கடலோரக் காட்சி
நண்பர் அரவிந்த் பகிர்ந்து கொண்ட படம். அது பற்றி ஒரு பாடல்.
இப்பாடலுக்கு விளக்கம் தேவையில்லை.
அன்புடன்
ரமேஷ்
அரவம் இன்றி இரவின் மடியில்
-----இன்னும் உறங்கும் நகரங்கள்
இருளைப் பிளந்து கண்கள் சிமிட்டும்
-----தெரு ஓரத்து மின்மினிகள்
சிறிதே வெளுத்து சாம்பல் நிறத்தில்
-----சிற்றலை ததும்பும் சமுத்திரங்கள்
அருணன் வரவை மறைக்கும் சிறுதிரை
-----அரைச் சாம்பல்நிற மேகங்கள்
பிறிதோர் காலை அரும்புமித் தருணம்
-----செந்நிறச் சாயலில் ஒளிர்வானம்
பரிதியின் கதிர்முழு வான்நிறைக் கும்வரை
-----மேலே மிதக்கும் மேகங்கள்
தரிசனம் செய்ய இக்காட்சியின் அழகை
-----இவ்விரு கண்கள் போதாதே