Search This Blog

Dec 29, 2017

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி

இன்று வைகுண்ட ஏகாதசி.
இந்நாளில் அனைவருக்கும் திருமாலின் அருள்சேர வேண்டி ஒரு சிறு பாடல்.
அன்புடன்
ரமேஷ்

வைகுண்ட ஏகாதசி



பாற்கடலில் பாம்பின்மேல்  பொய்த்துயிலில் துய்த்திருக்க
பொற்பாதம் லட்சுமியும்   நீவிவிட  - கார்மேக
வண்ணத்தான் காட்சிதரும்  பேரழகை நாள்தோறும்
எண்ணவே  இப்பிறப் பாம்.
                                                                                          ( பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Dec 23, 2017

திருவிளையாடல் பாடல்கள் - 3- திருநகரம் கண்ட படலம்

திருநகரம் கண்ட படலம்

இந்தப் படலம் , பாண்டியர்களின் தலைநகராகத் திகழ்ந்த மதுரை நகர் அமைக்கப்பட்ட வரலாறை விவரிக்கும் படலம்.

அன்புடன் ரமேஷ்.




திருநகரம் கண்ட படலம் 

கடம்ப வனத்துறை சோமசுந்  தரனாரே  கனவினில் தோன்றி யிந்த 
இடத்திலே நல்லதோர்   நகரையே அமைத்திடென  மன்னர்க்குச்  சொல்லி அருள  
மாடமா ளிகைளொடும்      கூடகோ புரங்களுடன்      நடுவிலொரு   கோவி லுடனும்
கோ(ட்)டமொன்  றமைத்தபின் மதுரமதன் மேற்சிந்த மதுரையெனப் பெயர் கொண்டதே  !
                                                                                   எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடலின் பொருள் :


பாண்டிய மன்னன் கனவிலே சோமசுந்தரக் கடவுள் தோன்றி "நான் குடியிருக்கும் கடம்பவனத்திலே ஒரு நகரை அமைத்திடு" என்று பணித்தார். மன்னனும் அவ்விடத்தில் திருக்கோயில், மாடமாளிகைகள் கொண்ட ஒரு நகரை அமைத்தான்.அந்நகர் மீது மதுரத் துளிகளைத் தெளித்து இறைவன் அருள்செய்ய, அதனால் தூய்மையடைந்த அந்நகரம் மதுரை என்ற பெயர் கொண்டது.

The story in Tamil 

பாண்டிய மன்னனான குலசேகரன் மணவூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தான்.  மணவூரின் மேற்திசையிலே மலர்கள் நிறைந்து மனம் வீசும் கடம்பவனம் அமைந்திருந்தது. அவ்வழியே ஒருநாள் சென்ற , பெரும் சிவபக்தனான தனஞ்சயன் என்னும் வணிகன் சோமசுந்தரக்  கடவுள் அங்கு எழுந்தருளியிருக்க, தேவகணங்கள் அங்கு வந்து அவருக்குப் பூசை செய்யும் காட்சியையும் தரிசித்தான்.
மறுநாள் மணவூர் சென்று இந்நிகழ்வை  மன்னன் குலசேகரனிடம் எடுத்துரைத்தான். அதைக்  கேட்டு மனமுறுகி  மெய்சிலிர்த்த  மன்னனின் கனவில் அன்று இரவு சோமசேகரக் கடவுள் தோன்றி, அக்கடம்பவனம் இருக்கும் இடத்திலே ஒரு சிறந்த நகரை நிர்மாணிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கட்டளையை சிரமேற்கொண்டு மன்னன் , கடம்பவனக் காட்டைத் திருத்தி நகரமொன்று அமைக்கும் பணியில் ஈடுபட்டான். கட்டிட, சிற்ப வல்லுனர்களின் உதவியுடன், ஆகமவிதிகளின் படி ஒரு திருக்கோவிலை அமைத்தான். அதைச் சுற்றி மாடவீதிகளையும்,அழகு மிகு  மாளிகைகளையும் அமைத்து , தனக்கென ஒரு அரண்மணையையும் நிர்மாணித்தான். அதன் பின், அந்நகருக்கு சாந்தி செய்யும் பொருட்டு சோமசேகரக் கடவுளை வேண்ட, அவரும் தன தலையிலுள்ள சந்திரகலைமூலம் ஒரு சொட்டு மதுரத்தை நகர் மீது தெளிக்க , நகரம் தூய்மையுற்றது. சிவபெருமான் சிந்திய மதுரத்தால் தூய்மையுற்ற அந்நகரம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. 

