Search This Blog

Apr 15, 2021

ரீப் மோட்டாரின் சாதனை!

ரீப் மோட்டாரின் சாதனை!

உற்பத்தி தொடங்கி ஒருவருடத்திற்குள்ளாகவே மின்கல ஊர்திகளை உற்பத்தி செய்யும் பணியில் இந்திய நிறுவனங்களிலேயே நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது நண்பன் துரைராசின் ரீப் மோட்டார் நிறுவனம்!

சுற்றுச்சூழலைச்  சிதைக்காமல் நகர் வலம் வந்து  வீதிகளைச்  சுத்தம் செய்யும் நற்பணியில் ஈடுபட்டுள்ள உர்பேசர் - ரீப் நிறுவனங்களை பாராட்டி சில மாதங்களுக்கு முன் நான் எழுதி வைத்து பதிக்க  மறந்த ஒரு கவிதை இது!

இந்தத் தருணத்தில் இக்கவிதையைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 













தெருக்குப்பை தனைக்கூட்டி துப்புரவு செய்தொழிலில் 
உருபேசர்* நிறுவனத்துக் குறுதுணையாய் இருக்கின்ற,   *urbaser
சுற்றுச் சூழலையே சற்றும் சிதைக்காமல் 
முற்றுமதைக் காக்கின்ற மின்கலத்து ஊர்திகளை,
உற்ற நம்நண்பன் துரைராசின் தொழிற்கூடம்   
உற்பத்தி செய்கின்ற நற்பணியைச் செய்கிறதாம்!
பெற்றிகள்  பலபெற்று வெற்றிகள் வந்தடைய 
கற்றவர் உன்கூட கரந்தட்டி வாழ்த்துகிறோம்!

Apr 14, 2021

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!


சார்வரி ஆண்டின் ஊர்வலம் முடிந்து 

பிலவம்  உலவத் தொடங்கும் இந்நேரம் 

கலவரம் ஊட்டும் கொடுநோய்த் தாக்கம் 

உலகினை விட்டு அகலவே வாழ்த்து !


சுலபம் இல்லை இச்செயல் எனினும் 

பிலவ ஆண்டும் விலகும் வரையில் 

வாயையும்  மூக்கையும் நன்றாய் மூடி 

நோய்பர வுதலை நிறுத்திட வாழ்த்து.


முகத்தைக் கவசம் மூடிய போதும் 

அகத்தை அனைவரும் அகலத்  திறந்து 

மதமின  மொழியெனும் வேற்றுமை மறந்து 

நிதமும் நலமுடன் வாழநல் வாழ்த்து!


அன்புடன் 

ரமேஷ் 

Feb 14, 2021

வேலன்டைன் தினம்

வேலன்டைன் தினம்  

"இதழா, இலையா?" என்ற என்னுடைய பதிவிற்கு வந்த சில கருத்துக்கள் " என்ன, ரமேஷுக்கு இளமை திரும்பிகிறதா?" என்ற  ரீதியில் இருந்தன! உதாரணம் - சுந்தர், வரதராஜன் ஆகியோருடைய கருத்துக்கள்!

Initial reaction was - Ramesh is becoming Romantic! - Sundar

Your imagination has brought out your your sensuous side! - B.Varadarajan

என்னுடைய பதில் - 

With Valentine's day approaching, can Romance be far behind?

வயதானவர்கள் காதலைப் பற்றி முன்பு எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதை மீள்பதிவாக பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்புடன்

ரமேஷ் 

வயதானவர்களுக்கும் வேலன்டைன் 
(அல்லது)  
தயங்காமல் காதல் செய்வீர்.
  


 


வேலன்டைன் கொண்டாட்  டங்கள்   
வாலிபர் களுக்குத்  தானா?
வயதானோர்க்  கில்லை யென்ற 
நியதிகள் எதுவும உண்டோ??

