Search This Blog

May 31, 2019

பிரதோஷப் பாடல் - 19

பிரதோஷப் பாடல் - 19

பிஞ்செ ழுத்து என்னும் அகர  உகர மகர ஓமுடன் *
அஞ்செ ழுத்து மந்தி ரத்தை காலை மாலை வேளையில் 
நூறு எட்டு** தடவை சொல்லி  தியானம்  செய்து வருபவர்க் 
கீரு எட்டு*** செல்லு வங்கள் இனிது  வந்து சேருமே  

(எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

 *அ, உ , ம  என்ற மூன்று எழுத்துக்களும் சேர்ந்தால் வரும் ஒளி ஓம் என்பது. இதை     பிஞ்செழுத்து என்று குறிப்பதுண்டு.
** - நூறு எட்டு = நூற்றியெட்டு 
*** - ஈரு எட்டு = ஈரெட்டு = பதினாறு.; 16 வகை செல்வங்களும் கிட்டும் 

அன்புடன் 

ரமேஷ் 

May 21, 2019

நிலவும் பேத்தியும் - 5

நிலவும் பேத்தியும் - 5

சந்திரனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ளவேண்டுமென்றால் , சந்திராயன் திட்டங்கள் எதற்குத் தேவை? என் பேத்தி வாவென்று அழைத்தால் அந்த சந்திரனே வானம் விட்டு இறங்கி பூமிக்கு வந்துவிடாதோ ?

அன்புடன் 
ரமேஷ் 

நிலவும் பேத்தியும் - 5



சந்திர மண்டலம் சென்று சோதனைகள் செய்வ தற்கு
எந்திரங்கள் ஏவும் கணைகள் ஏதுமினித்  தேவை யில்லை
வந்துவிடு என்றென் பேத்தி வானத்து நிலவை யழைத்தால்
தொந்தரவு ஏதும் இன்றி தரைவந்து சேருமந் நிலவே!

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )



May 16, 2019

பிரதோஷப் பாடல் - 18

இன்றைய பிரதோஷப்  பாடல் .

அன்புடன்

ரமேஷ்


பிரதோஷப் பாடல் - 18


தில்லைத்  தலத்தில்    திருநடம் செய்வோனை
எல்லை யிலாக்கருணை உள்ளானை - சொல்லால்  
நமசிவ என்றே   தினமும்  துதித்தால் 
எமபயம் எட்டாது காண்

(இரு விகற்ப நேரிசை வெண்பா )


May 14, 2019

நிலவும் பேத்தியும் -4

நிலவை வாவென்று அழைக்கும் பேத்திகளின் சார்பில், நிலவுக்கு தாத்தா-பாட்டிகளின் விண்ணப்பம்!

அன்புடன்

ரமேஷ்

 நிலவும் பேத்தியும் -4

மழலை மாறாக் குழவி அவள் 
அழகிய வாயால் அழைக்கும் குரல் 
உந்தன் காதில் விழவில்லையா?
வந்திடு உடனே வான் மதியே !

தாயின் மருங்கில் தான மர்ந்து 
சேயவள் உன்னை கரம் காட்டி 
வாவென வருந்தி அழைக்கையிலே 
நீயும் வருதல் முறை தானே! 


மூவெண்  திங்கள் முடிந்த அவள்  
வாயிங் கெனவே  அழைக்கின்றாள்,  
சோறுண் ணுகையில் உனக்கூட்ட!   
வேறென்ன வேலை வாநிலவே !

May 2, 2019

பிரதோஷப் பாடல் - 17


பிரதோஷப் பாடல் - 17

இன்றைய பிரதோஷத்தன்று சிவனைத் துதித்து ஒரு வெண்பா !

அன்புடன் 

ரமேஷ் 


பிரதோஷப் பாடல் - 17


 

கண்ணுதலால்* காமனைச்  சுட்டெரித்த   கைலையனை$
தண்ணிலவைத் * தன்தலையில் இட்டவனை  - எந்நாளும்
எண்ணுகின்ற மண்ணுலக மாந்தருக்கு இப்பிறவிப்
புண்ணியங்கள்  சேர்ந்துவிடும்     காண்

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா 


* -- நுதல் = நெற்றி 
      கண்ணுதல் = நுதற்கண் = நெற்றிக்கண் 
$- கைலையனை = கைலாசத்தில் வசிக்கும் சிவபெருமானை
** - தண்ணிலவு = குளிர்ந்த நிலவு XML வடிவில்