The story in English

Kulasekaran , the Pandya King, was ruling the kingdom with Manavoor as the capital.  Situated on the west side of Manvoor was a Kadamba forest. One day , a merchant by name Dhanjayan was returning to Manavoor after conducting his business in a nearby town. He was an ardent devotee of Lord Somasuntharar. 
When he was passing through the Kadamba Forest during his return journey he was overjoyed to see Lord Somasuntharar in the forest , surrounded by his Ganas and other celestials who were offering prayers to Him. 
The next morning, Dhananjaya went to the Kings court and described to him what he saw at the Kadamba forest. The King was delighted to hear this and kept thinking about that through the day. That night, the Lord appeared in his dream and instructed him to build a town in the place where the forest was situated. King Kulasekaran , with the help of architects and experts in the Aagama sastra built a temple at the place and with the temple at the centre, a town consisting of beautiful mansions and other facilities . After completing the construction, he went  to the Lord and prayed   to him to  sanctify the town, which the Lord did by sprinkling drops of Maduram (elixir) on the town. The town, sanctified by the Maduram, became to be known as Madurai.


Dec 20, 2017

ஒதுக்கவா , ஒழிக்கவா?

ஒதுக்கவா , ஒழிக்கவா?


எந்த ஒரு பிரச்சனைக்கும் காணப்படும் தீர்வுகள்  தற்காலிகமானவைகளாக இருந்து பயனில்லை; அவை பிரச்சனைகளை ஒதுக்கித்தான் வைக்கும். 

நிரந்தரத் தீர்வுகளே பிரச்சனைகளை ஒழிக்கும் வழி. 

அன்புடன் 

ரமேஷ்.


ஒதுக்கவா , ஒழிக்கவா?

காலையில் எழுந்து , கதவைத் திறந்து
கூட்டிப்  பெருக்கி சேர்ந்த குப்பையை  
மூலையில் குவித்து ஒதுக்கி வைத்தபின் 
நீரைத் தெளித்து கோலங்கள்  இட்டோம்.  

கதவை மூடி உள்ளே சென்றபின் 
அடித்த காற்றில் கலைந்த குப்பை  
மிதந்து வந்து மீண்டும் நமது 
வாசல் வந்து  வாசம் செய்தது.

காலை எழுந்து கண்களை மூடி  
மூலையி  லமர்ந்து த்யானம் செய்தபின்   
கோவில் சென்று  கடவுளைத் தொழுதபின்  
நாவால் அவனது நாமம் ஜபித்தபின்  

ஒதுக்கி வைத்த மனதின் குப்பைகள்
புற்றினை விட்ட பாம்பினைப் போல 
பதுங்கி இருந்த இடம்விட் டகன்று 
மீண்டும் மனதில்  இடம்பிடித் தனவே.

ஒதுக்கியும் பதுக்கியும் ஒளித்தும் வைத்த
குப்பைகள்  மீண்டும்  உயிர்த் தெழாமல் 
ஒழிக்கும் வழியினைக் காண்போம் அதுவே 
கழிக்கும் நமது ஊழ்வினைப்  பயனை.



Dec 15, 2017

திருவிளையாடல் பாடல்கள் -2--வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்.

திருவிளையாடல் பாடல்கள் -2

திருவிளையாடல் புராணம் பற்றி நான்கு வரிக் கவிதைகளை சில வாரங்கள் முன்பு தொடங்கி  இந்திரன் பழி தீர்த்த படலம், மீனாட்சி கல்யாணப் படலம் என்ற இரு படலங்களைப் பற்றிக் கூறியிருந்தேன்.
மீனாட்சி தாயின் கலயாணத் திருக்கோலத்தைக் காணும் அவசரத்தில் இதற்கு  முந்தைய  சில படலங்களை மறந்துவிட்டேன்!
அவை _
1. வெள்ளை யானை சாபம்  தீர்த்த படலம்.
2. திருநகரம் கண்ட  படலம்.
3. தடாதகைப்பிராட்டியார் திருவவதாரப்  படலம்.

இவைகளை இன்று தொடங்கி வரும் வாரங்களில் பதிக்க இருக்கிறேன்.

அன்புடன்
ரமேஷ்

2. வெள்ளை யானை சாபம்  தீர்த்த படலம்.