காதலை முதலில் செய்து 
சாதிகள் சேரா ததனால் 
பாதியில் அதனை விட்டு 
மீதிக்கு மாறு வோரும்  

டைம்பாஸ் மட்டும் செய்ய  
கேர்ள்பிரெண்  டோடு  தினமும் 
கடற்கரை மணலில் அமர்ந்து  
கடலையைப்  போடு வோரும்  

ஆசையாய்  சிலநாள் மட்டும் 
அன்பைப்  பரிமாறிப் பின்னால் 
பேஸ் புக்கில் ஸ்டேட்டஸ் மாற்றி 
சிங்கிள்எனச் சொல்லும் சிலரும் 

ஒருவருக்  கொருவர்  இன்று 

வேலன்டைன் கொடுக்கும் போது 

திருமணம் முதலில்  செய்தும்  

காதலைப் பின்பே  செய்தும்  

கருத்துக்கள் முழுதும்  ஒத்துப் 

போகவே இல்லை  எனினும்  
புரிதலுடன் ஒருவர்க்கொருவர்  
விட்டுக் கொடுத்து வாழும் 

நரைமயிர் தம்பதிகளுமே  

வெட்கத்தை விட்டு இன்று 
வருடத்திற் கொருநா ளேனும் 
வேலன்டைன் அளித்துக்  கொள்வீர்*.

வேலன்டைன் கொண்டாட் டங்கள்   
வாலிபர்க்கு மட்டும் இல்லை 
வயதாகிப் போனால்  என்ன? 
தயங்காமல் காதல் செய்வீர்.

 





Feb 12, 2021

இதழும் இலையும்

என் கல்லூரி நண்பர் கோவிந்தராஜன் "whatsapp " ல் அனுப்பிய இந்தப் படத்தின் 

உந்துதலால் உதித்த ஒரு கவிதை!

அன்புடன் 

ரமேஷ் 


இதழும் இலையும்




செந்தூரச் சிவப்பினையே குழைத்திட்ட அழகிதழோ?
கண்டோர்கள் களிகொள்ளும் வண்டூரும் மலர்முகத்தாள் 
செங்கனிவாய் இதழ்கள் சிந்துகின்ற புன்னகையோ?
இங்கிதுபோல் இதழழகை இதுவரையில் கண்டதில்லை!
இதழழகே இதுவென்றால் மொத்த முகஅழகு 
இதுபோல இருமடங்கு இருக்குமென்ற கற்பனையில் 
அலைபாயும் மனத்தினையே அடக்கிவிடு நண்பா நீ!
இலையொன்று கீழே விழுந்து கிடப்பதையே 
மது வழியும் உதடென்று மயங்கியே  நிற்காதே!
எதையுமோர் முறைமட்டும் நோக்காமல் இருமுறையாய் 
கண்காணும் காட்சியினை மனம்பதிக்கும் முன்னாலே 
என்னஅது எனப்பகுத்து அறிதலே முறையாகும்!!  

Feb 4, 2021

பிறவிப் பயன்

 "பிறவிப் பயன்"

சென்ற வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று 1970 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற என்னுடைய பொறியியல் கல்லூரி கல்லூரிக்  குழு நண்பர்கள் அனைவரும் கோவையில் சந்தித்துப்  பொன்விழா கொண்டாடினோம். 

அந்த சமயத்தில், அந்த வருடம் தேர்வு பெற்ற  எல்லா நண்பர்களைப்  பற்றிய விவரங்களையும்  சேகரித்து, அதனோடு  அவர்கள் குடும்பப் புகைப்படத்தையும் இணைத்து   எங்கள்  கல்லூரித் தோழன் எக்ஸ். துரைராஜால் ஒரு  நினைவுப் புத்தகம் , "பிறவிப் பயன்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 

அந்த பொன்விழா நிகழ்வு நடைபெற்று இன்னும் சில நாட்களில்  ஒரு ஆண்டு நிறைவடையப்  போகிறது.

அதை நினைவு கூறும்  வகையில் , பிறவிப்  பயன் என்ற தலைப்பில் ஒரு வெண்பா பாடல் தொகுப்பை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

அன்புடன் 

ரமேஷ் 



பிறவிப்  பயன்

வீடு மனைவாங்கி வங்கிப் பணம்சேர்த்தால்
தேடும் மனஅமைதி கூடுமோ?- வாடும்
நலிந்தோர்க்கு நாம்செயும் நல்லுதவி மூலம்
பலிக்கும் பிறவிப் பயன் .

(இருவிகற்ப நேரிசை வெண்பா )


இவ்வுலக வாழ்வினை  நாம்விடுக்கு முன்னமே   
செவ்விய நற்செயல் செய்வதால்  - இவ்வுலகோர் 
நல்லான்  இவனென்று சொல்லியே  உள்ளிடின்*          
பல்கும்   பிறவிப் பயன்.

