மாத்ரு பஞ்சகம் - பாடல்கள் 3,4,5
முற்றும் துறந்த முனிவர் ஆதி சங்கரர் தனது தாயைப் பிரிந்து வருந்தி அழுது பாடிய பாடல் தொகுப்பின் முதல் இரண்டு பாடல்களை சென்ற பதிவில் பதித்திருந்தேன். அடுத்த மூன்று பாடல்கள் இந்தப் பதிவில்.
அன்புடன்
ரமேஷ்
பாடல் -3
ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே மாத்ரு பஞ்சகம் - தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II
தாயே! மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. மரித்த தினத்தில் சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது. தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை. காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!
தனியாக தாயேநீ மரிக்கின்ற தினத்தில்
புனிதநீர் உன்வாயில் நான்வார்க்க வில்லை!
உனதுடலம் உயிர்நீத்து அனலேறு முன்னே
மனதார அவிசளிக்க முடியவும் இல்லை!
கனிவாக உன்னைநான் என்மடியில் ஏந்தி
காதோடு கர்ணமந் திரமோத வில்லை
சுணங்கியே சிலகாலம் கடந்துவந்த என்மேல்
இணங்கியே தயைகாட்டி அருளுவாய் தாயே!
பாடல் -4
முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
என் முத்தல்லவா ! என் கண் அல்லவா ! c என் ராஜா, என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே! அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !
கண்ணே! கண்மணியே! முத்தே! என்ராஜா!
என்றெல்லாம் கொஞ்சி எனைவளர்த்த தாயே!
என்றென்றும் நானே சிரஞ்சீவி யாக
நன்றாக வாழ்வாய் எனவாழ்த்தி னாயே!
தாயைப் பிறிந்த கன்றாக இன்று
வாய்க்கரிசி மட்டும் போடவே வந்தேன்!
பாடல்- 5
அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே –
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
அன்று ப்ரஸவ காலத்தில் ‘அம்மா’ அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே! இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
எனையீனும் பொழுதில்நீ சினையுற் றிருக்க
உனதுடலும் உயிரும்பெரு வலியால் துடிக்க
தனைமறந்து நினைவிழந்து என்னப்பா சிவனே
எனக்கதறி அலறித் துடித்தவென் தாயே!
உனதுமகன் இன்றிங்கு கிருஷ்ணா முகுந்தா
எனவேண்டி பதம்பணிந்து வணங்கினேன் தாயே!