Search This Blog

Aug 30, 2024

தக்காளியில் எக்காளம்

தக்காளியில் எக்காளம் 

ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் தக்காளிகளை ஒருவர் மேல் எறிந்தும், தக்காளிகளைப்  பிழிந்தெடுத்த சாற்றில் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தும் ஒரு குதூகலக் கொண்டாட்டம் (???) நடைபெறுமாம்! 

இது குறித்து, என் நண்பர் ஒருவர் படத்துடன் அனுப்பிய செய்தித் துணுக்கு இது!  இந்தப் படத்தின் உந்துதலால் நான் எழுதிய ஒரு குறும்(புப்) பாடல்-வெண்பா வடிவில் !

அன்புடன் 

ரமேஷ் 






தக்காளிச்  சேற்றினிலே  முங்கிக் குளித்தபடி 

எக்காளம் இட்டிடுவார் கட்டிப் பிடித்திட்டு  

வெட்கிச் சிவக்கவில்லை கன்னியிவள் கன்னங்கள் 

தக்காளிச் சாறுபட் டே   .  

                                                                                  (பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 

Aug 22, 2024

மழையும் கவிதையும் - ஒரு சுழற்சி

மழையும் கவிதையும் - ஒரு சுழற்சி 

சில நாட்களுக்கு முன் பெங்களூரில் பனர்கட்டா அருகில் உள்ள ஒரு விடுமுறை ஓய்வகத்தில்  தங்கி இருக்கையில் , வானில் மழைநீர் சுமந்து மிதக்கும் கருமுகில் கூட்டத்தைக் காணுகையில், மனதில் எழுந்த ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




கருத்த நிறத்தில் நீரைச் சுமந்து வானில் மிதக்கும் மேகங்கள் 

கருவில் கருத்தை நிறைத்து வைத்து மனதில் மிதக்கும் எண்ணங்கள் 

மலையை மேகம்  தொடுகின்ற  போததன்  தேகம் குளிர்ந்து மழை பொழியும் 

அலையும் எண்ணம்   இதயம்  தொடுகையில்    எழுத்தோ  டிணைந்து  கவியாகும்  

பொழியும்  மழையால் நதிநீர்  நிறைந்து கழனியில்  பாய்ந்து வளம் செழிக்கும் 

விழுமிய மொழிதனில்  எழுதிய கவிதையைப்  பழகியோர்  மனங்களில் விழிப் பெழும்பும் . 

நதிநீர் ஓடிக்  கடலினுள் கலந்து  கடல்நீர் மீண்டும் முகிலாகும் 

அதுபோல் கவிதையும் கற்பவர் மனதினில் கருவாய் மறுபடி உருவாகும் 



Aug 17, 2024

பிரதோஷப் பாடல் - 49

 பிரதோஷப் பாடல் - 49






  


வேத நாயகன் நாத போதகன்

-----சோதி வானவன் ஆதி சிவன்

பாதி உடலைப்பார் வதிக்கு அளித்தவன் 

-----நீல கண்டனவன் நடன சிவன்- *இத்                     *இத்தேதி = இந்தப் பிரதோஷநாள் 

தேதி யன்று*வீ பூதியணிந்து (ஸ்)தல                        *வீபூதி = திருநீறு 

-----நேதி* தவறாமல் வணங்குவரை                                  * நேதி = நியதி 

பாது காப்பவன் யாது மானவன் 

-----பாடி அவனையே போற்றிடுவோம்


Aug 8, 2024

குறள் மேல்வைப்பு வெண்பா - 24

 குறள் மேல்வைப்பு வெண்பா - 24

இரண்டு நாட்களுக்கு முன் இந்திய மங்கை வினீத் போகாத், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்  பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனை  வென்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சியுறச் செய்தது. தங்கப் பதக்கத்தை அவர் தட்டிச் செல்வார் என்று அனைவரும் உறுதியாக நம்பினர். ஆனால் அடுத்த நாளே "அவர் எடை பரிசோதனையில் கேவலம் ஒரு 100 கிராம் அளவு மட்டும் 50 கிலோவை மிஞ்சியதால், போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்" என்ற செய்தி பேரிடியாக வந்தது.

இந்த செய்தி எனக்கு வலியறிதல் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறளை நினைவு படுத்தியது.

அதன் விளைவாக ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா!

அன்புடன் 

ரமேஷ் 



 

மயிரளவே   கூடியதால்    தங்கம்   இழந்து   

துயருற்றாள் தோகையாள்  போகாத் - பயிற்பாடம் 

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 

சால மிகுத்துப் பெயின்  

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

விளக்கம் : மென்மையான மயிலிறகு தான் என்றாலும், ஒரு சிறிய அளவுகூட, தாங்கும் அளவுக்கு மேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறியும் . அதுபோலவே இங்கு 50 கிலோவுக்கு மேலே 100 கிராம் மட்டுமே அதிகம் என்றாலும், (0.2 சதவீதம்) போகாத் பதக்கத்தை இழக்க நேர்ந்தது!