Search This Blog

Mar 30, 2016

போகன் வில்லா தரும் பாடம்

போகன் வில்லா தரும் பாடம்




பல வண்ணங்களில் " பூத்துக்  குலுங்கும் ' போகன் வில்லா  செடியை பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன். சிறு வயதில் நாங்கள் குடியிருந்த எல்லா வீடுகளிலும் , இந்தச் செடிகள் இருந்தது உண்டு. இதுவரை அந்தச் செடி பல வண்ண மலர்கள் கொண்டது என்றே எண்ணியிருந்தேன். இப்போதுதான், சற்று உற்று நோக்கியபோது, பல நிறங்களுடன் மிளிர்வது  மலரல்ல, அச்செடியின் இலைகளே என்று அறித்தேன்!

அந்த வண்ண இலைக் கொத்துக்குள்ளே மறைந்து காணப்பட்டது, சிறிய பூவொன்று!



இதை அறிந்து கொள்ள எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆனது.! நான் மட்டும்தான் இப்படி ஏமாந்து இருந்தேனா, அல்ல்லது மற்றவர்களும் இப்படித்தானா ?

பலரிடம் நான் கேட்டபோது , தொண்ணூறு சதவீதம் பேர்கள் என்னைப் போலவே எண்ணி இருந்தார்கள் என்று தெரிய வந்தது! ( சிலர் , விடை தெரிந்தபிறகு, " மீசையில் மண் ஒட்டவில்லை" கதையாக , " அதைச் சொல்றயா? தெரியுமே ! அது இலைதானே" என்று சமாளித்தார்கள்.! )

எது எப்படி இருந்தாலும் , இவ்வளவு நாட்கள் , நான் ஒரு முட்டாளாகத்தான் இருந்திருக்கிறேன். நேரம் கடந்து அறிந்தாலும் , இதிலும் ஒரு இயற்கைப் பாடம் உண்டு என்று உணர்ந்தேன்!

அது பற்றிய ஒரு கவிதை!.

படித்து மகிழுங்கள்!

அன்புடன்
 ரமேஷ்


காலையில்   காற்றாட   நடைபழகும்  நேரம்
      கண்களைக்   கவர்ந்திடும்   வண்ணநிறக்    கோலம்  
சாலையின்   இருமருங்கில்   பூத்துக்   குலுங்கும்
     "போகன்   வில்லா"ச்  செடிகளின்   கூட்டம்.


வெள்ளை,   ஊதா ,   வெளிரிளஞ்    சிவப்பில்
     வண்ணக்   கலவையை    அள்ளித்   தெளித்து
கொள்ளை   அழகுடன்   காணுமக்   கோலம்
     செடிகளின்   முடிகளில்   முளைத்த   ரங்கோலம்.#


பன்னாட்கள்   இவ்வழியே   நான்சென்ற   போதும்
     இவ்வழகை   நெருங்கிநான்   ரசித்ததே   இல்லை.
இன்னாளே  அச்செடியின்   அருகிலே   சென்று
     நோக்கினேன் !   வியப்பிலே    விழிகள்   முழித்தேன்.!


மலரென்று   இதுவரையில்   நான்நினைத்த  தெல்லாம்
     இலைகளே   என்பதை   இன்றே   அறிந்தேன்.
பலஇலைகள்   நடுவே   வெளிர்வெண்   ணிறத்தில்
     சிறிதாகப்    பூவொன்று    சிரித்திருக்கக்    கண்டேன்..


இலைகளே   மலரென்று    நான்மயங்கி   னாலும்
     மதுவுண்டு   மலர்விட்டு    மலர்தாவும்   வண்டோ
வெளிவண்ணத்   தோற்றத்தில்    ஏமாந்தி    டாமல்
     உள்ளே   ஒளிந்துள்ள   மலரையே   நாடும்.


வெளிப்பூச்சாய்   வண்ணங்கள்    கொண்டஇலை   யொத்த
     திசைமாற்றும்    ஈர்ப்புபல    வாழ்விலே   உண்டு.
தெளிவுடன்    அப்பொருள்   அத்தனையும்   நீக்கு.
     உள்ளிருக்கும்   மலரொத்த    உட்பொருளை   நாடு.


கொத்தான    இலைநடுவே    மறைந்தமலர்    மொட்டு -அதை
     சத்தான   உண்மையெனக்    கண்டெடுக்கும்    வண்டு
முத்தான    ஓருண்மை    இச்செயலில்    உண்டு!
     முத்தியை   நாமடைவோம்    அவ்வுண்மை   கண்டு !



 

5 comments:

  1. Beautiful Bogan Villa snaps and a wonderful lines describing them!

    ReplyDelete
  2. Beautiful Bogan Villa snaps and a wonderful lines describing them!

    ReplyDelete
  3. காலம் பல கடந்தாலும் கண்டுணர்ந்த உண்மையை கவிநயத்துடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள் பல. அடுத்தமுறை போகன்வில்லாவை காணும்பொழுது ரசிக்கவேண்டும் /அன்புடன் இராமசுவாமி

    ReplyDelete
  4. Amazing Sir,Im sure ...enna thaan meesaila man otalainalum thalai kupura veezhnthathennavo marukka mudiyatha unmai. Indha kavidhaiyil utporul onraiyum unarnthen.....magizhndhen.....arputham....melum thodarattum ...Vaazhthukkal

    ReplyDelete
  5. Dear Ramesh, It is nice. Thanks for your new finding of the old fact. For me , better late than never.It is evident from Ramaswami that by associating with you, we also can get a bit of what you are getting naturally. Idhaithan Poovodu serntha Naarum Manakkum enbargalo! Rammohan

    ReplyDelete