மரம்விடுத்து மிதந்துவிழும் பழுப்புவண்ண இலைகளே
மனம்விடுத்து மிதந்துசெல்லும் எண்ணஅலைகள் போலவோ?
எண்ணஅலைகள் எழுதும்கவிதைக் கருப்பொருளாய் ஆகும்போல்
மண்விழுந்த இலைகளுமே நல்லுரமாய் மாறுமே !
கடந்துபோன கோடைகாலக் கதிரவனின் கிரணங்களால்
சூடுபட்ட உடலின்வெப்பம் சற்றுக்குறைய வேண்டியே
ஆடையான இலைகளைந்து அத்தனை மரங்களும்
வாடைக்கால வருகைக்காக விழிகள்நோக்கி நிற்குதோ?
நேற்றுமாலை இலைகள்நிறைந்த கூந்தல்இருந்த மரங்களே
முற்றும்இன்று ஓரிரவில் மொத்தமுடியும் இழந்ததே!
இன்றுமனிதன் அனுபவிக்கும் இன்பம்செல்வம் அனைத்துமே
நின்றுஎன்றும் நிலைப்பதல்ல என்றஉண்மை உணர்த்துதோ?
இலையைஇழந்து கிளைகள்வெறித்துக் காத்துநிற்கும் மரங்களும்
நாளைவசந்த வேளைவந்தால் மீண்டும்பூத்துக் குலுங்குமே !
நிலையும்இன்று குலைந்துபோன மனிதர்பலரின் வாழ்வுமே
மலர்ந்துமீண்டும் மகிழ்ச்சிகூடும் ; இதுவும்வாழ்க்கைப் பாடமே!