Search This Blog

Nov 28, 2019

மீ டூ {Me Too }--

மீ டூ   {Me  Too }--

"மீ டூ " இயக்கத்தில் மூலமாக, பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பலரும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்  பட்டாலும், இன்றும் அவர்கள் சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கவே செய்கிறார்கள். ஆனால் , குற்றம் சாட்டியவர்களோ, தலை குனிந்து சமூகத்தின் பல கேள்விகளுக்கு ஆளாவதோடு  , ஒதுக்கப்படவும் செய்கிறார்கள்.

இதில் மிகவும் வருத்தப்பட வைக்கும் விஷயம் , நாம் பெரிதாக மதிக்கும் பலரும் இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்ளாது விடுவதோடு, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் தோளோடு தோளுரசி நிற்பதுதான்!

You Too ? என்று கேட்கத்  தோன்றுகிறதல்லவா?

நாம் எங்கே போகிறோம்?

வருத்தத்துடன் 

ரமேஷ் 






சின்னமயில் ஆட்டத்தை  கூவும்குயில்   கூட்டத்தை
சின்னபின்ன மாய்ச்செய்து  சீரழிக்க  வந்தோரும்
என்னருமைத் தாய்த்தமிழைக்  காப்பாகப்  பூண்டதனால் 
மின்னுகிறார் வைரமாய் இன்று(ம்) !

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா )
X

Nov 24, 2019

பிரதோஷப் பாடல் - 27

பிரதோஷப் பாடல் - 27

அவினாசி அப்பன்


இன்றைய பிரதோஷப் பாடல் அவிநாசியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைப் பற்றியது.
இத்தலத்தில் வசித்து வந்த தம்பதிகளின் ஒரே மகன் குளத்தில் நீராடுகையில் முதலையால் விழுங்கப்பட்டு உயிரிழந்தான். மகனை இழந்து வாடும்  பெற்றோரைப் பற்றி அறிந்த சுந்தரர், அவன் உயிரை மீட்க வேண்டி , பரமசிவனைத் துதித்து ஒரு பதிகம் பாடி வேண்ட, சிவனருளினால் மகவு மீண்டும் உயிர் பெற்றதாக வரலாறு.
இதை பற்றி இன்று ஒரு பாடல்.

அன்புடன்
ரமேஷ்

பி.கு :
இத்தலம் பற்றிய வேறு விவரங்களையும், மேலே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ள ஸ்தல புராணத்தைப்  பற்றிய முழுவிவரத்தையும்    கீழ்கண்ட இணைப்பில் காணலாம்.
https://temple.dinamalar.com/New.php?id=491


அவினாசி அப்பன்

கவின்தா மரைக்குளத்தில் கருமுதலை கவ்வியே ஒருமகனும் உயிர்           இழந்தததால்

தவிக்கின்ற தாய்தந்தை துயர்தீர்க்க வேண்டியே சுந்தரரும் பதிகம் பாட

கவிதையினைச் செவிமெடுத்த புவியாளும் சிவனருளால் உயிர்பெற்று மகனும் மீண்டான்!

அவினாசித் திருத்தலத்தில் பெருங்கருணைத் தாயோடு அமர்ந்தருள்வோன் கருணை என்னே!

Nov 20, 2019

முதுமை - 1

முதுமை - 1

முதுமை அடைவது  என்பது எவருக்கும் நிகழ்வதே. தவிர்க்க முடியாதது.

என்றாலும், இளைய வயதில்  ஓடுயாடித் திரிந்த ஒருவர், வயது வளர்கையில், ஒன்றன் பின் ஒன்றாக தன் வடிவையும், செயல் திறன்களையும்  இழந்து படும் பாட்டை நேரில் காண்பது ஒரு கொடுமை!

இது நமக்கும் நாளடைவில் நடக்கும்  என்று நினைத்தாலே சற்று பயமாகத்தான் இருக்கிறது!

இந்த முதுமை மாற்றங்களை பற்றி -----

அன்புடன் 

ரமேஷ் 



முதுமை - 1





கருகரு கருவென இருந்த  முடியில்
நரைமிக  ஏறி   நாளும் உதிரும்

துரு துரு துருவென அலைந்த கண்ணில்
புரையும் ஏறி திரையாய்  மறைக்கும்

உரக்கப் பேச முயன்றிடும் போதும்
குரல்வளை தாண்டி குரல்எழும் பாது

சருமம் உலர்ந்து சருகாய்ப் போகும்
உருவம் மாறும்; உடலும் தேயும் .

நகம்மிக நீளும்;  நாக்கும் குழறும்;
இகசுக போகம் இழந்தே போகும்.

பத்தியம் கசக்கும்; பசியும் குறையும்
நித்திரை நீங்கும்; மெத்தையும் நோகும்.

தசைகள் தளர்ந்ததன்  விசையும் குறையும்.
நிசிநடு இரவினில் நீரும் கசியும்.

கிடுகிடு கிடுவென நடந்தது மாறி
நடை தடுமாறும்; தடியினைத்  தேடும்.

