Search This Blog

Dec 7, 2017

மழையில் தழைத்த புல்வெளிகள்


மழையில் தழைத்த புல்வெளிகள் 



இந்த  வருடம் சென்னையில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கூட சரியான வெய்யில்.
தினம் நடக்கச் செல்லும் பூங்காவில் புல்வெளிகளும், செடிகளும் வாடி வதங்கி காணப்பட்டன.
செப்டம்பர் மாதக் கடைசியில் ஒரு நாள் மாலையிலும் ,இரவிலும் லேசாக மழை.
அடுத்த நாள் காலையிலேயே பூங்காவில் என்ன ஒரு மாற்றம்!
கருகியிருந்த புல்வெளிகளிலும், வாடியிருந்த செடிகளிலும்   பசுமை பூக்கத்  தொடங்கிவிட்டிருந்தது!
இதைப்  பார்த்தபோது ஒரு சிந்தனை எழுந்தது.
பலநேரங்களில், நம்முடைய உறவினர்களோடும் , நண்பர்களோடும்  , கருத்துவேறுபாடு காரணமாக சண்டையிட நேர்கிறது.
இதற்குப் பிறகு ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசுவதில்லை. சண்டைக்கான காரணம் நீர்த்துப்போய் பலநாட்களான பிறகும், தன் பக்கம் நியாயம் இல்லை என்று தெரிந்த பிறகும், இந்த  நிலை தொடர்கிறது !
யார் முதலில் பேசுவது என்ற தன்மானப் பிரச்சினை!
ஒரு நாள் இந்த மனநிலையைத் தாண்டி, அவரைப் பார்க்கும்போது ஒரு புன்னகை புரிந்துதான் பாருங்களேன்!
சிறுமழையைப் பார்த்ததுமே நிறம்விரித்த புல்வெளி போல, உறவுகள் மீண்டும் மலரக்  காண்பீர்கள்!
இது பற்றி----
அன்புடன்
ரமேஷ் 


நீரின்றிப் பலநாட்கள் கருகிய புல்வெளியும்
ஓரிரவின்  சிறுமழையால் உயிர்ப்பதுபோல்    - போரிட்டு
சிறுபகையால்  பிரிந்திருந்த நண்பர்கள்  பிணக்கினையோர்
ஒருமுறுவல் ஒழித்துவிடும்  காண்.                                                                                                                                 (வெண்கலிப்பா)

பி.கு :
இந்த 211 -ம் பதிவு,  ஆங்கில. மற்றும் உரைநடைப் பதிவுகளை நீக்கிய பின்பு, என்னுடைய 200 -ஆவது தமிழ்க் கவிதை பதிவு. 
இதற்கு முன், 100,150 ஆகிய மைல்கற்களை அடைந்தபோது எழுந்த எண்ணங்களே இப்போதும் எழுகின்றன.
(http://kanithottam.blogspot.in/2016/08/ and 
http://kanithottam.blogspot.in/2017/04/blog-post_17.html)

பதிவுகளைத் தொடர்ந்து  படித்தும், கேட்டும் , கருத்துகளைப்  பகிர்ந்து கொண்டவர்களுக்கும், அனைவருக்கும் எனது நன்றி. 
தொடர்ந்து, இன்னும் அதிக அளவில் உங்கள் பங்கேற்பை வேண்டுகிறேன்.
நன்றி 

4 comments:

  1. அன்புள்ள ரமேஷ்

    நீ கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. என் வாழ்வில் அந்த மாதிரி தருணம் வந்தபொழுது
    என் வழக்கத்தில் நான் முதலில் சிரித்தவுடன் எதிரில் உள்ள நண்பரின்
    முகமலர்ச்சி விவரிக்க இயலாது .

    உன்னுடைய கவிதை மழை மேலும் மேலும் பொழிந்துகொண்டே 1000த்தை தொட
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    உன் உயிர் நண்பன்
    ராம்மோகன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி, ராம்மோகன்.
      ego வை நீக்கி முதலாவதாக கரம் நீட்டுதல், அவ்வளவு எளிதானதல்ல. அதைச் செயல்படுத்திய உனக்குப் பாராட்டுக்கள்.

      Delete
    2. அன்புள்ள ரமேஷ் அவர்களுக்கு
      அருமையான கவிதை. ”செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாயோ”
      என்று அன்று திருப்பாவையில் ஆண்டாள் பாடிய உவமையைப் போல் இஙுகு ”சிறுச் சிறிதே இதழ் விரித்து ஒரு புன்னகை பூக்கும்போது” எதிரியின் தன்மானப் பிரச்சினை அடியோடு காணாமல் போய்விடுவதை நானும் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். அனுபவத்தைத் தாண்டி கவிதையில் இவ்வுண்மை மேலும் ஜொலிக்கிறது. இன்னும் பல அனுபவங்கள் கவிதை உருவெடுக்க என் வாழ்த்துக்கள்.
      2018 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      டாக்டர்.அலர்மேலு ரிஷி

      Delete
  2. இரமேஷ்
    ஒன்று கண்களாலே கண்டு அதற்கிணை
    என்று நினைவிற் கொணர்ந்து சொற்களால்
    நன்று படைத்தனைக் கவிதை ஒன்று
    என்றும் ஓங்குக நின்றிறன்.
    நரசிம்மன்(prn)

    ReplyDelete