நாளை மார்கழி மாதக் கிருத்திகை நாள்.
என்னுடைய எழுபதாம் பிறந்த நாள்!
என்னுடைய எழுபதாம் பிறந்த நாள்!
இந்த எழுபது ஆண்டு வாழ்க்கைப் பாதையில் என்னோடு இணைந்து பயணித்து எனக்கு உறுதுணையாக விளங்கிய என் குடும்பத்தினருக்கும் , உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
ரமேஷ்
எழுபது ஆண்டுகள்
எழுபது ஆண்டுகள் இப்புவி யுலகில்
முழுவதும் வாழ்ந்து முடிக்கும் இந்நாளில்
அழகிய வாழ்வை அளித்த இறைவனை
தொழுது வணங்கித் தொடர்வேன் வாழ்வை.
அழுகுரல் ஒலிக்க இத்தரை மேலே
விழுந்த என்னைத் தழுவி எடுத்து
அணைத்து வளர்த்து அறுசுவை ஊட்டி
அனைத்திலும் சிறக்க நல்வழி காட்டி
வளர்த்த அன்னை தந்தை யருக்கும்
தெள்ளிய தமிழ்மொழிப் பாடத் துடனே
வெள்ளையர் மொழியும் விஞ்ஞா னங்களும்
எண்கணி தங்கள் அறிவியல் பொறியியல்
எனப்பல துறையிலென் அறிவை வளர்த்த
ஆசிரி யப்பெருந் தகையர் களுக்கும்
நாற்பத் திரண்டு ஆண்டா யென்கை
கோர்த்து நடக்கும் இனியவென் மனையாள்
தன்சுகம் தன்னலம் என்றும் நினையாள்
என்னலம் மட்டும் நினைத்திடும் இணையாள்
இத்தகு வாழ்க்கைத் துணையா ளுக்கும்
இவனின் தந்தை என்னே என்று
அவையோர் அனைவரும் புகழும் வகையில்
செய்கா ரியங்கள் சிறப்புறச் செய்தும்
பெயர்த்திகள் மூவரைப் பரிசாய் அளித்தும்
வேர்கள் களைத்துநான் சோர்ந்திடும் போது
விழுதாய் ஊன்றி என்னைத் தாங்கும்
இருமகன் கட்கும் அவர்தம் துணைக்கும்
பெற்றோர் வழியில் வந்த உறவுகள், (நான்)
பெற்றவர் மூலம் உற்ற உறவுகள்
முந்திப் பிறந்த மூத்த உறவுகள்
பிந்திப் பிறந்த இளையோர் என்று
பரந்து விரிந்தவென் குடும்பத் தார்க்கும்
பள்ளியில் என்னுடன் கூடப் படித்தோர்
கல்லூ ரிகளில் கூடப் பயின்றோர்
அலுவல கங்களின் சகபணி யாளர்
புலவர் குழுவில் பாடல் புனைவோர்
எனப்பல தளங்களில் என்னோ டிணைந்து
மனமிக மகிழ்வுடன் துணையாய் நின்றென்
நலனை வேண்டும் நண்பர் பலர்க்கும்
இந்நாள் வரையில் என்னுடன் இருந்து
என்குணக் குறைகள் யாவையும் பொறுத்து
அன்பைப் பொழிந்த அத்தனை பேர்க்கும்
என்னெனக் கூறி நன்றி நவில்வேன்?
என்னெனக் கூறி நன்றி நவில்வேன்?
பின்வரும் எஞ்சிய காலம் முழுதும்
என்றும் இதுபோல் ஒருவரோ டொருவர்
குன்றா அன்புடன் கூடி இருக்க
குன்றுறை குமரன் கருணை புரிக !




