Search This Blog

Dec 17, 2019

மார்கழி விடியல்

மார்கழி விடியல்





மார்கழித் திங்கள் நிறைபனிக் காலை
தேரில்  ஏறி வான்வழி உலவும்
சூரிய னொளிக்கதிர் தரைதொடும் நேரம்
ஊரெழு முன்தம் உறக்கம் விடுத்த
கூர்விழி  மாதர்தம் குடிலின் வாயிலில்
நீரைத் தெளித்து நிலத்தைக் கழுவி
அரைத்த அரிசி மாவை எடுத்து
விரலால் விரிமாக் கோலம் இட்டு
ஆவின் சாணம் அதனுள் வைத்து
பூசணிக் கொடியின் பூவைச் செருகி
திருப்பா வைகளின் பாசுர மிசைத்து
அறிதுயில் கொள்ளும் அரியை எழுப்ப

விடியும் இனியவோர்  காலைப்  பொழுது












Dec 10, 2019

அங்ஙனமே ஆகுக! ஆமென்! ததாஸ்து!

அங்ஙனமே ஆகுக! ஆமென்! ததாஸ்து!


இன்றைய செய்தித்தாளை
எடுத்துப்  பிரிக்கையில்
அழையாது  வீடு வந்த விருந்தினராய்
செய்தித்தாள் பக்கங்களின் நடுவே
செருகி வைக்கப்பட்ட துண்டு விளம்பரங்கள்
கீழே விழுந்து பறக்கின்றன -

படிக்கப்படாமலே ! -------

என்போன்ற இளம் புதுக் கவிஞர்கள்
தம் மின்னஞ்சல் முகவரிக்  கோப்பகத்தில்^                ^ =email address book
பட்டியிலடப்பட்ட  எல்லோருக்கும்
பதித்து அனுப்பியும் மதித்துப் படிக்கப்படாத
பாடல்களைப்   போல !

இறைவா!

இந்தத் துண்டு  விளம்பரங்கள் படிக்கப்படட்டும்!

காட்டாங்குளத்தில் காலிமனைகள் விலை போகட்டும்!
கே.எப்.சீ -*யின் கோழிக்கால் துண்டுகள்                           * கே.எப்.சீ = KFC
        கூடுதலாய் விற்கப்படட்டும் !
தவணை முறையில் பணம் வாங்கி
        தங்கநகை தருவோரின் முயற்சிகள் பலிக்கட்டும் !
மட்டஞ்சேரி மருத்துவ மனையின் முயற்சியால்
       மூட்டுவலி  நோயாளிகள் சுகமடையட்டும்!
இரண்டு வாங்கினால் இனாமாக இரண்டு கொடுக்கும்
         அங்காடிகளின் வியாபாரம் வளரட்டும் !

 அதுபோல

எங்கள் பாடல்களும்
படிக்கப்படட்டும்!
பிடிக்கப்படட்டும்!

அங்ஙனமே ஆகுக!
ஆமென்!
ததாஸ்து!


அன்புடன்

ரமேஷ்




Dec 9, 2019

பிரதோஷப் பாடல் - 28

பிரதோஷப்  பாடல் - 28

இன்று கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமை (சோமவாரம்).
சனிக்கிழமையன்று வரும் பிரதோஷத்தைப் போலவே இந்த கார்த்திகை சோமவாரப்  பிரதோஷமும் சிறப்பு வாய்ந்தது.
இந்த இனிய நாளன்று ஒரு பிரதோஷப்  பாடல்!

அன்புடன்

ரமேஷ்

பிரதோஷப்  பாடல் -

சோமவாரக் கார்த்திகையில் சேர்ந்தவிப்ர தோஷநாள் 
வாமபாகம் மாதணிந்த காமதகன மூர்த்தியாம் 
சாமவேத நாயகன் சிவனையின்று வணங்குவோர் 
சேமநலங்கள் சேரவே சிறப்புடனே  வாழுவர்.



