Search This Blog

Sep 16, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 25

 குறள் மேல்வைப்பு வெண்பா - 25

கொங்கணவர் ஒரு சித்தர். போகரின் மாணாக்கர். இவர்  பற்றிய கதை ஒன்று உண்டு. கொங்கணவர் ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டது. உடனேகொங்கணர் கண்ணை விழித்து அக்கொக்கை பார்த்தார். அது எரிந்து சாம்பலாயிற்று. அதன் பிறகு நீண்ட நாள் தவத்திலிருந்து விழித்தமையால் ஆகாரம் உண்ண ஊருக்குள் வந்து ஒரு வீட்டிற்கு சென்று உணவு கேட்டார். அது அந்த அம்மையார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். ஆதலால் அவர் பிச்சை கொண்டுவர சிறிது நேரமாயிற்று. நேரங்கடந்து பிச்சையிட வந்ததால்  சினம் கொண்ட கொங்கணர், "என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி கடுங்கோபத்தோடு விழித்துப் பார்த்தார்ஆனால் அந்த அம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. இதுகண்டு கொங்கணவர் திகைப்புற்றார்! .உடனே அந்த அம்மையார் நகைத்து 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!" என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

சிலர் இந்த அம்மையார் திருவள்ளுவரின் மனைவி வாசுகி என்றும் கூறுவது உண்டு.

இது குறித்து ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா! ! இல்லறவியலில் இடம் பெற்ற குறள் எண் 58

அன்புடன்

ரமேஷ்

பின் குறிப்பு
இந்தக் காலத்துக்கு ஒத்துப்போகுமா என்பது கேள்விக்குரியதே!! இருந்தாலும் பதிவிடுகிறேன்!


"கொங்கணவா கொக்கென்று எண்ணினையோ என்னை"யெனத் 

தங்கணவன் சேவையையே முன்வைத்தாள் - மங்கையிவள்.-

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

                                                                                        (பல விகற்ப இன்னிசை வெண்பா)


குறள் 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 

புத்தேளிர் வாழும் உலகு

பொருள் 

கணவனைப் போற்றி  கடமையைச் செய்யப் பெற்றால் , மகளிர் பெருஞ்சிறப்பையுடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.

English version by Suththaanandha Bharatiyaar

Women who win their husbands' heart
Shall flourish where the gods resort.



Sep 12, 2024

நான் வசிக்கும் குடியிருப்பில் இருக்கும் நண்பரது மகளின் வளைகாப்பு , சீமந்த விழாக்களில் கலந்து கொள்கையில் எழுதிய பாடல்கள்! நண்பருடனும் அவரது குடும்பத்தினருடனும் பகிர்ந்துகொண்டேன்! 

எனது கனித்தோட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் நிறைவு குறித்து பதிவு செய்கிறேன். பதிப்பிற்கு  மட்டுமே!  பகிரவில்லை!

அன்புடன் 

ரமேஷ் 

வளைகாப்பன்று 


வளர்பிறையில் இந்நன்னாளில் அன்னையிவள் கருவறையில் 

வளர்கின்ற இளம்பிறையை  வரவேற்கும் முகமாக 

மங்களப் பெண்டிர் பலர் பிரியமுடன் அணிவகுத்து 

மங்கையிவள் தளிர்க்கரத்தில் வளையடுக்கும் நாளின்று  

எங்கள் இதயம்நிறை வாழ்த்து!


சீமந்தத்தன்று 


சீவிச் சிங்காரம் செய்து 

நன்பட்டில் ஆடை யுடித்தி 

 

பூவைத்து  பொட்டும் வைத்து 

பெண்ணவளை மணையில் ஏற்றி 


நாவிட்டு வேதியர்கள் 

நான்மறைநல் மந்திர மோதி 


நெய்விட்டு தீ வளர்த்து 

தேவியரின் அருளை  வேண்டி 


சீமந்தம்  காணும் பிரியா   

சீரும் சிறப்புடன் இருக்க

 

நாமிங்கு அனைவரும் கூடி 

நல்வாழ்த்துக் கூறிடு வோமே .




Sep 5, 2024

இறப்பில்லாமல் இருப்பது எப்படி?

இந்தப் பதிவிற்கு முன்னுரையும், விளக்கங்களும்  தேவையில்லை!

அன்புடன் 

ரமேஷ் 


இறப்பில்லாமல்  இருப்பது எப்படி?


புதைத்தால் ஆறடி எரித்தால் ஓர்பிடி 

இதைத்தான் அடைவோம் இறுதியிலே 

அதைத்தான் விதித்தான் ஆண்டவன் நமக்கு 

அதனை மாற்றுதல் இயலாதே!

எதைத்தான் நம்முடன் எடுத்துச் செல்வோம் 

எதுவும் நம்முடன்  வருவதில்லை - (நாம்) 

விதைக்கும் நற்செயல்  விளைக்கும் பயன்மட்டும்  

நிலைத்தே  நம்பின் வாழ்ந்திருக்கும் ! 

முதுமூப் படைந்து உயிர்த்துளி உதிருமுன் 

விதைகளை இன்றே ஊன்றிடுவோம்! 

இதை நாம் செய்தால் மற்றவர் மனதினில் 

இறப்பில் லாமல் வாழ்ந்திடலாம்!