Search This Blog

Jun 28, 2018

கவிஞனின் தேடல்

ஒவ்வொரு கவிஞனும் தனைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி !

அன்புடன்

ரமேஷ்




கவிஞனின் தேடல் 

கடவுளைக் கண்ட தில்லை
காதலும் செய்த தில்லை
இயற்கையோ டொன்றி என்றும்
இணைந்துநான் வாழ்ந்த தில்லை
என்றாலும் எனது பாடல்
பலவுமிவை பற்றியே தான் 

நேரிலே நானே பார்த்தோ
காதலியின் கரங்கள் தொட்டோ
இயற்கையின் மடியில் கிடந்தோ
இவைகளில் எதையும் செய்து 
நெஞ்சினுள் நிஜமாய் உணர்ந்த       
பட்டறி வில்லாத போதும்

படித்ததை கேட்டதை வைத்தே
கற்பனை செய்து தோன்றும் 
கருத்துகள் காட்சிகள் இவையை
வார்த்தைக ளாகக் கோர்த்து
படிக்கின்ற பேர்களுக் காக
வடிக்குமிந்  நிலையைத் தாண்டி 

கடவுளுள்  காதலுள்  இன்னும் 
இயற்கையின் உள்ளே ஒளிரும்
உண்மையை உணர வேண்டுமென்
தேடல்கள் என்னாள் தீரும்?

Jun 25, 2018

பிரதோஷப் பாடல் - 8 -இன்றைய பிரதோஷம் காஞ்சி சங்கரமடத்தில்

பிரதோஷப்  பாடல் -8
இன்றைய பிரதோஷம் காஞ்சி சங்கரமடத்தில்







சங்கரனே அவதரித்து சந்திரசேக ரின்னுருவில் 
இங்கெமக் கருள்செய்து நிலைக்களத்தில்* சிலையாக
அமர்ந்தவர்க்கு  அபிஷேகம் பிரதோஷ வேளையிலே
இமைக்காத கண்ணோடு இன்புற்றே கண்டேனே!

* நிலைக்களம்  =  அதிஷ்டானம்




Jun 22, 2018

திருச்செந்தூரில் ஷண்முகார்ச்சனை




திருச்செந்தூரில் ஷண்முகார்ச்சனை 

சென்ற வாரம் திருச்செந்தூர் சென்று குடும்பத்துடன் ஷண்முகார்ச்சனை செய்தோம்.
மனத்தை நிறைக்கும் ஒரு நிகழ்வாக அது அமைந்தது.
அது  பற்றி ஒரு பாடல் 

அன்புடன் 

ரமேஷ் 




திருச்செந்தூரில் ஷண்முகார்ச்சனை 

திருக்கோயில் புகுதல் 

வங்கக் கடலலையில் கால்நனைத்து ஆழ்வாவி*                   * வாவி=கிணறு  
மங்கலநீர் முங்கிட்டு திருக்கோவில் தலமடைந்து 
நாதசுர நல்லிசையும்  மத்தளத்தின்  முழங்கிசையும்
காதினிக்க  முன்செல்ல கைகூப்பிப் பின்சென்று 
சங்கடங்கள் விலக்கி மங்களங்கள் நிறைக்கும் 
துங்கக் கரிமுகனைத் துதித்து வணங்கிப்பின்

மூலவர் பூஜை 

அமரர்படைத் தளபதியாய் சமர்செய்யப் புகுமுன்னே 
இமயத்தி லமர்ந்திருக்கும் உமைபங்க னைத்துதிக்கும் 
வேலெடுத்த மூலவனின்  முன்னமர்ந்து மனமுருகி 
ஆலய மணியோசை அதனோடு அந்தணரின் 
வேதமந் திரமும்  ஓதுவார்  தமிழ்ப்பாட்டும் 
காதினிக்கக்  கேட்டவண்ணம்  கைகூப்பித் தொழுதிட்டு 
போத்திகளார் தெளித்திட்ட புனிதநீர் உடல்பட்டு
பாதாதி கேசங்கள் சில்லென்று புல்லரிக்க    
பூதியினை உடல்முழுதும் பூசிய உடல்துலங்க 
பாதாளக்  குகைதனிலே பஞ்சலிங்கம்  தரிசித்து

ஷண்முகார்ச்சனை

பங்கயக் குளத்திலாறு குழந்தைகளாய் உருவெடுத்து 
அங்கயற் கண்ணியுமை அணைத்தவுடன் ஒன்றான
ஆறுமுக சாமிமுன்னே  அமர்ந்த முகமாக
அறுமுகத்தோன் முகங்கட்கு அர்ச்சனைகள்  செய்தபின்னே 
வலக்கையில் வேல்சேர்த்து மங்கையரைத் தோள்சேர்த்த
அழகுமயில் வாகனனை வணங்கிஅவன்  தாள்சேர்த்த                                                                           
நாலுவகை அன்னத்தையும்  நல்லினுப்புப் பொங்கலையும் 
பால்சேர்த்த பாயசமும் ப்ரசாதமாய்ப் பெற்றிட்டு

மற்ற தெய்வங்களை தரிசித்தல் 

குருதட்சி ணாமூர்த்தி வள்ளிதே வானைமற்றும் 
திருமால்பை ரவமூர்த்தி   சன்னதியில் வழிபட்டு 
திருச்செந்தூர் முருகனது  திருவருளிலே  நனைந்து
திரும்பி வருகையிலே மனமெல்லாம் மலர்ந்ததம்மா!