தில்லை நாயகன் தரித்த  பத்மத்தை   
-----------  துருவா சருமோர் நாள்
வெள்ளைக் கரிமேல் வந்த இந்திரற் 
-----------  கன்போ டளிக்க  அதையே
தள்ளி மிதித்துத்  தெறுமொழி பெற்ற  
                 களிறும் கடம்பி னடியில் 
உள்ள பரமனை நன்னீ ராட்டி 
                 உய்த துரைத்தே னிங்கு 
                                                                   
                                                                            (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)


பத்மம்=தாமரை மலர் 
தெறுமொழி = சாபம்
கரி,களிறு = யானை 
கடம்பு= கடம்ப மரம்; சிவபெருமானுக்கு உகந்தது  
நன்னீ  ராட்டி = அபிஷேகம் செய்து 
உய்தல்  = ஈடேறுதல்

பாடற்பொருள் :

துர்வாச முனிவர் பூசைப்பயனாக சிவபிரானிடம் பெற்ற ஒரு தெய்வீகத்த தாமரைப் பூவை ஐராவதம் என்ற தன் வெண்யானையின் மேலேறி வந்து கொண்டிருந்த இந்திரனுக்கு அளிக்க, அவனும் அதை பெற்று யானையின் மேல் வைத்தான். அந்த யானை அப்பூவைக் கீழே தள்ளி மித்தித்துவிட்டது.  இதனால் கோபமடைந்த துர்வாசர் அளித்த சாபத்தால் பீடிக்கப்பட்டு தேய்வது தன்மையை இழந்து காட்டு யானையாக பூலோகத்தில் வசித்த  ஐராவதம் , கடம்பமரத்தடியில் இருக்கும் ஈசனை வழிபட்டு மீண்டும் பொலிவுற்றது.

The story in English:





The story in Tamil:

துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து அதற்கு அனுதினமும் பூசைகள் செய்து  வந்தார். அவர் செய்த பூஜைகளால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் அணிந்திருந்த ஒரு தெய்வீகத் தாமரை மலரை அவருக்கு அளித்தார். அந்த மலரைக் கையில் ஏந்தி , முனிவர் இந்திரலோகம் சென்றார். அப்போது , தேவேந்த்திரன், அரக்கர்களுடன் போரிட்டு வென்று தன்னுடைய வெள்ளை யானை மீது ஏறி  வெற்றி ஊர்வலம் வந்துகொண்டிருந்தான். அவனை வரவேற்கத் திரண்டிருந்த அனைவரும் அவனுக்கு விலையுயர்ந்த பல பரிசுப்பொருட்களை அளித்து, தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

துர்வாசரும் , இந்திரனை வாழ்த்தி, அரண் அளித்த தெய்வீகத் தாமரை மலரை அவனுக்கு அளித்தார். வெற்றிக்கு களிப்பில் மிதந்துகொண்டிருந்த  இந்திரன், அதை பெற்ற தன்னுடைய யானையின் மேல் வைத்தான். அந்த வெள்ளையானையோ அந்தத் தாமரை மலரை கீழே தள்ளி காலால் மிதித்து விட்டது. இதைக் கண்டு சினமடைந்த துர்வாச முனிவர், இந்திரனையும், யானையையும் சபித்தார். அந்த சாபத்தால் வெள்ளை யானை தன தெய்வீகத்த தன்மையை இழந்து காட்டு யானையாக  மாறி,  நூறு ஆண்டுக் காலம் பூலோகத்தில் வசிக்கலாயிற்று. நூறு ஆண்டுகள் முடிந்த நிலையில், கடம்ப வனத்தில் நுழைந்த யானை, அங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் நீராட, மீண்டும் நல்லுருப் பெற்றது. சாப விமோசனம் அடைந்த யானை, கடம்பவனத்தில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பொற்றாமரைக்குள நீரினால் அபிஷேகம் செய்து ,  சிவனருள் பெற்று மீண்டும் இந்திரலோகம் அடைந்தது.

The story in English :



 The Great Sage  Dhurvaasa had been devoutly performing daily pooja to a Sivalingam . The Lord, pleased with his devotion, gave him a Divine Lotus Flower, which was adorning him . The sage went to Indra Loka with the flower when he saw  Indra, the King  of the Devas ,who was returning to his abode, seated on his White elephant, after having vanquished the mighty Asuras in a war. People had gathered to welcome him and were offering him various costly gifts, in appreciation of his achievement. The sage also conveyed his blessings to Indra and presented him with the Divine Lotus Flower, given to him by Lord Siva. Indra, after receiving the flower , casually placed it on the elephant without paying much attention to it. The elephant carelessly threw the flower down and trampled on it. On seeing this act, the sage was enraged and cursed both the elephant and Indra. As a result, the white elephant lost its divinity and had to spent a hundred years on earth as a wild elephant. On completion of the ordained hundred year period, the elephant entered the Kadamba forest and took a dip in the Lotus pond there, wherupon, it regained its original form and colour. It performed Abhishekam to the Sivalingam there , with water from the Lotus Pond and after receiving the blessings of Lord Siva, returned to  Indra Lokam.




