பி.எல். எப் (B.L.F)-இல் தெருநாய்த் திருவிழா --
இப்போது பி.எல். எப் . பில் நடைபெறும் சூடான ஒரு வாக்குவாதம் தெரு நாய்கள் பற்றியது. தெரு நாய்கள் உள்ளே வருவதை எதிர்ப்பவர்கள் ஒரு பக்கம். அவைகளுக்கும் இடம் கொடுக்கவேண்டும் என்று ஆதரிப்பவர்கள் ஒரு பக்கம்.
டெலிக்ராம் இணையத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் இந்நேரத்தில், உஷ்ணத்தைக் கொஞ்சம் தணிக்க, ஒரு நையாண்டிப் பாடல் ( song with a satirical touch!) - சில உண்மைகளுடனும் , சில கிண்டல்களுடனும்!
இரண்டு பிரிவினரின் வாதங்களையும் கொடுக்க முயன்றிருக்கிறேன், என்னால் முடிந்த அளவுக்கு. பிரித்துக், கிழித்து ஆராயாமல், படித்து ரசியுங்கள்!
அன்புடன்
ரமேஷ்
எதிர்ப்போர்
பிரிகேடில் தெருநாய் நடமாட்டம்
முதியோர் குழந்தைகள் தடுமாற்றம்
உடனே நாய்கள் இடமாற்றம்
தேவை அதுவரை விடமாட்டோம்.
ஆதரிப்போர்
தெருநாய் கள்லேக் பிரண்டுக்குள்
வருவதையே நீ தடுக்காதே !
இ ட்டப்படி அவை வந்திடலாம்
சட்டப்படி அது சாத்தியமே.
எதிர்ப்போர்
ஒருநாய் இருநாய் என்றாலே
சரிதான் என்று பொறுத்திடலாம்.
தெருநாய்க் கூட்டம் பலவாக
பெருகு வதேதான் தலைவலியே.
ஆதரிப்போர்
உள்ளே வந்த நாய்களையே
தள்ளுதல் வெளியே முறையாமோ?
விருந்தினராகக் கருதி அதை
வரவேற்றி டுதல் சரிதானே.
எதிர்ப்போர்
தறிகெட்ட டோடிக் குழந்தைகளை
துரத்தும் தெருநாய்க் கூட்டத்தை
விரட்டி வெளியே அடிக்காமல்
விருந்தை அளித்தா வரவேற்போம்?
ஆதரிப்போர்
நெடுநாள் நாய்கள் குடியிருந்த
நிலப் பரப்பு அவையுரிமை.
விட்டதை* வெளியே துரத்துவதை * விட்டு அதை
சட்டமும் நீதியும் தடுக்கிறதே!
எதிர்ப்போர்
வரும்நாய் வெறிநாய் ஆகிறதே!
பெருங்குரல் எடுத்துக் குரைக்கிறதே!
சிறிய குழந்தைகளை அந்நாய்கள்
சீறிக் கடித்தால் என்னாகும்?
ஆதரிப்போர்
எல்லா உயிரையும் சமமாக
எண்ணுதல் நம் பண்பாடு.
தெருநாய் குழந்தையைக் கடித்திட்டால்
என் தவறா? அது உன் பாடு,
எதிர்ப்போர்
"பெட்"களை வளர்க்கும் "பெட்"றோரே!
நீங்களும் குழந்தைகள் பெற்றோரே!
உங்கள் குழந்தையை ஒருதெருநாய்
ஓடிக் கடித்தால் பொறுப்பீரோ!
இப்படியாக இரு சாரார்
ஒருவர்க் கொருவர் எதிர்மறையாய்
தப்பு மற்றவர் பக்கமென்றும்
தாமே சரியென மோதுகையில்
இக்கட் டெதுவும் இல்லாமல் ,,
டிக்கெட் எதுவும் எடுக்காமல்
"எக்கேடாய் இவர் போகட்டும்"
என்றிங்கு நாய்கள் நடமாடும் !