Search This Blog

Mar 30, 2016

போகன் வில்லா தரும் பாடம்

போகன் வில்லா தரும் பாடம்




பல வண்ணங்களில் " பூத்துக்  குலுங்கும் ' போகன் வில்லா  செடியை பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் நாங்கள் குடியிருந்த எல்லா வீடுகளிலும் , இந்தச் செடிகள் இருந்தது உண்டு. இதுவரை அந்தச் செடி பல வண்ண மலர்கள் கொண்டது என்றே எண்ணியிருந்தேன். இப்போதுதான், சற்று உற்று நோக்கியபோது, பல நிறங்களுடன் மிளிர்வது  மலரல்ல, அச்செடியின் இலைகளே என்று அறித்தேன்!

அந்த வண்ண இலைக் கொத்துக்குள்ளே மறைந்து காணப்பட்டது, சிறிய பூவொன்று!



இதை அறிந்து கொள்ள எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது.! நான் மட்டும்தான் இப்படி ஏமாந்து இருந்தேனா, அல்ல்லது மற்றவர்களும் இப்படித்தானா ?

பலரிடம் நான் கேட்டபோது , தொண்ணூறு சதவீதம் பேர்கள் என்னைப் போலவே எண்ணி இருந்தார்கள் என்று தெரிய வந்தது! ( சிலர் , விடை தெரிந்தபிறகு, " மீசையில் மண் ஒட்டவில்லை" கதையாக , " அதைச் சொல்றயா? தெரியுமே ! அது இலைதானே" என்று சமாளித்தார்கள்.! )

எது எப்படி இருந்தாலும் , இவ்வளவு நாட்கள் , நான் ஒரு முட்டாளாகத்தான் இருந்திருக்கிறேன். நேரம் கடந்து அறிந்தாலும் , இதிலும் ஒரு இயற்கைப் பாடம் உண்டு என்று உணர்ந்தேன்!

அது பற்றிய ஒரு கவிதை!.

படித்து மகிழுங்கள்!

அன்புடன்
 ரமேஷ்


காலையில்   காற்றாட   நடைபழகும்  நேரம்
      கண்களைக்   கவர்ந்திடும்   வண்ணநிறக்    கோலம்  
சாலையின்   இருமருங்கில்   பூத்துக்   குலுங்கும்
     "போகன்   வில்லா"ச்  செடிகளின்   கூட்டம்.


வெள்ளை,   ஊதா ,   வெளிரிளஞ்    சிவப்பில்
     வண்ணக்   கலவையை    அள்ளித்   தெளித்து
கொள்ளை   அழகுடன்   காணுமக்   கோலம்
     செடிகளின்   முடிகளில்   முளைத்த   ரங்கோலம்.#


பன்னாட்கள்   இவ்வழியே   நான்சென்ற   போதும்
     இவ்வழகை   நெருங்கிநான்   ரசித்ததே   இல்லை.
இன்னாளே  அச்செடியின்   அருகிலே   சென்று
     நோக்கினேன் !   வியப்பிலே    விழிகள்   முழித்தேன்.!


மலரென்று   இதுவரையில்   நான்நினைத்த  தெல்லாம்
     இலைகளே   என்பதை   இன்றே   அறிந்தேன்.
பலஇலைகள்   நடுவே   வெளிர்வெண்   ணிறத்தில்
     சிறிதாகப்    பூவொன்று    சிரித்திருக்கக்    கண்டேன்..


இலைகளே   மலரென்று    நான்மயங்கி   னாலும்
     மதுவுண்டு   மலர்விட்டு    மலர்தாவும்   வண்டோ
வெளிவண்ணத்   தோற்றத்தில்    ஏமாந்தி    டாமல்
     உள்ளே   ஒளிந்துள்ள   மலரையே   நாடும்.


