திருச்செந்தூரில் ஷண்முகார்ச்சனை
சென்ற வாரம் திருச்செந்தூர் சென்று குடும்பத்துடன் ஷண்முகார்ச்சனை செய்தோம்.
மனத்தை நிறைக்கும் ஒரு நிகழ்வாக அது அமைந்தது.
அது பற்றி ஒரு பாடல்
அன்புடன்
ரமேஷ்
திருச்செந்தூரில் ஷண்முகார்ச்சனை
திருக்கோயில் புகுதல்
வங்கக் கடலலையில் கால்நனைத்து ஆழ்வாவி* * வாவி=கிணறு
மங்கலநீர் முங்கிட்டு திருக்கோவில் தலமடைந்து
நாதசுர நல்லிசையும் மத்தளத்தின் முழங்கிசையும்
காதினிக்க முன்செல்ல கைகூப்பிப் பின்சென்று
சங்கடங்கள் விலக்கி மங்களங்கள் நிறைக்கும்
துங்கக் கரிமுகனைத் துதித்து வணங்கிப்பின்
மூலவர் பூஜை
அமரர்படைத் தளபதியாய் சமர்செய்யப் புகுமுன்னே
இமயத்தி லமர்ந்திருக்கும் உமைபங்க னைத்துதிக்கும்
வேலெடுத்த மூலவனின் முன்னமர்ந்து மனமுருகி
ஆலய மணியோசை அதனோடு அந்தணரின்
வேதமந் திரமும் ஓதுவார் தமிழ்ப்பாட்டும்
காதினிக்கக் கேட்டவண்ணம் கைகூப்பித் தொழுதிட்டு
போத்திகளார் தெளித்திட்ட புனிதநீர் உடல்பட்டு
பாதாதி கேசங்கள் சில்லென்று புல்லரிக்க
பூதியினை உடல்முழுதும் பூசிய உடல்துலங்க
பாதாளக் குகைதனிலே பஞ்சலிங்கம் தரிசித்து
ஷண்முகார்ச்சனை
பங்கயக் குளத்திலாறு குழந்தைகளாய் உருவெடுத்து
அங்கயற் கண்ணியுமை அணைத்தவுடன் ஒன்றான
ஆறுமுக சாமிமுன்னே அமர்ந்த முகமாக
அறுமுகத்தோன் முகங்கட்கு அர்ச்சனைகள் செய்தபின்னே
வலக்கையில் வேல்சேர்த்து மங்கையரைத் தோள்சேர்த்த
அழகுமயில் வாகனனை வணங்கிஅவன் தாள்சேர்த்த
நாலுவகை அன்னத்தையும் நல்லினுப்புப் பொங்கலையும்
பால்சேர்த்த பாயசமும் ப்ரசாதமாய்ப் பெற்றிட்டு
மற்ற தெய்வங்களை தரிசித்தல்
குருதட்சி ணாமூர்த்தி வள்ளிதே வானைமற்றும்
திருமால்பை ரவமூர்த்தி சன்னதியில் வழிபட்டு
திருச்செந்தூர் முருகனது திருவருளிலே நனைந்து
திரும்பி வருகையிலே மனமெல்லாம் மலர்ந்ததம்மா!
திரும்பி வருகையிலே மனமெல்லாம் மலர்ந்ததம்மா!
வடம் பிடித்த கையை படம் பிடிக்க ஆளில்லயோ?
ReplyDeleteநன்கு கேட்டீர்!
ReplyDeleteநிழற் படம் ஒருவரும் பிடிக்கவில்லையெனினும், நான் பாட்டில் பிடித்த படம் இதோ :
முட்டிவலி மூட்டுவலி இடுப்புவலி இன்னபிற
பட்டிருந்த வலியெல்லாம் சட்டென்று போயினவே
வங்கக் கடல்தழுவும் செந்தூரில் முருகனது
தங்கத்தேர் தொட்டிழுக்குங் கால்.
யாம் பெற் ற இன் பம் இவ் வயகம் பெறுக என் பதை மெய் பித் துவிட் டீர் இப் பாடல் மூலமாக.
ReplyDelete