Search This Blog

Aug 11, 2015

முன்னுரை

முன்னுரை 

இன்று என்னுடைய வலைப்பதிவு (blog) க்கு  பிள்ளையார் சுழி போடப் போகிறேன்- !

இதை ஆரம்பத்திதற்கு முக்கிய உந்துதல்கள்  பல. ஆனால் அவற்றுள் முக்கியமானது இது - நான் வேலையிலிருந்து ஓய்வெடுத்த பின்னர் பொழுது போக்காக தமிழ் கவிதைகள் புனைய ஆரம்பித்தேன்.
அவற்றை என் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பியபோது " அட, பரவாயில்லையே! நன்றாக இருக்கிறதே! " என்ற விமர்சனங்கள் வந்தன. இதனால்  ஊக்கம் கொண்டு மேன்மேலும் நான் கவிதைகள் அனுப்பி கருத்துக்கேட்க ஆரம்பித்தேன். அவைகளுக்கும் நல்ல பாராட்டுக்கள் வந்தன. நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் , நண்பர்களிடமிருந்தும் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதைத் தவிர , வேறு ஒரு, மேலும் நடுநிலையான, தமிழ் கவிதைகளுடன் சற்று அதிகமான உறவு கொண்டிருக்கும்படியான, ஒரு " வாக்காளர் தொகுதி"(constituency ) யிடமிருந்து திறனாய்வு செய்த மதிப்பீட்டைப் பெற வேண்டினேன்.( உறவினர்களே! நண்பர்களே! உங்கள் தமிழ் அறிவை குறைத்து மதிப்பிடவில்லை! உங்கள் மதிப்பீடு ' காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு  --' போல இருக்கலாம் இல்லையா?  ஷொட்டுக்களோடு அவ்வப்போது சில திட்டுக்களும் கிடைத்தால் திருத்திக்கொள்ளலாம்  இல்லையா?  ). இப்படி நான் யோசிக்கையில்
'ஏன் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கக்கூடாது' என்ற ஒரு யோசனை என் மகனிடமிருந்து வந்தது, அதன் விளைவே இது.

சரி, வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவாகிவிட்டது. அடுத்ததாக 'என்ன பேர் வைக்கலாம் ?'என்ற கேள்வி எழுந்தது. என் வலைப்பதிவில்  கவிதைகல் மட்டும் அன்றி, வேறு சில விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.  'கனவுகள்,நினைவுகள், கவிதைகள்,  நிகழ்வுகள் ' ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளும் இந்த ப்ளாக் கிற்கு 'கனிகள் '    (க- நி -க-நி )  என்ற பெயர் ஒரு பெருந்தேடலுக்குப்பின் முடிவானது.  ஆனால் ஏற்கனவே இந்தப் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டிருந்ததால் 'கனித்தோட்டம்' என்று நாமகரணம் ஆயிற்று.

இந்த முன்னுரைப் பதிப்புடன்  , தமிழ்க் கடலின் கரையோர மண்ணில் என் சிறு காலடிகளைப் பதிக்கிறேன். அவை நிலைக்குமா? நீடிக்குமா ?- என்பதை காலமும், நீங்கள் தரும் ஆதரவும் முடிவு செய்யும்.

என் அடுத்த பதிவு ஒரு கவிதையுடன் தொடங்கும்.                                                               1

அன்புடன்

ரமேஷ் .


1 comment:

  1. இப்படித்தான் நண்பர்கள் உசுப்ப நாம் கவிதைப் பித்தாய் அலைவோம். எனினும் இனிய பொழுது போக்கு. என்னையும் 63-ம் வயதில் தூண்ட 128 கவிதைகள், 28 கட்டுரைகள், 18 சிறுகதைகள் கடந்த ஒரு வருடத்தில் புனைந்துள்ளேன். eluthu.com ஊக்கமளிக்கும் தளம்... தங்கள் எழுத்து சிறப்பாக உள்ளது. நிறைய எழுதுங்கள்...

    ReplyDelete