2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு
ஆண்டு 2020 க்கான என் நாட்குறிப்பேட்டில் எழுதி நிறைத்த பக்கங்களை விட எழுதப்படாத வெறுமையான பக்கங்களே அதிகம். ஏழெட்டு மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும்போது, எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் ! இப்படி இருக்கையில் எதற்காக ஒரு தினநாட்குறிப்பு? இந்த நிலைமை சீக்கிரம் மாற இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்
ரமேஷ்
இரண்டா யிரத்திருப தாண்டின்குறிப் பேட்டை
புரட்டிப் பார்க்கிறேன் நான்பட்ட பாட்டை !
கருமையின்* கறைபடிந்த பக்கங்கள் சிலவே! * (கரு+மை =கரிய மை)
குறிப்பேட்டை வாங்கியது வீணான செலவே!!
ஒவ்வொரு நாளுமதன் முன்னாளின் நகலே!
இதிலிருந்து விடுபடவே இங்கேது புகலே ?
நோய்நம்மைத் தாக்குமோ என்றுபயப் பட்டு,
வாய்மீதும் முகமீதும் முகமூடி இட்டு
வீட்டுள் அடைபட்டு, உள்ளம் உடைபட்டு
நாடோறும்* நாம்செய்யும் செயல்கள் தடைபட்டு (* நாள் தோறும் )
ஊர் முகம் காணுதல் முற்றும் மறந்து
நேர்முகப் பரிமாறல் அறவே துறந்தோம்
மனதிலே நிறைந்திடும் வெறுமையின் தாக்கம்
எனதுகுறிப் பேட்டிலென் எழுத்தையும் தாக்கும்.
உள்ளத்தின் உள்ளே நிறைந்துள்ள வெறுமை,
நாளேட்டின் பதிப்பிலென் எழுத்திலும் வறுமை!
வரும்நாளில் இந்நிலைமை நிச்சயம் மாறும்.
திரும்பவென் எழுத்துக்கள் நாளேட்டில் ஏறும்!