Search This Blog

Feb 26, 2025

சிவ பதிகம்

சிவ பதிகம்

இன்றைய சிவராத்திரி தினத்தன்று வெண்டுறை வடிவில் நான் முன்பொருநாளில் சிவபிரானைத் துதித்து எழுதிப் பதித்த பத்துப் பாடல்களைமீண்டும் பதிவிடுகிறேன்.

முக்கண்ணனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

அன்புடன் 

ரமேஷ் 


சிவ பதிகம்


விடைவா கனமேறி வீற்றிருந் துமையவளை
இடமணிந்து  பாதியாய்  இணைத்தவனை  - சடைமுடிமேல்
படமெடுக்கும் அரவணிந்த பரமனைப் பணிந்தவரை
இடரெதுவும் தீண்டாது காண்.!                                                1.

   
ஆல மரத்தடியில் அமர்ந்த்திருந்து மோனத்தவக்
கோலம் தரித்த குருநாதன் -- நால்வேத
நாயகன்  தட்சிணா  மூர்த்தியின்  திருநாமம்
வாயுரைத்தல் நாளும் நலம்.                                                       2.

   
நெடிதுயர்ந்து விசுவத்தை நிறைத்திட்ட பசுபதியின்
அடிமுடியைக் காணவே முயன்றிட்டு --- முடியாமல்
பிரமனும்  நெடுமாலும் முடிதாழ்த்தி வணங்கிட்ட
பரமசிவன் பாதம்பணி வோம். .                                                 3.


பாகீ  ரதன்செய்த பெருந்தவத்தின்  பரிசாக
ஆகாய கங்கைதனை மேலிருந்து கொணர்ந்தவளின்.
வேகத்தைத்  தடைசெய்து  சடைமுடியில் பிடித்திட்ட
ஏகனை மனமே பணி .                                                              4.


ஒருகையில் உடுக்கெடுத்து ஒரு கையில் மானேந்தி
ஒரு கையில் சூலமெடுத்து ---  பிறைமதியை
விரிசடையில்   முடிதரித்து களிநடம் புரிகின்ற
திரிபுராந்  தகனைத்   துதி.                                                          5,


அவிமறுத்து அவமதித்த தக்ஷனின்  யாகத்தை
அழித்துப்பின் அருந்தவத்தில் அமர்ந்தவன்மேல்  தேவர்களின்
மன்னுதலால் மலரம்  பெறிந்தமன்  மதனைத்தன்
கண்ணுதலால் எரித்தோன் துணை.                                            6.


காலம் முடிந்ததெனக்  காலன் அழைத்திட்ட
பாலன்மார்க் கண்டேயன் உயிர்தனைப்-- பாலித்து
காத்தவற்கு சாகா வரம்தந் தருள்புரிந்த
கூத்தனடி நெஞ்சே  பணி .                                                          7.


நிலையிலது   இவ்வுலகு நிலையிலது   இவ்வாழ்வு
விலையற்ற  இவ்வுண்மை   விளக்குமுக மாகவே
இடுகாட்டின்  சுடுசாம்ப லுடல்முழு திலும்பூசி
நடமாடு வோனைத் துதி. .                                                           8.  


நிலமாகக்   காஞ்சியிலும் வளியாக ஹஸ்தியிலும்
ஜலமாக திருவானைக்  காவல் தலத்திலும்
ஒளிர்நெருப்   பாய்த்திரு வண்ணா மலையிலும்
வளியாக தில்லைத்திருச் சிற்றம் பலத்திலும்                                         


ஏகாம்ப ரேசனாய்  காளஹஸ் தீசனாய்
ஜம்புகே சுவரனாய் அண்ணா மலையனாய்
அம்பலத்தில் தாண்டவ நடமிடும் ராசனாய்
அமர்ந்தஐம்  பூதனைப் பணி.                                                        9.
.      

அசுரர்களும் தேவர்களும் அடிபணியும் வேதியனை
விசும்புவெளி படைத்தவற்றைக் காக்குமொளிச் சோதியனை
அணங்குதனை இணங்கித்தன் உடல்கொண்ட பாதியனை
வணங்கியே    முக்தியடை வோம்,                                                     10    

9 comments:

  1. Very nice to read this on Shivaratri Day. Entire Sivapuranam in your inimitable style 🙏

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தொகுப்பு! இராமதாசு.

    ReplyDelete
  3. முத்தான பக்திச் சுவை கூட்டும் அருமையான கவிதைகள்!கவிஞர் ரமேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கமும் நன்றியும்! முக்கண் பரமனின் புகழ் பாடுவோம் எந்நாளும்!

    ReplyDelete
  4. Super sir. செய்யுள் செய்வோர் (என் நண்பராகவும்) இன்னுமுள்ளார் என என் மனம் இறுமாப் படைகிறது ஐயா!

    ReplyDelete
  5. 👌Super composition of Shiv puranam itself👏👏Relished the style of composition 🙏

    ReplyDelete
  6. உங்கள் சிவபுராணம் ஒரு சிறந்த சிவப்பு புராணம் என்றே கூறலாம்! ராமநவமிக்கும் இந்த மாதரி எதிர் பார்கிறேன் .

    ReplyDelete
  7. நல்ல கவிதை . நன்றி

    ReplyDelete