Search This Blog

Sep 29, 2021

யாணர் கூடல் கவிதைகள் - பதிவு 1

யாணர் கூடல் கவிதைகள்  - பதிவு 1

யாணர் என்னும் இணையதளத்தில் அவ்வப்போது என்னுடைய பாடல்களைப் பதிவு செய்கிறேன். சென்ற ஆண்டு அவர்கள் நடத்திய கூடலில் அனைவரும் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் ஆறு வரிக்கு மேலாகாமல் கவிதைகளை எழுதிப் படிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை  ஏற்று , கொடுக்கப்பட்ட தலைப்புகளை ஈற்றடியாக அமைத்து நான் ஐந்து வெண்பாக்களையும் ஓர் விருத்தத்தையும் எழுதினேன். 

அப் பாடல்களை மூன்று தொகுப்புகளாக - ஒரு தொகுப்பில் இரண்டு கவிதைகள் -   கனித்தோட்டத்தில் பதிவிடுகிறேன். 

முதல் தொகுப்பு, இதோ!

அன்புடன் 

ரமேஷ் 


தலைப்பு  =கண்ணுக்கு வராத கனவு 

கருக்கல் இருட்டு அரைத்தூக்க நேரம் 
உறக்கம் கலையாத வேளை - பிறக்கின்ற  
எண்ணத் திழைகள்  விழித்தால்   மறையுமிது 
கண்ணுக்கு வாராக்  கனவு .
(பல விகற்ப இன்னிசை வெண்பா )

தலைப்பு- கவிதைக்கு வராத வார்த்தை

வார்த்தை விவரிக்க   ஏலாக்    கவிதையுனை 
சேர்கின்ற  நாளென்று நேருமோ- காத்துத்   
தவிக்குமென் தாகம்  தணியும்  வரைநான் 
கவிதையில்  சேராத சொல்
(பல விகற்ப இன்னிசை வெண்பா)
X






Sep 27, 2021

குழந்தைத் தொழிலாளி

 குழந்தைத் தொழிலாளி

காண்போர் மனதை நெகிழச்செய்யும் இப்புகைப்படம் இலக்கியச்சோலை என்னும் தமழிதழில் வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு பொருந்தும் வகையில் ஒரு நான்கு வரிக் கவிதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதன்பிறகும் இப்படத்தின் தாக்கம் என் மனதை விட்டு அகலவில்லை. 

"என்ன காரணத்தால் இந்தப் பெண் இந்த வயதிலியே இக்கொடுமைக்கு ஆளானாள்?" என்று யோசித்து இன்னும் சில வரிகளைச் சேர்த்து இக்கவிதையை நிறைவு செய்ய முயன்றதன் விளைவாக விளைந்த பாடல் இது!

அன்புடன்

ரமேஷ்  




செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே    

அங்கையி லேபிடித்த  கருங்கற் குழவிகொண்டு 

செங்கொல்லன் வடித்த தங்கச் சிலையொத்த 

சின்னஞ்சிறு பெண்ணிவளே செங்கல்லைச் சிதைக்கின்றாள்!


கொடுநோய் கொரானாவின் பிடியால் அடிபட்டு   

அடைபட்ட  பள்ளிகளில்   ஒருவேளை சத்துணவும் 

கிடைக்காமல் தடைபட்டுப் போனதனால் பசிப்பிணிக்கு 

விடைகாண வேண்டியிவள் கல்லுடைக்க வந்தாளோ 


பாடுபாட் டுழைத்துத்தன் குடும்பத்தைக் காக்காமல் 

குடியென்னும் கொடுமரக்கன் கையுள்ளே  கட்டுண்டு

அடிமையாய் அதற்காகி தன்கடமை தனைத்துறந்து

வீடுவிட்டு ஓடிவிட்ட   தந்தையினால்  இந்நிலையோ


தங்கையொன்றைப் பெற்றடுத்த தாய்க்குப் பதிலிவள்தன் 

பங்குக்கு தொழில்செய்து பொருளீட்ட வந்தாளோ?

தாய்தந்தை இருவரையும் நோய்க்குப் பறிகொடுத்து

வாய்க்கரிசி போட்டபின்னே வாழும்வழி தேடினளோ?


செங்கதிரோன் சுடர்க்கதிரால் சுட்டெரிக்கும் வெய்யிலிலே    

அங்கையி லேபிடித்த  கருங்கற் குழவிகொண்டு  

செங்கல்லைச் சிதைக்கின்றாள் சின்னஞ்சிறு பெண்ணிவளே!

இங்கிவளின்  துயர்துடைக்க  விடையென்று கிடைத்திடுமோ?


 







Sep 14, 2021

கடற்கரைக் காட்சி

சென்ற மாதம் சென்னை மரீனா கடற்கரையில் நான் பிடித்த புகைப்படம் இது!

இதை நான் நண்பர்கள் சிலருடன் பகிர்ந்து கொண்டபோது, ஒரு நண்பர்              " இப்படத்துடன் அது பற்றிய ஒரு பாடலையும் எழுதிப்  பதித்திருக்கலாமே!" என்ற ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

அந்த உந்துதலில் விளைந்த  பாடல் இது!

அன்புடன் 

ரமேஷ் 

பி.கு: இந்தப் படத்தில் இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இரு மகன்கள்!



கடற்கரைக் காட்சி 


மெல்லக் கிழக்கினிலே மேலுழும்பும் சூரியன்தன்

 வெள்ளைக் கதிர்க்கொற்றை அள்ளித் தெளிக்கையிலே 

வெள்ளித் தகடென்று மின்னும்  கடலெந்தன்  

உள்ளத்தை கொள்ளைகொள் ளும்