Dec 7, 2019

குமரிக் கண்டம்


திருவிளையாடல்  பாடல்கள் - ஒரு விளக்கம் 

சென்ற திருவிளையாடல் பாடல் 13-ல் , இந்திரனின் ஆணைக்கு உட்பட்ட  , வருணனின் ஏவலால் , கடல் மதுரையை மூழ்கடிக்க வந்ததாகவும், அதை 
வேலெறிந்து பாண்டிய அரசன் வற்றச்செய்ததாகவும்  இருந்தேன்.
இது பற்றி  நண்பர் சுந்தர் ' மதுரையை எப்படி கடல் கொள்ளமுடியும்?"  என்ற வினாவை எழுப்பியத்தின் விளைவே இந்தப் பதிவு.

அக்கேள்விக்கான விடை - 
பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மதுரை   இப்போதைய மதுரையல்ல! அது கடலில் மூழ்கி அழிந்த தென்மதுரை .

பல தமிழ் ஆய்வாளர்களின் கருத்துப்படி, இப்போதைய கன்னியாகுமரிக்கு தென்புறம் , ஒரு  நிலப்பகுதி இருந்தது. இது குமரிக் கண்டம் (லெமுரியா ) என்று அழைக்கப்பட்டது. ( வரைபடம் பார்க்கவும் ).  இங்கிருந்த மதுரையே முதல் சங்கத்தின் இருப்பிடம். 

இப்பகுதியை   பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள்.  அந்த மன்னர்களில் சிவபெருமான், முருகர் ஆகியோரும் அடங்குவர். திருவிளையாடல் புராணம் நடந்தது இந்த பாண்டிய நாட்டில் என்று கருதலாம்.





குமரிக் கண்டம்


கடலால் இப்பகுதி அழிந்தபிறகு, கபாடபுரம் பாண்டிய நாட்டின் தலைநகராக ஆனது. இடைச்சங்கம் இங்கு அமைக்கப்பட்டது.

இதுவும் கடலுக்கு இரையானபிறகு , பாண்டியநாடு இன்றைய தமிழத்தின் தென் பகுதியில் அமைந்தது.  இப்போதைய மதுரை அதன் தலைநகரானது. இதுவே  கடைச்சங்கம் அமைந்த இடம்.

இத்தகவல்கள் சில தமிழ், சமஸ்க்ருத நூல்களின்  அடிப்படையில் கணிக்கப்பட்டவை. விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும் விவரம் அறிய விரும்புவோர் https://www.slideshare.net/sagarben/lemuria-56619904 என்ற தொடர்பை பார்க்கவும்.


Dec 6, 2019

திருவிளையாடல் பாடல் - 13

திருவிளையாடல் பாடல் - 13


மீண்டும் திருவிளையாடல் பாடல்கள் - நீண்ட இடைவெளிக்குப் பிறகு!



அன்புடன் 

ரமேஷ் 




திருவிளையாடல் பாடல் - 13

கடல்சுவற  வேல்விட்ட படலம்




நேர்த்தியுடன்    வேள்விகள் செய்து      சேர்த்தபெரும் புண்ணியங் களினால்
தீர்த்திடுவன்     அவனென் ஆட்சி          எனவேர்த்த  இந்திரன் பணிக்க
ஆர்த்தெழுந்து  மதுரை    நகரை            அழித்திட எழுந்த  கடலை
கார்த்திகையின்  மைந்தன் வழுதி       சுவற்றினன் வேலினை  யெறிந்து 

பாடற்பொருள் 
உக்கிரபாண்டியன் செய்து வேள்விகளின் நற்பலனால், அவன் இந்திர உலகை ஆளும் தகுதி பெற்று, தன பதவியைப் பறித்துவிடுவான் எனப் பயந்த இந்திரனின் ஆணைப்படி, மதுரையை அழிக்கப்  பொங்கிவந்த பெருங்கடலை தன் கைவேலை எரிந்து வற்றச்  செய்தான் பாண்டியன்.