வெளிப்பூச்சாய்   வண்ணங்கள்    கொண்டஇலை   யொத்த
     திசைமாற்றும்    ஈர்ப்புபல    வாழ்விலே   உண்டு.
தெளிவுடன்    அப்பொருள்   அத்தனையும்   நீக்கு.
     உள்ளிருக்கும்   மலரொத்த    உட்பொருளை   நாடு.


கொத்தான    இலைநடுவே    மறைந்தமலர்    மொட்டு -அதை
     சத்தான   உண்மையெனக்    கண்டெடுக்கும்    வண்டு
முத்தான    ஓருண்மை    இச்செயலில்    உண்டு!
     முத்தியை   நாமடைவோம்    அவ்வுண்மை   கண்டு !



 

Mar 19, 2016

இன்று நீசெயும். நற்செயல் அனைத்தும்

சில நாட்களுக்கு முன் எனக்கு முன் மொழியப்பட்ட  ஒரு ஆங்கிலப் பதிவு  வருமாறு:

People are often unreasonable, self-centred: Forgive them anyway.
If you are honest, people may cheat you,
but be honest anyway.
What you spend years to build, someone could destroy overnight. Build anyway.
The good you do today, people will often forget tomorrow.
Do good anyway.
You see, in the final analysis it is between you and God; it never was between you and them


சிந்திக்க வைத்த இந்தப் பதிவை ஒரு சிறிய தமிழ்க் கவிதையாக வடித்திருக்கிறேன்.

அன்புடன்

ரமேஷ்.

இன்று   நீசெயும்   நற்செயல்   அனைத்தும்
நாளை   மற்றவர் மறந்திடலாம்.
நன்றி   மறந்தார்   எனவருந்  தாமல்
தொடர்ந்து   நற்செயல்   செய்துஇரு.


நேர்வழி    என்றும்    நீசென்   றாலும் 
நண்பரும்  உன்னை   ஏமாற்றலாம்
சோர்வும்  அதனால்  நீயடை  யாமல்
என்றும்   நேர்வழி  சென்றுவிடு .


பலநாள்   முயன்றுநீ  படைத்திட்ட  எதையும்
உலகோர் ஒருநாள் உடைத்திடலாம்.
நிலையே   நீயும்   குலைந்தி   டாமல்
படைக்கும் முயற்சிகள் தொடர்ந்துவிடு


தன்னலம்   ஒன்றையே   மனதினில் இருத்தி
மண்ணில்  செயல்படும்  மற்றவரை
எண்ணித்   துயரம்   என்று மடையாமல்
மன்னித்   துன்வழி  நடைபோடு.


ஏனெனில்   செயல்   பயன்   பரிமாற்றம்
உனக்கும்   இறைவர்க்கும்   இடையே   தான்.
ஊடே மற்றவர்க்   கேது   இடம்?
தொடர்ந்திடு  உன்பணி தளராமல்.

Mar 17, 2016

JNU - வில் சுதந்திரம் ( ஆசாதி )----ஒரு கார்ட்டூன் , ஒரு கவிதை !


கொஞ்ச நாட்களுக்கு முன் தொலைக்காட்சி, ஊடகங்கள், பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பரபரத்த ஒரு விஷயம் JNU வின் கனையா குமாரின் கைதும் , விடுதலையும்!

 அதைப் பற்றி, ஆதரித்தும், எதிர்த்தும் தொலைக்காட்சிகளில் பேசிக் கூச்சலிட்டதைக் கேட்டு அலுத்து, வெறுத்துப் போய் இருப்பீர்கள்.

ஆனால் இந்தப் பதிவு அதைப் பற்றியது  அல்ல!

சில வருடங்களுக்கு முன் கனையா குமார்  JNU நிர்வாகத்தால் 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டார் என்ற  ஒரு விஷயம்  , வெளியில் வந்தது!

எதற்காக அபராதம் ?