Jun 12, 2018

உடலோவியம்

உடலோவியம்  

இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு வந்த ஒரு யூ ட்யூப் நிகழ் படம் (you-tube video) வின் இணைப்பு இதோ. இது ஒரு Body Painting ஐ சித்தரிக்கிறது. நீங்களும் பாருங்கள்.


இதை பார்த்தவுடன் எழுதிய  ஒரு கவிதை ,  இதோ!

அன்புடன் 

ரமேஷ் 





உடையழகும் நடையழகும் இடையழகும் இருக்கப்போய் 
தொடையழகைக்  கடைவிரித்து தூரிகையால் தீட்டுகிறார்
அல்லாதீன்  அற்புத விளக்கொன்றின் ஓவியத்தை --
உள்ளுக்குள் பூதமொன்று  ஒளிந்திருப்ப தறியாமல் !


Jun 8, 2018

தோல் கண்டார் -------

தோல் கண்டார் -------


சில நாட்களுக்கு முன் , தேஜஸ் இலக்கியக் குழுவின் கூட்டத்தில் டாக்டர் திரு.முருகுசுந்தரம் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. தமிழ் ஆர்வலரும் தோல் துறை மருத்துவருமான இவர் யாணர் என்ற ஒரு இலக்கிய அமைப்பை நடத்தி வருவதுமட்டுமின்றி , சருமத்தைப்  பற்றிய ஒரு தமிழ் மருத்துவ இதழையும் பதிப்பித்து வருகிறார். அதைப் படித்த தாக்கத்தினாலோ என்னவோ, தோலைப்  பற்றிய ஒரு கவிதை உருவானது!.

பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி!

அன்புடன் 
ரமேஷ்

தோல் கண்டார் -------


பாலதன்   நிறமே  வெண்மை
நீலமே வானின் வண்ணம்
இலையெலாம் பச்சை என்று
நிலைத்தவண் ணங்கள்  தந்தான்.
மாந்தரின் மேல்தோல் நிறமோ
ஒருநிறம் என்றில் லாமல்
மாநிறம் வெள்ளை கருப்பென
ஏனிந்த இறைவன் தந்தான்?

தோல்கண்டார் தோலே காண்பர்
மேல்கொண்டு எதையும் காணார்
தோள்திறம் சொல்திறம் மற்றும்
நூல்திறம் இவற்றை விலக்கி
தோல்நிறம் மட்டும் பார்த்து
தாழ்வாக அவரை எண்ணும்
தாளிட்ட மனது படைத்த
மனிதரும் பலரிங் குண்டு

பூநிறம் பற்பல எனினும்
தேன்உள்ளே  உள்ளது என்று
தேனீக்கள் அறியும் வண்ணம்
மானுடர் ஏன் அறிவதில்லை?
தோலென்ற உறையை உரித்தால்
உள்ளுள்ள தெல்லாம் ஒன்றே
மேலவர் தாழ்ந்தவ ரென்று
பால்பிரித் தறிதல் என்னே?







Jun 3, 2018

குட்டிக் குரங்குகள் கும்மாளம்

குட்டிக் குரங்குகள் கும்மாளம் 

எல்லா சிறிய  குழந்தைகளுக்கும்  மிகவும் பிடடித்த ஒரு ஆங்கில குழந்தைகள் பாட்டு "Five Little monkeys jumping on the Bed". இதைத் தமிழ்ப்படுத்தி எழுதப் பட்டது இந்தப் பாட்டு!
கட்டிலுக்கு கேடுதான் என்றாலும், சில தமிழ் வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ளட்டுமே!

அன்புடன் 

ரமேஷ் 



குட்டிக் குரங்குகள் கும்மாளம் 




குட்டிக் குரங்குகள் ஐந்தும் குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 


குட்டிக் குரங்குகள் நான்கும்  குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 

குட்டிக் குரங்குகள் மூன்றும்   குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 

குட்டிக் குரங்குகள் இரண்டும்   குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
சும்மா கட்டிலில் மேலும் கீழும்  
இனிமேல் குதிக்கக் கூடாதாம் 


குட்டிக் குரங்கு ஒன்று குதித்து 
கட்டில் மேலே கும்மாளம்.
கட்டிலில்  இருந்து  குரங்கொன்று  விழுந்து 
தலையில் பட்டது  பெரும் காயம்.
அம்மா குரங்கு டாக்டரை அழைக்க 
அவரும் அப்போ சொன்னாராம் 
கட்டிலின் மேலே படுக்க வைத்து 
கட்டிப் போடு என்றாராம் !










---------------