சுவற்றுதல்  = வற்றுதல் 


The story in tamil


பாண்டிய ராஜ்ஜியத்தை ஆண்டு வந்த உக்கிர பாண்டியன், தொண்ணூற்று  ஆறு அஸ்வமேத யாகங்களை செவ்வனே செய்து முடித்தான். நூறு யாகங்கள் முறைப்படி முடித்தவர் இந்திர உலகையாளும் தகுதி அடைவர் என்பதால், தன்  பதவி பறிபோகும் என்று பயந்த இந்திரன், வருணனை அழைத்து, இரவோடு இரவாக மதுரை நகரை  அழிக்கப் பணித்தான். வருணனின் ஆணைப்படி கடலும் மிக்க சீற்றத்துடன் மதுரையை நோக்கிப் பாய்ந்தது. அப்போது,  முனிவர்  உருவத்தில் வந்த சிவபெருமான் உக்கிரபாண்டியனுக்கு கடல் பொங்கி வருவதைத் தெரிவிக்க, பாண்டியனும் அவனுக்கு அவன் தந்தையான சுந்தரேசப்பெருமான் அளித்திருந்த வேலை  எரிந்து அக்கடகை வற்றச் செய்தான்.

The story in English 

While righteously governing the Pandya Kingdom, Ukkira Pandian performed ninety six aswametha yagams successfully. Seeing this Lord Indra become scared as those who performed hundred yagams were deemed fit to become the King of Devas. To prevent this, he ordered Varuna, the Lord of the seas , to destroy the city of Madurai. When the sea was rushing towards Madurai in the middle of the night, the Lord appeared in the form of a mystic and warned the King, who , as has been advised earlier, threw his spear ( Vel) at the rushing sea and the waters of the sea dried up immediately.


ஒப்புகை  :  இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ள படம் shaivam.org தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

Dec 1, 2019

நான் மட்டும் ஏனோ தனியாய்

முதுமை -2 - நான் மட்டும் ஏனோ  தனியாய்

மனம் எப்போதும் ஒரேநிலையில்   இருப்பதில்லை.

சில சமயங்களில் மகிழ்ச்சி .
சில சமயங்களில் அமைதி.
பல சமயங்களில் இரண்டுக்கும் இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் நிலை,
இன்னும் சில சமயங்களில் மன அழுத்தம்; வருத்தம் கலந்த ஒரு சுயபச்சாத்தாபம்.

நான் எழுதும் பாடல்கள்  அவ்வப்போது இருக்கும் மனநிலையைப் பொருத்து அமைகின்றன.

கீழே எழுதி பதித்திருக்கும் பாடல் எந்த வகையைச் சேர்ந்தது என்பது உங்களுக்கு சுலபமாகப் புரியும்!

அன்புடன்

ரமேஷ்


நான் மட்டும் ஏனோ  தனியாய் 

நித்தமும் காலையில்  உலவப் போகையில் 
ஓத்த வயதினோர்  பலரும்  கூடியே  
சத்தமாய் பேசி சிரித்து மகிழ்கிறார்
--------நான் மட்டும் ஏனோ  தனியாய்! 

சுயமாக  நடக்கின்ற செயல்திறம் குறைந்தாலும் 
வயதான தம்பதிகள் ஒருவரு டேயொருவர்
கைகோத்து உறுதுணையாய் நடப்பதை நோக்குகின்ற    
--------நான் மட்டும் ஏனோ  தனியாய்!

வெளியிலே செல்கையிலும்   விருந்தினர் வருகையிலும்
களிப்புடன்  கதைபேசும் காலங்கள் குறைவாகி
வெளிப்பூச்சுப்  புன்னகை சலிப்புடன் புரிந்தபடி
--------நான் மட்டும் ஏனோ  தனியாய்!

சுற்றியே எனைச்சூழ்ந்து உற்றார் பலரிருந்தும்
மற்றபிற  தேவைகள் குறையின்றித்  தீர்ந்தாலும்
பற்றின்றி தாமரை இலைமேலே நீர்போல
--------நான் மட்டும் ஏனோ  தனியாய் !

புத்தகம் பலவற்றை  புரட்டிப் படித்திட்ட
தத்துவங் கள்ளெதுவும் பயனின்றி யேபோக
சித்தமும் எதிலுமே  செல்லாது பித்தமுற
--------நான் மட்டும் ஏனோ  தனியாய்!