வெட்ட வெளியில் சிறுநீர் கழித்ததற்காகவும் , அதைத் தட்டிக் கேட்ட ஒரு பெண்ணை மிரட்டியதற்காகவும் !

" சுதந்திரம் ( ஆசாதி )வேண்டும்  " என்று கோஷம் எழுப்பிய  JNU மாணவர்களுக்கு வேண்டும் இன்னொரு  சுதந்திரமா இது ? " என்று நினைக்கத் தோன்றியது!

இதைப் பற்றிய ஒரு சிறு குறும்பாடலும் , ஒரு குறும்புக் கார்டூனும் !  

இந்த கார்டூன் என்னுடைய முதல் முயற்சி!  யாருடைய மென்னுணர்ச்சிகளையும் புன்படுத்தாதென்று நம்புகிறேன்!

அன்புடன்

ரமேஷ்


 
 
விதம்விதம்  ஆக   மிகப்பல
     சுதந்திரம் வேண்டும் என்று
நிதம்நிதந்  தோறும்  நேரு
     பல்கலைக் கழகத்தில் கூடி
கதறியே கோஷங்கள் போடும்
     மாணவக் கண்மணி காள்!
இதுவும்நீர் விரும்பி  வேண்டும்
     சுதந்திரத்தில்  ஒர்வகை தானோ
 

Mar 13, 2016

அடைவோம் முழுமை

எல்லாப் பொருள்களுக்கும் சில அடிப்படை குணங்கள் உண்டு.. அந்த அடிப்படை குணங்களை துறந்தால்  அவை வெறுமை அடைகின்றன.


சூடில்லாத நெருப்பையோ , அலை இல்லாத கடலையோ நினைத்துப் பார்க்க முடியுமா? அவை வெறுமை அடைகின்றன , இல்லையா?


சாதாரணமாக துறப்பதால் அடைவது  வெறுமை!


ஆனால் மனிதருக்கே உரித்தான சில அடிப்படை குணங்களை  நாம் துறந்தால் , அடைவது வெறுமை அல்ல,  முழுமையே !


அன்புடன் ,

ரமேஷ்


அடைவோம் முழுமை


வாசம் துறந்தால் மலர்கள் வெறுமை.
சுவாசம் துறந்தால் உடலும் வெறுமை.
நேசம் குறைந்தால் நட்பும் வெறுமை
ஆசை துறந்தால் அடைவோம் முழுமை.


வண்ணம் துறந்தால் ஓவியம் வெறுமை
எண்ணம் துறந்தால் எழுத்துகள் வெறுமை.
ராகம் துறந்தால் பாடல்கள் வெறுமை.
போகம் துறந்தால் அடைவோம் முழுமை.


நீரைத் துறந்தால் மேகம் வெறுமை
வேரைத் துறந்தால் விருட்சம் வெறுமை
ஏரைத் துறந்தால் வயல்வெளி வெறுமை
பாரைத் துறந்தால் அடைவோம் முழுமை.


தகவு துறந்தால் சான்றோர் வெறுமை
மகவு துறந்தால் தாய்மை வெறுமை.
சுகந்தம் துறந்தால் சந்தனம் வெறுமை
அகந்தை துறந்தால் அடைவோம் முழுமை


நீலம்  துறந்தால் வானம் வெறுமை
கோலம் துறந்தால் வாசல் வெறுமை
மூலம் துறந்தால் முற்றும் வெறுமை
ஞாலம் துறந்தால் அடைவோம் முழுமை.


கணையைத் துறந்தால் வில்லும் வெறுமை
துணையைத் துறந்தால்  வாழ்க்கை வெறுமை
பனையைத் துறந்தால் பாலையும் வெறுமை.
வினைகள் துறந்தால் அடைவோம் முழுமை


சிறகு துறந்தால் புள்ளினம் வெறுமை
கறவை துறந்தால் ஆவினம் வெறுமை.
முறுவல் துறந்தால் முகமும் வெறுமை
பிறவி துறந்தால் அடைவோம் முழுமை.


