Search This Blog

Jun 28, 2018

கவிஞனின் தேடல்

ஒவ்வொரு கவிஞனும் தனைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய ஒரு கேள்வி !

அன்புடன்

ரமேஷ்




கவிஞனின் தேடல் 

கடவுளைக் கண்ட தில்லை
காதலும் செய்த தில்லை
இயற்கையோ டொன்றி என்றும்
இணைந்துநான் வாழ்ந்த தில்லை
என்றாலும் எனது பாடல்
பலவுமிவை பற்றியே தான் 

நேரிலே நானே பார்த்தோ
காதலியின் கரங்கள் தொட்டோ
இயற்கையின் மடியில் கிடந்தோ
இவைகளில் எதையும் செய்து 
நெஞ்சினுள் நிஜமாய் உணர்ந்த       
பட்டறி வில்லாத போதும்

படித்ததை கேட்டதை வைத்தே
கற்பனை செய்து தோன்றும் 
கருத்துகள் காட்சிகள் இவையை
வார்த்தைக ளாகக் கோர்த்து
படிக்கின்ற பேர்களுக் காக
வடிக்குமிந்  நிலையைத் தாண்டி 

கடவுளுள்  காதலுள்  இன்னும் 
இயற்கையின் உள்ளே ஒளிரும்
உண்மையை உணர வேண்டுமென்
தேடல்கள் என்னாள் தீரும்?

No comments:

Post a Comment