சிறுசிறு செயல்களும் பெரிதாய்த் தெரியும்.
சிறுமணித் துளியும் நீண்டு விரியும்.

சித்தமும் சிதறும்;  வித்தகம்* விலகும்.
செய்கா ரியத்தில் மெத்தனம் மிக்கும்.

மனதில் தோன்றி மலரும் எண்ணம்
வாய்வழி  வருமுன் மறந்தே போகும்.

இனந்தெரியாத எரிச்சலும் சோகமும்
இணைந்த மனநிலை யேஉருவாகும்.

ஐம்புலன் அசைவுகள்  அடங்கி ஒடுங்கும்.
கைம்மக வைநிகர் நிலையுரு வாகும்.

அகவைகள் நீண்டு ஆண்டுகள்   நகர்கையில்
நிகழும் நமக்கும் ;  மிகையிது இல்லை.

வகையாய் வாழ்ந்திட வழிகள்  இல்லெனில்**
வாழுதல் நன்றோ? முடிவும் என்றோ?


* வித்தகம் =        சாமர்த்தியம்
** இல்லெனில்= இல்லையெனில்












Nov 18, 2019

இட்லி - சாம்பார்

இட்லி - சாம்பார்

இட்லி -  இது தமிழர்கள்  உலகுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்!
பட்டி தொட்டிகளின் தெருவோரக் கடைகளில் தொடங்கி, நட்சத்திர உணவகங்களில் முடிய எங்கும் கிடைக்கும் ஒரு சுவையான சிற்றுண்டி.
இவைகளில் எனக்கு மிகப் பிடித்தது சென்னை ரத்தினா கபே யின் இட்லி - சாம்பார் combination ( இணைப்பு?) .

இது பற்றி ஒரு பாடல்.

சுவையுங்கள்!

அன்புடன் 
ரமேஷ் 




வெள்ளை வெளேரென்ற மல்லிப்பூ இட்டலியை
-----வாழையிலை மேலேவைத்து
அள்ளி யதன் மீதினிலே அறுசுவையை*  அரைத்துவிட்ட 
-----செந்நிறச்   சாம்பாரூற்றி
மேம்பக்க மாகவே** இலையினோர் மூலையில்
------தேங்காயின் சட்னியிட்டு
சாம்பாரும்  சட்டினியும் சங்கமிக்கும் இடத்திலே
-----இட்டலித் துண்டைத் தோய்த்து
மடமட  வென்றதை  மென்று முழுங்கிடும்
-----மகிழ்ச்சிக்கு இணையும் ஏது ?

* அறுசுவையை - condiments
** மேம்பக்கம் = மேல்பக்கம்

Nov 9, 2019

பிரதோஷப் பாடல் - 26

பிரதோஷப் பாடல் - 26

இன்று பிரதோஷம். 

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது.

அன்று இறைவனை வணங்குபவர்களுக்கு பலமடங்கு அதிகமாக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த சனிப்பிரதோஷ மகிமைபற்றி ஒரு பாடல்.

\அன்புடன்

ரமேஷ் 

சனித்தினத் துடன்இணைந்து சேர்ந்துவந்த தாலொரு
தனித்துவத் துடன்விளங்கும் சனிப்ரதோஷ வேளையில்
பனித்தசடைப்   பரமன்பாதம் பணிந்துபோற்றி வணங்குதல்
துணிக்கும்  பிறவித்தளைகளை ! இனிக்குமிந்தப்  பிறவியும் !

Nov 6, 2019

சிவகாசி அவலம்

சிவகாசி அவலம்

இந்தியத் தலைநகரில் சுற்றுபுறச் சூழல் மிக மோசமடைந்து, உடல்நிலை கேடு குறித்த நெருக்கடி நிலைமை பிரகடனம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கான ஒரு முக்கிய காரணம் அண்டைய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பின் மிஞ்சும் அரிதாள்களை எறிப்பதுதான். இது நன்றாகத் தெரிந்தும் அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதற்கெடுத்தாலும் தொடையத் தட்டிக்கொண்டு குதித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு ஓடும்  மக்கள் நல  அமைப்புக்களும் இதற்காக ஒன்றும் செய்ததாகத்  தெரியவில்லை.
அதே சமயம் , வருடத்துக்கு ஒருமுறை தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை எதிர்த்து உயர்நீதி மன்றத்ட் தடை உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள்!
இந்தத் தடையின் காரணமாக, சிவகாசியில் ஆறு லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள்! இதைப்  பற்றி யார் வருத்தப்படுகிறார்கள் ?
"ஊருக்கு இளைத்தவன் பெருமாள் கோயில் ஆண்டி" என்ற பழமொழியைத்தான் இது நினைவூட்டுகிறது!

இது பற்றி ஒரு பாடல் .

அன்புடன் 

ரமேஷ் 


சிவகாசி அவலம்

சுற்றுப் புறச்சூழல் கெட்டு விடுமென்று
முற்றும் வெடிகள்   தடுத்தோரே- சற்றும்
சிவகாசி பாட்டாளி கள்பற்றி  எண்ண
அவகாசம் உண்டோ உமக்கு?

(இரு விகற்ப நேரிசை வெண்பா)