உள்ளுதல் = நினைத்தல்,எண்ணியிரங்கல்
(இருவிகற்ப நேரிசை வெண்பா )



உறவை  ஒதுக்கி   தொடர்புகள்   நீக்கி 
துறவறம் பூணுதல் வேண்டாம் - அறவழிப் 
பாதையை  மீறாமல்  நேரே  நடந்தால் 
அடைவோம் பிறவிப் பயன் 
(பல விகற்ப இன்னிசை வெண்பா)


இனிதான தாயினும் மானிடச் சன்மம்    
இனிமீண்டும் ஏனோ உனக்கு - மனிதா 
கனியிருப்பக்  காயேன்?  பிறத்தலை மீண்டும்**      
துணித்தலே *   பிறவிப் பயன்.

துணித்தால் = துண்டித்தால் 
** மீண்டும் பிறத்தலை என்று பொருள் கொள்ளவும்.

(இருவிகற்ப நேரிசை வெண்பா )








Jan 22, 2021

ஒரு ஜனனம் , ஒரு மரணம்


ஒரு ஜனனம்; ஒரு மரணம் 




ஒரு ஜனனம் , ஒரு மரணம்  

சாதனைகள் படைத்த சாமானி யர்இருவர் 

வெற்றிக் கோப்பையுடன் வீடு திரும்புகையில் 

இருவரின் கண்களிலும் பெருகிவரும் கண்ணீரே!

காரணமோ வெவ்வேறு! விதியெழுதிய கதையிதுவே!


சின்னப்பன் பட்டியெனும்  சிற்றூரிலே பிறந்து 

முன்னேறப் போராடி வெற்றிகண்ட நடராசன் 

தொண்ணுறு நாட்களுக்கு முன்பிறந்த தன்மகவை 

கண்ணார முதல்முறையாய் கண்டு அணைக்கையிலே 

கண்ணூறிக் கன்னத்தில் வழிகிறது  கண்ணீரே!


ஐதரா பாத்நகரின் ஆட்டோ ஒட்டிமகன் 

தாய்நாடு திரும்புகையில் தந்தை உயிரோடில்லை!

விதையிட்டு விளையாட்டு ஆர்வம் வளர்த்தவரை 

புதைத்திட்ட இடமடைந்து சதைகுலுங்க அழுகையிலே 

கருவிழியில் அருவியெனப் பெருகுவதும் கண்ணீரே!


ஒருவரது கண்ணீரின் பின்னணியில் ஜனனம்!

மற்றவரின் கண்ணீரின் காரணமோ மரணம்!

விதியெழுதிய கதை இதுவே! வேறன்ன கூறுவது?


 அன்புடன் 

ரமேஷ் 

 

Jan 20, 2021

சாதனையும் வேதனையும்

சாதனையும் வேதனையும் 

நேற்றைய  இரு நிகழ்வுகளில் ஒன்று சாதனை; மற்றொன்று வேதனை.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை அதிரடியாக வெற்றி கொண்டது சாதனை.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் சாந்தா இறைவனடி அடைந்த செய்தி வேதனை.

இவைகளைப் பற்றி வெண்பா வடிவில் ஒரு பதிவு.

அன்புடன் 

ரமேஷ் 


சாதனை 

முன்னணி  வீரர்கள் ஐவர் ,அடிபட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் இருந்தபோதும், அனுபவமே அற்ற மாற்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியொன்றை அமைத்து , எவரும் கனவிலும் நினைத்திராத முறையில் சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தார்கள்!


அஞ்சுபேர் நோயால்  அணியிலில் லாபோதும் 

அஞ்சாமல் ஆடியே வென்றார் விளையாட்டில் ! 

"ஆசி"யரின்*  ஆணவத்தை நீக்கி முகத்திலே 

பூசினார் நன்றாய்  கரி.

                                                                                             (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

* ஆஸ்திரேலியர்கள்  " ஆசீஸ் " என்று சுருக்கி அழைக்கப்படுவர்.



வேதனை



புற்றுநோய் பீடித்து வாடுகின்ற பேர்களுக்கு 

சற்றும் ஓய்வின்றி சேவை செய்தவளே! 

மற்ற உலகோற்கும் உன்சேவை தேவையென

சென்றாயோ அங்கே விரைந்து ?

                                                                                             (பலவிகற்ப இன்னிசை வெண்பா)