Search This Blog

Sep 28, 2023

நீத்தார் கடன்

நாளை முதல் மாளைய பக்ஷம் என்று அறியப்படும் 15 நாட்கள் தொடங்குகிறது. இந்த நாட்கள் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி தெரிவிக்க உகந்த நாட்களாகக் கருதப்படுகிறது. வெவ்வேறு பிரிவினர் அவரவர்களுடைய முறைப்படி நீத்தார் வழிபாடுகளை செய்வர். எள் நீர் விடுவதும், காகங்களுக்கு உணவு படைப்பதும் பலரது வழக்கம். இது குறித்து இரு சிறு பாடல்கள்.

அன்புடன் 

ரமேஷ்  

நீத்தார் கடன் 





ஆலயம் சென்றேநாம் ஆண்டவனை வேண்டுதலின்

மாளயத் தன்றுநம் முன்னோரைக்  கும்பிட்டு 

எள்ளோடு நீர்சேர்த்து தர்ப்பணமாய் வார்ப்பதுவே 

சாலச் சிறந்த செயல்  

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

 




தேகத்தைத் துறந்திட்டு மறைந்திட்ட முன்னோரின் 

தாகத்தைத் தீர்த்திடவே எள்நீரை அளிக்கும் நாள்; 

நாமளிக்கும் நெற்சோறை காகத்தின் வடிவத்தில் 

தாமதித்தல் ஏதுமின்றி வந்துண்டு வாழ்த்துவரே !

(கலிவிருத்தம்)

  



Sep 26, 2023

குறள் மேல்வைப்பு வெண்பா- 23


குறள் மேல்வைப்பு வெண்பா- 23 

சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த ஆசியா கோப்பையின் இறுதி ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் பரிசாக 5000 டாலர்களைப் பெற்றார். ஆனால் அப்பணத்தை அவர் அக்கோப்பைக்கான எல்லாப் போட்டிகளிலும் சிறப்பாகப் -- குறிப்பாக மழை நாட்களில்-பணியாற்றிய  களப்பணியானர்களுக்கு அளித்து அவர்களைப்  பாராட்டினார். அனைவரையும் நெகிழச் செய்த இந்நிகழ்ச்சி பற்றி ஒரு குறள் மேல்வைப்பு வெண்பா.*

அன்புடன் 
ரமேஷ் 

*குறள் மேல்வைப்பு வெண்பா பற்றி ஒரு சிறு குறிப்பு 
Thirukural is called Tamil Vedam. It comprises of 133 chapters, each containing 10 couplets of two lines. This a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it. 
The Kural (short form of Thirukural) has messages for all times. There are stories of many great men, who have lived by these messages. The Kural Melvaippu venbaa is an effort to relate these inspiring stories to the Kural. 
I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural. Also appended is an English version of the Kural, in poetic form, written by Rev.Pope and Suththananda Barathiyaar,


Indian pacer Mohammed Siraj on Sunday donated his player-of-the-match cash prize of USD 5,000 to the Sri Lankan groundstaff who worked tirelessly through the rain-hit Asia Cup.


வெற்றிக்குக் காரணனாய்ப் பெற்றதொரு பொற்கிழியை 

மற்றவர்க் கேயளித்த பெற்றிமையான்* சிர்ராஜன்**.             

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

*பெற்றிமை=பெருமை

**சிர்ராஜன்=சிராஜ் 

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

குறள் எண் 212- அதிகாரம் -ஒப்புரவறிதல் 

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு.

குறளின் பொருள் :

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.

Rev.Pope's translation

The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

Suthaananda Baarathiyaar's translation

All the wealth that toils give 

Is meant to serve those who deserve

குறள்  மேல்வைப்பு வெண்பா  ( the Kural with a story )

Thirukkural is called Tamil Marai - meaning The Vedas in Tamil Language.
It contains 1330  Kurals.  Each Kural ,  as the name implies, is a small poem , in two lines.

The Kurals have a message for us to follow. There are stories of great men and women who have lived true to these messages.

I have taken a small step to bring out the beauty and lessons of Kurals to those who are not familiar with it / have lost touch with it.

I have composed a poem in the Venba format, in four lines. Reproducing the Kural , in its original form in the third and fourth line, in the first two lines I relate a well known story from history or recent happenings which brings out the essence of the Kural.

Also appended is an English version of the Kural ,  in poetic form, written by Rev. Pope/ Suththaananda Bharathiyar.




















Sep 18, 2023

விநாயக சதுர்த்தி

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். 
இன்றைய விநாயக சதுர்த்தியன்று, விநாயகப் பெருமானை வணங்கி ஒரு பாடலைப் பதிவு செய்கின்றேன். 