பச்சை துறந்தால் புல்வெளி வெறுமை
லஜ்ஜை துறந்தால்  பெண்மை வெறுமை
நச்சைத் துறந்தால் நாகம் வெறுமை
இச்சை துறந்ததால் அடைவோம் முழுமை.


அலைகள் துறந்தால் கடலும் வெறுமை
சிலைகள் துறந்தால் கோயில்கள் வெறுமை
கலைகள் துறந்தபண் பாடுகள் வெறுமை
உலகம் துறந்தால் அடைவோம் முழுமை


உறவு மறந்தால் வாழ்க்கை  வெறுமை
கருவைத் துறந்தால் கவிதை வெறுமை
கற்றல் துறந்தால் இளமை வெறுமை
முற்றும் துறந்தால் அடைவோம் முழுமை.







 

Mar 5, 2016

அஞ்சுகச்ச உடையணிந்து

சில நாட்களுக்கு முன், ஒரு பதிவில், சித்தர் சிவ வாக்கியர் பாடல்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

தங்கு தடை  இன்றி துள்ளிப்  பாய்ந்து ஓடும் நதி  போன்று, குதித்து வரும் சந்தங்களுடன் வரும் அவர் பாடல்களின் நடை, கருத்து ஆகிவைகளின் தாக்கத்தில் எழுந்த பாடல் இது.

படித்துக் கருத்தளியுங்கள்.

அன்புடன்

ரமேஷ்

அஞ்சுகச்ச   உடையணிந்து   தங்கப்பாத்  திரத்திலே
அஞ்சுநதியின்   நீரெடுத்து   அஞ்சுபழத்தின்   சாறுடன்
பஞ்சலோக   சிலையின்மீது  கொஞ்சம்   கொஞ்சமாகவே
மஞ்சனங்கள்   மட்டும்செய்யும்   மதியிலாத   மாந்தரே!


நஞ்சைபுஞ்சை   நிலன்கள்நீச்சல்   புகழும்பணமும்  இனபிற
துஞ்சும்போதும்   துலங்கும்போதும்  தேடிநாடி  ஓடுவீர்.
வெஞ்சினமும்  கொள்ளுவீர்;   வஞ்சனைகள்   விலக்கிடீர்;
பஞ்சுமெத்தை   பகட்டுவாழ்வில்   அமிழ்ந்துமூழ்கி   உழலுவீர் ;


செஞ்சபாவக்   கணக்குத்தீர   க்ஷேத்திரங்கள்   செல்லுவீர்;
கொஞ்சமேனும்   பாவம்குறைய   தானதர்மம்   செய்குவீர்;
சொல்லின்பொருளும்   புரிந்திடாமல்   ஸ்தோத்திரங்கள்  சொல்லுவீர்.
கெஞ்சிநீங்கள்  கேட்டிடினும்  குப்தன் கணக்கில்   குறையுமோ?


எஞ்சிநிற்கும்   கொஞ்ச வாழ்வில்   அஞ்சுபுலனை   அடக்கியே ;
அஞ்சுபொறியை   அடக்கியாண்டு   ஐம்மலங்கள்   விலக்கியே
அஞ்சுஅட்ச   ரங்கள்கொண்ட  பரமன்நாமம்   பாடினால்
நஞ்சையுண்ட   நீலகண்டன்   அருளுனக்குக்   கிட்டுமே!


பஞ்சில்பட்ட   தீப்பொறியே   பெருந்தழலாய்   ஆகும்போல்
நெஞ்சில்ஞானப்   பொறியும்பட்டு    தீபமாக     எரியுமே!- பிர
பஞ்சமெங்கும்   உள்ளபொருளில்    ஊடுருவி    உறைந்தவன்
பிஞ்சகனின்   கழல்பணிந்து   வாழ்கவாழ்க   வாழ்கவே!