Search This Blog

May 5, 2018

எவரும் செய்யாத ஊழல்கள் ( அல்லது ) எல்லாம் அவன் செயல்!

எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

நாட்டில் நடக்கும் ஊழல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. 1950 முதல் 1980 க்கு உட்பட்ட 30 ஆண்டுகளில்  நடந்த  பெரிய அளவு ஊழல்கள் மொத்தம் 11. ( போபோர்ஸ் உட்பட). இந்த பெரிய அளவு ஊழல்கள்,  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக , 1990 முதல் 2000 வரையிலான  10  ஆண்டுகளில் 18 ஆகவும் , 2000 முதல் -2010வரையிலான 10  ஆண்டுகளில் 29 என வளர்ந்து 2010-2018 க்கான 8 ஆண்டு கால அளவில் 138 ஆக உயர்ந்திருக்கிறது. 
இதில் வருந்தத்தக்க விஷயம், ஊழல்கள் நடந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும்,  பெரும்பான்மையான ஊழல்களில் யார் செய்தது என்று இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை! வரும் நாட்களிலும் இது நிரூபணம் செய்யப்படும் என்றும் நம்புவ தற்கு முடியவில்லை. 
எவரும் செய்யாத , ஆனால் நடந்த, ஊழல்கள் இவை! 
நடக்கும் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணம் என்று நாம் நம்புவதைப்போல , இவற்றிற்கும்  இவன் மேலேயே பழியைப் போட்டுவிட்டு , அடுத்து வரப்போகும் ஊழல்களை பற்றி அலசவேண்டியதுதான்! 

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

டூஜீ  கேசில் ஊழல் ஆனால் 
மாஜி மந்திரி செய்யவில்லை 
ஊரே அறிந்த பீரங்கி ஊழல் 
யார்செய்  தாரதை ?  தெரியவில்லை 

கார்கில் போரின் தியாகி களுக்கு 
சேர வேண்டிய வீடுகளும் 
யார் யாருக்கோ சேர்ந்தது ஆனால் 
யாரும் குற்றம் செய்யவில்லை! 

நிலக்கரி ஊழல்  உண்மை ஆனால் 
தலைவர்கள் தவறெதும் செய்யவில்லை.
காமன் வெல்த்விளை யாட்டுக் கணக்கில் 
ஏமாற் றியவர் யாருமில்லை!

கல்லறைப் பெட்டி ஊழலில் எவரும் 
சில்லறை ஒன்றும்  வாங்கவில்லை.
கனிமம் எடுப்பதில் ஊழல்,  உண்மை ; 
எனினும் எவரும் செய்யவில்லை !

கல் எடுக்கும் ஊழலில் எவரின் 
கல்லாப் பெட்டியும் ரொம்பவில்லை!
நதியடி  மணலும் காணாய்ப் போச்சு, 
சதிகாரர் அதில் எவருமில்லை ! 

வங்கியில் பெரும்பணம் வாங்கிய வர்கள்  
இங்கே எங்கும் தங்காமல் 
இங்கிலாந் ஹாங்காங் ஓடிச் சென்றால் 
எவரைச்   சாடி  என்னபயன்?

ஊழல் என்னும் ஆழல்*நம்  நாட்டை 
அரித்து பாழாய்ச் செய்கிறதே!
விழலுக் கிறைத்த நீர்போல் மக்கள் 
வரிப் பணங்களும் போகிறதே !

ஊழல் எல்லாம் நடந்தது உண்மை 
ஆனால் செய்தவர் யாருமில்லை 
பாழாய்ப் போன ஊழின் செயலிவ் 
வூழல்க ளென்றே  உணர்ந்துவிடு 

நினைத்ததைப் பார்த்து நாளும் வருந்தி 
நடக்கப் போவது ஒன்றுமில்லை 
அனைத்து மவன்செயல் நாமென் செய்வோம் 
நாட்டின் ஜாதகம் சரியில்லை!





ஆழல் - கறையான்


2 comments:

  1. Ramesh Sir
    HATS OFF TO YOUR SHARP MEMORY POWER. hOW WELL YOU HAVE LISTED OUT ALL CORRUPTIONS. iF ONLY SUCH LIST OF THOSE COrrupted are proved in the court of law and listed and published with the stringent punishments how nice it will be.!!! Thanks

    ReplyDelete
  2. Thank You. Must confess that I took the help of Wikipedia to get the list and statistics! The bane with our society is that we are prone to forgetting ( and forgiving?) all these scandals !

    ReplyDelete