அன்புடன் 
ரமேஷ் 


விநாயக சதுர்த்தி 




மாதொரு பாகனின் மூத்தமகன்
காது விரித்த கணபதியை
மோதகம் செய்து படைத்திட்டு
பாதங்கள்  பற்றி வணங்கிட்டால்
ஜாதக பாதகங்கள் எதுவும்
சாதக மாகவே  மாறிடுமாம்.
தீதுகள் அகலும்; செய்காரியங்கள்
ஏதும் நன்றாகவே   முடிந்திடுமே !

பாதிதன் பல்லை உடைத்தெடுத்து
வேத வியாசன் வாய்மொழிந்த
நீதிக் காவியம் பாரதத்தை
மாதவன் அளித்த கீதையுடன்
காதால் கேட்டு எழுத்தினிலே
சேர்த்தே எழுதிய கணபதிக்கு
சாத்தித் தினமும் மலர்மாலை
ஏத்தித்  தொழுவோம் எந்நாளும்.

Sep 16, 2023

தேடல்

 தேடல் 






நதியின் தேடல் கடலில் முடியும் 

கடலின் தேடல் கரையில் முடியும் 

பகலின் தேடல் இரவில் முடியும் 

இரவின் தேடல் பகலாய் விடியும்

  

கண்களின் தேடல் காட்சியாய் விரியும் 

வண்டின் தேடல் மலரில் முடியும் 

மலர்களின் தேடல் முடியும் இடமோ 

சரமாய்ச் சூடிய மங்கையர் முடியே. 


அம்பின் தேடல் இலக்கில் முடியும்

அன்பின் தேடல் உறவில் முடியும்

கல்லின் தேடல் சிலையாய் முடியும் 

சொல்லின் தேடல் கவிதையில்  முடியும் 

 

ராகத்தின் தேடல் பாடலில் முடியும் 

தேகத்தின் தேடல் மோகத்தில் முடியும்

மேகத்தின்  தேடல் மழையில் முடிந்து 

தாகம் தீர்க்கத்  தரையில் இறங்கும் 


தேடல் எவைக்கும் அவற்றின்  முடிவில்

விடையும்  ஒருநாள்   கிடைத்திடும் ; ஆனால் 

தேடுவ தெதையெனத்   தெரியா தெதையோ*            

தேடுமென் தேடற்கு  விடையென்று கிடைக்கும்?  


* தெரியாது எதையோ

    





  




Sep 1, 2023

மௌன ராகம்


சென்ற வாரம் என் மூத்த மகனின் குடும்பத்தாருடன் மைன் (Maine) நகரத்தில் இருக்கும்  அகேடியா என்ற தேசியப் பூங்காவிற்குச் ( Acadia National Park)  சென்றிருந்தோம். அங்கு தங்கியிருந்து இயற்கையின் பலவேஅ று பரிமாணங்களை கண்டு ரசித்தோம். அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்தது , நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து கண்டு ரசித்த அமைதி நிரம்பிய  காலைக் காட்சிதான். எவற்றிலும் எவ்வித அசைவும் இன்றி, எங்கும் நிறைந்த மவுனம் என் மனதில் குடிகொண்டு எழுப்பிய மௌன ராகம் பற்றி ஒரு பாடல்!

அன்புடன் 

ரமேஷ்  







நிலத்தைக் குடைந்து நுழைந்த கடல்பரப்பில்*             * Bay, வளைகுடா                   

சலனங்களே சற்றும் இல்லா திருக்க

அலையேதும் இல்லாமல் கலையாத நீர்மேல் 

நிலையாக நிற்கின்ற உருநிழல்** பிம்பம்                         ** reflection                       


விரிகின்ற வானமதில் தெரிகின்ற நீலம் 

திரியாமல் அதில்மிதக்கும் வெண்மேகத் துகள்கள் 

வீசாத காற்று அதில் அசையாத இலைகள் 

பேசாத வார்த்தைகளில் கேட்காத ஒலிகள் 


விரியாத சிறகுகள் பறக்காத பறவை 

தெரியாத தோர்தொலைவில் தீபத்தின் துளிகள் 

எங்குநான் நோக்குமெப் பொருளிலும் நிறைந்து 

தங்கித் ததும்பி வழிகின்ற  மௌனம்


படர்ந்தெங்கும் பரவும் மவுனப்பெரு   வெளியில் 

எடையிழந்து தடையின்று மிதக்குமென் மனது. 

நிலையாது எப்போதும் அலைபாயும் மனதும் 

கலையாது இம்மவுனக் கடலில் அடங்கும்

 

மவுனப் பெருவெளியில் மிதக்குமென் தேகம்

என்காதில் எப்போதும் மௌனத்தின் ராகம்