Search This Blog

May 11, 2018

வேகத் தடைகள்

வேகத் தடைகள்

இது நான் கண்ட ஒரு புதுவிதமான வேகத் தடை!
நடந்து செல்வோரையும் நிறுத்தி, அவர்களை கடக்க விடாமல் செய்யும்  மஞ்சள் மலர்களால் ஆன வேகத் தடை.
படித்துப் பாருங்களேன்!
அன்புடன் 
ரமேஷ் 


வேகத் தடைகள்







தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில்  உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில்  விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்

கருத்த சாலைப்  பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய  மென்மலர்ப்  போர்வை

இவை

விதிக்கப் பட்ட ஆயுள் முடிந்து
முதிர்ந்து முற்றும் மரித்த பின்னாலே
உதிர்ந்து கீழே விழுந்து  சாலையில் 
சிதறிக்  கிடைக்கும் சடல மலர்களோ?

இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம்
பதுங்கி அவற்றுள் புதைந்து இருக்குமோ?
பாதம் அவைமேல் பதித்து நடந்தால்
வேதனை யுற்று வலியால் வெதிர்க்குமோ?

பதித்துக் காலை பூமேல் வைத்து 
மிதித்து வதைக்க  மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!



வெதிர்த்தல் = நடுங்குதல்


3 comments:

  1. Beautiful, as usual. Exactly the same feeling I get during my morning walk.
    SUNDER

    ReplyDelete
    Replies
    1. Thanks. Glad to know that we share the same wavelength.

      Delete
  2. அன்புள்ள நண்பா ரமேஷ்

    சாலையோர சிஃனலில் மஞ்சளை நிற தடை தொடர்ந்து சிவப்பு நிற தடை அதை தொடர்ந்து பச்சை நிற தடை நீக்கம் வருவதைப்போல நீ இந்த மஞ்சள் பூ தடையை மதித்து நின்று பிறகு தாண்டி சென்றிருக்கலாம் இல்லையா!

    என்றும் அன்புடைய ராம்மோகன்

    ReplyDelete