Dec 12, 2017

ராகுல் காலமா இல்லை ராகு காலமா



அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக நேற்று " போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார்" ராகுல்  காந்தி.
இனி காங்கிரஸுக்கு
ராகுல் காலமா இல்லை ராகு காலமா"?

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன்

ரமேஷ்



ராகுல் காலமா இல்லை ராகு காலமா 

வேகமாக தேர்தல்முடிவு*  வருவதற்கு முன்                    (*குஜராத் தேர்தல்)
ராகுல்காந்தி காங்கிரசுக்கு தலைவர் ஆகினார்.
நோகாமல் நோம்பு நூற்று அரியணை ஏறும் - இவர்
பாகூ பலியா இல்லை  யாகப் பலியா-
-------------இனி
-------------ராகுல் காலமா இல்லை ராகு காலமா
-------------போகப்போகத்  தெரியும்கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்

பஞ்சாபைத் தவிரமற்ற பல இடங்களில் - தோற்று
பஞ்சாய்ப்   பறந்துவிட்ட  காங்கிரஸ் கட்சி
கெஞ்சிக்கெஞ்சி கேட்பதனால்  தலைவராகவே - இன்று
அஞ்சாமல்  இவருமதன்  தலைவர் ஆகிறார்
-------------இனி   .
-------------ராகுல் காலமா இல்லை ராகு காலமா
-------------போகப்போகத்  தெரியும்கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்

குஜராத்தின் தேர்தலிலே ராகுல் காந்தியும்  - தன்
புஜபலத்தை காட்டிடுவேன் என்று கூறினும் 
கஜத்தின்முன்னால் நிற்குமொரு  அஜம்*போன்ற  இவர்   (* அஜம் - ஆடு)
நிஜமாய்வென்  றிடுவாரோ  நாளை தெரியும்.
-------------இனி 
-------------ராகுல் காலமா இல்லை ராகு காலமா
-------------போகப்போகத்  தெரியும்கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்

டினாபாக்ட* றாலேயிவர் தலைவர் ஆகினும்       (*TINA- there is no alternative  factor)
தெனாவெட்டாய்* பேசுகிறார் இப்போதெல்லாம்   (*தெனாவெட்டாய்- bravado)
கனாக்கண்ட தேர்தல்வெற்றி வருமோவென்ற சிறிய
வினாவொன்றை  எழுப்பியதே  சிறியதோர் வெற்றி
-------------இனி
-------------ராகுல் காலமா இல்லை ராகு காலமா
-------------போகப்போகத்  தெரியும்கொஞ்சம் பொறுத்துப் பார்க்கலாம்

Dec 7, 2017

மழையில் தழைத்த புல்வெளிகள்


மழையில் தழைத்த புல்வெளிகள் 



இந்த  வருடம் சென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூட சரியான வெய்யில்.
தினம் நடக்கச் செல்லும் பூங்காவில் புல்வெளிகளும், செடிகளும் வாடி வதங்கி காணப்பட்டன.
செப்டம்பர் மாதக் கடைசியில் ஒரு நாள் மாலையிலும் ,இரவிலும் லேசாக மழை.
அடுத்த நாள் காலையிலேயே பூங்காவில் என்ன ஒரு மாற்றம்!
கருகியிருந்த புல்வெளிகளிலும், வாடியிருந்த செடிகளிலும்   பசுமை பூக்கத்  தொடங்கிவிட்டிருந்தது!
இதைப்  பார்த்தபோது ஒரு சிந்தனை எழுந்தது.
பலநேரங்களில், நம்முடைய உறவினர்களோடும் , நண்பர்களோடும்  , கருத்துவேறுபாடு காரணமாக சண்டையிட நேர்கிறது.
இதற்குப் பிறகு ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. சண்டைக்கான காரணம் நீர்த்துப்போய் பலநாட்களான பிறகும், தன் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்த பிறகும், இந்த  நிலை தொடர்கிறது !
யார் முதலில் பேசுவது என்ற தன்மானப் பிரச்சினை!
ஒரு நாள் இந்த மனநிலையைத் தாண்டி, அவரைப் பார்க்கும்போது ஒரு புன்னகை புரிந்துதான் பாருங்களேன்!
சிறுமழையைப் பார்த்ததுமே நிறம்விரித்த புல்வெளி போல, உறவுகள் மீண்டும் மலரக்  காண்பீர்கள்!
இது பற்றி----
அன்புடன்
ரமேஷ் 


