துளசி தளங்கள் பறித்து எடுத்து தொடுத்த மாலை அதனுடன்
வளியின் மைந்தன் ராம பக்த ஆஞ்ச நேய சாமியை
விழுந்து வணங்கி வியாதி அனைத்தும் போக்கி அருள வேண்டுவேன்
துளசி தளங்கள் பறித்து எடுத்து தொடுத்த மாலை அதனுடன்
2020 ஆம் ஆண்டின் நாட்குறிப்பேடு
ஆண்டு 2020 க்கான என் நாட்குறிப்பேட்டில் எழுதி நிறைத்த பக்கங்களை விட எழுதப்படாத வெறுமையான பக்கங்களே அதிகம். ஏழெட்டு மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும்போது, எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் ! இப்படி இருக்கையில் எதற்காக ஒரு தினநாட்குறிப்பு? இந்த நிலைமை சீக்கிரம் மாற இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்
ரமேஷ்
இரண்டா யிரத்திருப தாண்டின்குறிப் பேட்டை
புரட்டிப் பார்க்கிறேன் நான்பட்ட பாட்டை !
கருமையின்* கறைபடிந்த பக்கங்கள் சிலவே! * (கரு+மை =கரிய மை)
குறிப்பேட்டை வாங்கியது வீணான செலவே!!
ஒவ்வொரு நாளுமதன் முன்னாளின் நகலே!
இதிலிருந்து விடுபடவே இங்கேது புகலே ?
நோய்நம்மைத் தாக்குமோ என்றுபயப் பட்டு,
வாய்மீதும் முகமீதும் முகமூடி இட்டு
வீட்டுள் அடைபட்டு, உள்ளம் உடைபட்டு
நாடோறும்* நாம்செய்யும் செயல்கள் தடைபட்டு (* நாள் தோறும் )
ஊர் முகம் காணுதல் முற்றும் மறந்து
நேர்முகப் பரிமாறல் அறவே துறந்தோம்
மனதிலே நிறைந்திடும் வெறுமையின் தாக்கம்
எனதுகுறிப் பேட்டிலென் எழுத்தையும் தாக்கும்.
உள்ளத்தின் உள்ளே நிறைந்துள்ள வெறுமை,
நாளேட்டின் பதிப்பிலென் எழுத்திலும் வறுமை!
வரும்நாளில் இந்நிலைமை நிச்சயம் மாறும்.
திரும்பவென் எழுத்துக்கள் நாளேட்டில் ஏறும்!
கைபேசி
இன்று நம் எல்லோருக்கும் பழகிப் போன ஒன்று கைபேசி. அது இல்லாமல் இன்று, அதுவும் இந்த கோவிட் காலத்தில், உலகம் இயங்காது என்ற ஒரு நிலைமை. இருந்தாலும், யாராவது அதைக் கண்டு பிடித்தவர் யாரென்று நினைவில் வைத்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் ஒய்வு பெற்ற காவல் துறைத் தலைவர் அதிகாரி திரு.ராஜ்மோகன் அவரை இன்று நினைவு கூறுகிறார்!
சில வருடங்களுக்கு முன் கோட்டூர் தோட்டப் பிள்ளையார் பலகை என்ற தலைப்பில் திரு.ராஜ்மோகன் அவர்கள் செய்து வரும் பணியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.* இன்று அப்பலகையில் இடம் பெற்றிருப்பவர் "மார்ட்டின் கூப்பர் " என்பவர். இன்றைய கைபேசிக்கான தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து, முதல் கைபேசியையும் வடிவமைத்தவர் கூப்பர். இன்று 92 வயதை அடையும் இந்த விஞ்ஞானியை நினைவு கூர்ந்து, அவரை வாழ்த்துகிறார் ராஜ்மோகன்!
நானும் அவருடன் இணைந்து ஒரு சிறிய பாடல் இயற்றி மார்ட்டின் கூப்பரை வாழ்த்துகிறேன்!
அன்புடன்
ரமேஷ்
* http://kanithottam.blogspot.com/2017/08/blog-post_10.html
இடம்பெயர்ந்து இங்கங்கும் நடக்கின்ற போதும்
தடையின்றி ஒருவரோ டொருவர் உரையாட
விடையொன்று கண்டார் விஞ்ஞானி கூப்பர்.
நெடுநாட்கள் அவர்வாழ வாழ்த்துக்கள் சொல்வோம்!
மார்கழி விடியல் - ஒரு மீள் பதிவு
சென்ற ஆண்டு மார்கழி மாதம் எழுதிப் பதித்த ஒரு பாடலை மீண்டும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்புடன்
ரமேஷ்
மார்கழி விடியல்
மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில் ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப
விடியும் இனியவோர் காலைப் பொழுது
காடு வரை பிள்ளை?*
இந்தக் கொரானா நாட்களில் ஒருவரும் அவர்கள் இருக்கும் இருப்பிடத்தை விட்டு வேறெங்கும் செல்ல முடிவதில்லை.
வெளி நாட்டு விமான சேவைகள் இன்னும் செயல்படத் தொடங்காத நிலையில், வெளி நாடுகளில் வசிக்கும் எவரும் இங்கு வர முடியாத நிலை.
எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மகன்களும், மகள்களும் வெளிநாடுகளில் இருப்பதால் , வயதான பெற்றோர் தனித்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கொரானா நோய் தாக்கி இறந்தபோது, பெற்ற பிள்ளைகள் எவரும் வந்து ஈமச்சடங்களைக்கூட செய்ய முடியாமல் போனது பற்றிய பல துயரச் செய்திகளை நாளேடுகளில் சில மாதங்களுக்கு முன் படித்தேன்.
அதன் தாக்கத்தின் பயனாக (சில மாதங்களுக்கு முன்) எழுதப்பட்ட ஒரு கவிதை இது.
அன்புடன்
ரமேஷ்
காடு வரை பிள்ளை?*
"காடு வரை பிள்ளை" என்று
---------- கண்ண தாசன் சொன்னான்- ஆனால்
நாடு விட்டு நகரம் விட்டு
----------வீடு விட்டு உறவை விட்டு
தேடி வேலை** சென்ற பேர்கள்
----------மீண்டு வருதல் இயலா நிலையில்
பாடு பட்டு பாசம் கொட்டி
----------வளர்த்த பெற்றோர் இன்னுயிர் இன்று
கேடு விளைக்கும் கொடுநோய் தாக்கி
----------கூடு விட்டுப் பறந்த போதும்
வீடு திரும்ப வழியொன் றின்றி
----------வேறு இடத்தில் முடங்கிக் கிடக்க
காடு வரையில் கடைசிப் பயணம்
----------கூடச் செல்லல் எங்கன மியலும்?
* என்னுடைய ஒத்த வயதினருக்கு "வீடு வரை உறவு" என்று தொடங்கும் இந்தப் பாடல் நினைவிருக்கலாம். பாதகாணிக்கை திரைப்படத்தில் இடம் பெற்றது.
** "வேலை தேடி" என்று படித்தறிக.