற ஒரு யோசனை என் மகனிடமிருந்து வந்தது, அதன் விளைவே இது.

சரி, வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவாகிவிட்டது. அடுத்ததாக 'என்ன பேர் வைக்கலாம் ?'என்ற கேள்வி எழுந்தது. என் வலைப்பதிவில்  கவிதைகல் மட்டும் அன்றி, வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.  'கனவுகள்,நினைவுகள், கவிதைகள்,  நிகழ்வுகள் ' ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ப்ளாக் கிற்கு 'கனிகள் '    (க- நி -க-நி )  என்ற பெயர் ஒரு பெருந்தேடலுக்குப்பின் முடிவானது.  ஆனால் ஏற்கனவே இந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டிருந்ததால் 'கனித்தோட்டம்' என்று நாமகரணம் ஆயிற்று.

இந்த முன்னுரைப் பதிப்புடன்  , தமிழ்க் கடலின் கரையோர மண்ணில் என் சிறு காலடிகளைப் பதிக்கிறேன். அவை நிலைக்குமா? நீடிக்குமா ?- என்பதை காலமும், நீங்கள் தரும் ஆதரவும் முடிவு செய்யும்.

என் அடுத்த பதிவு ஒரு கவிதையுடன் தொடங்கும்.                                                               1

அன்புடன்

ரமேஷ் .