Search This Blog

Nov 14, 2024

பிறவித் துறத்தல்

பிறவித் துறத்தல் 




விண்ணும் மண்ணும் ஒன்றை  யொன்று நின்று சேரும் கோட்டினை 

என்றும் நாம் நடந்து சென்று அடைய  முடிவ   தில்லைபோல்   

என்னுளே யேயுள்ள னென்று எவரும் கூறும்  இறைவனை 

'சின்ன தூரம்' ஆயினும் அடைய முடிவ தில்லையே!


கண்ணை மூடி காதை  மூடி கால்மடக்கி அமர்ந்தபின் 

எண்கணக்கில் எண்ணி மூச்சை இழுத்தடக்கி விடுகையில் 

எண்ணம் பலவும் எந்தன் உள்ளே வந்து வந்து போவதால் 

என்கணக்கில் இறைவன் ஏட்டில் புண்ணியங்கள்  ஏறுமோ?


வந்து போன நாட்க ளில் செஞ்ச பாவ புண்ணியம் 

இன்னும் மீதி நாட்களில் செய்யப்  போகும் காரியம் 

முந்தை யப்பல பிறவியில் முடிந்து வைத்த மிச்சமும்   

இந்த யாவும் இணைந்ததே இப் பிறவியின் அப்புறம் 


ஜன்ம ஜன்ம மாய்த்  தொடர்ந்து இன்னும் வருமிப் பின்னலில்  

இன்ப துன்பம் மீண்டும் மீண்டும் முடிவில் லாமல் வருவதை

நின்று போகச் செய்திடும் நல்வழி யொன் றுண்டெனின்     

என்னுள் உள்ள இறைவனை யான் கண்டு கொண் டுணர்வதே  


ஏட்டில் இந்த உண்மையை மீட்டும் மீட்டும்* படிக்கிறேன் 

பாட்டில் இந்த உண்மையை எழுதி ஏட்டில் பதிக்கிறேன் 

சேட்டை செய்யும் மனதி லிந்த  உண்மை என்று ஒட்டுமோ 

 நாட்கள் பலவும் நீளுமுன்    தேட்டம்** தீர்ந்து தெளியுமோ

*மீட்டும்=மீண்டும் 

**தேட்டம் = தேடுதல் 


அன்புடன் 

ரமேஷ் 



 







Nov 7, 2024

இன்று சூரசம்ஹாரம்!

இன்று சூரசம்ஹாரம்!

இந்த தினத்தன்று முருகனை "எண்ணி" , இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் எழுதி பதித்த இப் பாடலை, மீண்டும் பதிக்கிறேன்,

அன்புடன்

ரமேஷ்.

முருகனை "எண்ணு"வோம்.!


ஓரிரண்டு# தேவியராய் வள்ளிதே  வானையை            #1*2                  
தாரமாய் மணங்கொண்ட தார்மார்பினன்  
ஈரிரண்டு#  நால்வேதத்  துட்பொருளை உணர்ந்தபின்    #2*2
பிரணவத்தை   ஈசர்க்கு  போதித்தவன் 

 
மூவிரண்^  டாறான முறுவல் முகங்களுடன்                  ^ 3*2
சேவிக்கும் அடியார்க் கருள்செய்பவன்.
நாலிரண்டு^  எண்திக்கும் அரக்கரை  அழித்திடவே       ^ 4*2
வேலெடுத்து போர்தொடுத்து வென்றிட்டவன்.

 
ஐயிரண்டு^ அவதாரம் எடுத்துலகைக் காத்திடும்      ^5*2                     
மைவண்ணன் திருமாலின் மருகனவனே!
ஆறிரண்டு^  பன்னிரண்டு தோள்களுடை முருகனுக்கு    ^ 6*2
வேறுஒரு தெய்வமும் நிகராகுமோ?
  
ஏழிரண்டு^  பதினான்கு  இரவுகள்  வளர்ந்திட்ட             ^ 7*2     
முழுமதியைப்  பழித்திடும்  வதனத்தினன்.
எட்டிரண்டு^  பதினாறு செல்வமும்  சிறப்புடன்              ^  8*2
கிட்டிடும்   குமரனைத்  துதிப்பவர்க்கே.

சித்தர்க ளீரொன்ப தில்^மூத்த  அகத்தியர்க்கு               ^ 9*2
சத்தான முத்தமிழைப்  போதித்தவன்.

ஐம்பூதம் ஐம்பிராணன் ஐம்புலன் ஐம்பொறியிவ் 
விருவத்தையும்^   இங்கு உருவித்தவன்                            ^ 10*2

                          
எண்கணக்கி  லொன்றுமுதல் பத்துவரை யும்எழுதி 
பண்புனைந்  துன்புகழ்  பாடினேனே!
என்கணக்கு  இப்பிறவி. யில்முடியு  முன்னமே
எனையாண்டு  அருள்புரிவாய்  குமரவேளே!


Nov 4, 2024

வலிகள்

வலிகள் 

சில நாட்களாக சயேடிகா (scicatica) என்னும் நரம்பு வலியால்  பாதிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் இருக்கும் போது எழுதிய பாடல்! வலிகள் அளித்த  ஒரு வெகுமதி!

அன்புடன் 

ரமேஷ் 







வலிகள் 

இரவின் மடியில் இருளின் பிடியில் 

இரண்டாய் பெருகும் உடல் வலிகள் 

முதுகில் தொடங்கி முட்டியின் வழியே 

கணுக்கால் அடையும் வலித்  துளிகள்

நிலத்தின் மேலே பலமாய்க் காலை 

ஊன்றி நடக்க விடா வலிகள் 

பலவகை மருந்துகள்  தினமும் விழுங்கியும் 

விலகா திருக்கும் கால்  வலிகள்

நரகம் இன்று இங்கு வந்ததென 

நம்ப வைத்திடும் நீள் வலிகள் 


வலிகள் பலநாள் அகலா ததனால்  

அதையே விதையாய் விதைத் ததனின்

விளைவாய் மனதில் முளைத்த கருத்தை    

எழுத்தாய்  எழுதிய இக் கவிதை

ஒலிமொழி வழியே உனைவந் தடையுமுன் 

வலிகள் எனைவிட் டோடிடுமோ? - இ(ல்)லை 

இன்னும் பலநாள் தொடர்ந்தே எந்தன் 

வாழ்க்கையின் நிறத்தை மாற்றிடுமோ?