நீரின்றிப் பலநாட்கள் கருகிய புல்வெளியும்
ஓரிரவின்  சிறுமழையால் உயிர்ப்பதுபோல்    - போரிட்டு
சிறுபகையால்  பிரிந்திருந்த நண்பர்கள்  பிணக்கினையோர்
ஒருமுறுவல் ஒழித்துவிடும்  காண்.                                                                                                                                 (வெண்கலிப்பா)

பி.கு :
இந்த 211 -ம் பதிவு,  ஆங்கில. மற்றும் உரைநடைப் பதிவுகளை நீக்கிய பின்பு, என்னுடைய 200 -ஆவது தமிழ்க் கவிதை பதிவு. 
இதற்கு முன், 100,150 ஆகிய மைல்கற்களை அடைந்தபோது எழுந்த எண்ணங்களே இப்போதும் எழுகின்றன.
(http://kanithottam.blogspot.in/2016/08/ and 
http://kanithottam.blogspot.in/2017/04/blog-post_17.html)

பதிவுகளைத் தொடர்ந்து  படித்தும், கேட்டும் , கருத்துகளைப்  பகிர்ந்து கொண்டவர்களுக்கும், அனைவருக்கும் எனது நன்றி. 
தொடர்ந்து, இன்னும் அதிக அளவில் உங்கள் பங்கேற்பை வேண்டுகிறேன்.
நன்றி 

Dec 3, 2017

செய்திகள் - வாசிப்பது -----

செய்திகள் - வாசிப்பது -----

இந்த வாரம் என் கவனம் கவர்ந்த இரு செய்திகள் - இதோ உங்களுக்காக

அன்புடன்

ரமேஷ்

News Item 1 -

Chennai, Tamil Nadu Tops in the number of women criminals - more than 6000 compared to Mumbai etc. which come a distant second with 1500 app. ( News from Times of India today) 
And a Kural Venbaa to celebrate this achievement -


நாடெங்கிலும்  உள்ள நகரங்களின்  பெண் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் 6000-த்துக்கு மேற்பட்டவர்களோடு சென்னையே முதலிடம் வகிக்கிறது. அடுத்த இடம் மும்பை - எண்ணிக்கை கிட்டத்தட்ட 1000ம் தான்.
இந்த சாதனையைப் பாராட்டும் விதம் ஒரு குறள்  வெண்பா :

குற்றங்கள் செய்யும்  மகளிரெண்  ணிக்கையில்  
நற்றமிழ் நாடே தலை  
News Item - 2

Raghul Gandhi's visit to the Somnath themple and the  entry in the temple ledger describing him as a non Hindu , has become a controversy. SUbsequently the following statements have been made :
Quotes:
Rahul Gandhi ( after the Somnath visit controversy) - I and my family are Shivabakthaas.
Congrss Spokesperson - Rahul Gandhi is a Hindu - Not only  that, he is a sacred thread wearing (janaue dhari ) brahman.
Raj Babbar ( U.P Congress President) - Rahul is a ShivaBakth. He was also wearing a Rudraksha.

This is what Sonia would have told Rahul after the controversy:



ராகுல் காந்தி சோம்நாத் ஆலயத்திற்குச் சென்றதும், அந்தக் கோவிலின் நுழைவுப் பதிவுப் புத்தகத்தில் அவர் ஒரு " ஹிந்து அல்லாதவர்"  எனப் பதிவு செய்யப்பட்டு இருந்ததும் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.

இது குறித்து பலர் சொன்ன கருத்துக்கள்   வருமாறு :

ராகுல்  காந்தி- நானும் என் குடும்பத்தாரும் சிவ பக்தர்கள்.
காங்கிரஸ் கட்சி தகவல் தொடர்பாளர் - ராகுல் ஒரு ஹிந்து ; அது மட்டுமல்ல; அவர் ஒரு பூணூல் அணியும் பிராமணன்.
ராஜ் பாபர் ( உ .பி காங்கிரஸ் தலைவர்) : ராகுல் ஒரு சிவபக்தர். அவர் ருத்ராக்ஷம் கூட  அணிந்திருந்தார்.

இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு சோனியா ராகுலுக்கு என்ன சொன்னார்? ஒரு கற்பனை - 


சிவனே யெனசும்மா  வாய்மூடி  இ(ல்)லாது  
சிவபக்தன் நானென்று சொன்னாயே  ராகுல் 
கழுத்திலே  ருத்திராக்ஷக் கொட்டையைப்  போட்டு 
கழட்டிய பூணூலை மாட்டு.