Search This Blog

May 27, 2018

பிரதோஷப் பாடல்- 7

பிரதோஷப் பாடல்- 7

இன்றைய பிரதோஷப்பாடலை இறைவன் அடிகளிலே படைக்கிறேன் - அதை பற்றிய கதைச் சுருக்கத்தோடு !

அன்புடன்

ரமேஷ்



அரிமாவுக்  கஞ்சியதால் மரமேறிய வேடனுமே 
இரவுறக்கம் துறந்திடவே விலுவத்தின் இலைபறித்து 
தருவினடி அரன்சிலைமேல் எறிந்தேநல்  அபிடேகம் 
கருதாமல் செய்தாலும் கைலாயம் சென்றடைந்தான். 


A hunter chased by a lion, climbed up a vilva tree to escape from it. Unable to  come down as the lion kept vigil under the tree waiting for him to come down, the hunter, to prevent himself 
from dozing off and falling  down from the tree , started plucking the leaves from the tree and was dropping them down. There was a Sivalingam under the tree and the vilva leaves kept falling on them! As a result, though the 'Abhishekam / Archanai " was performed by the hunter, without his really meaning to do so, yet he attained Moksha . 

சிங்கம் ஒன்று துரத்தியதால் பயந்தோடிய வேடன் ஒருவன், அதனிடமிருந்து தப்ப ஒரு  வில்வ மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொண்டான். சிங்கமோ, அவன் இறங்கி வருவான் என்று எதிர்பார்த்து மரந்தடியிலே காத்திருந்தது. இரவில் தூங்கிவிட்டால் கீழே  விழுந்து சிங்கத்திற்கு இரையாகிவிடுமோவென அஞ்சிய வேடன், தான் உறங்காது நேரம் கழிக்க  , மரத்தின் இலைகளைப்  பறித்து கீழே போட்டவாறு இரவைக் கழித்தான். அந்த வில்வ இலைகள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தவாறு இருந்தன! இவ்வாறு, தன்னை அறியாமலே செய்த அர்ச்சனையின் பயனாக, அவ்வேடன் கைலாயம் சென்றடைந்தான்.

May 11, 2018

வேகத் தடைகள்

வேகத் தடைகள்

இது நான் கண்ட ஒரு புதுவிதமான வேகத் தடை!
நடந்து செல்வோரையும் நிறுத்தி, அவர்களை கடக்க விடாமல் செய்யும்  மஞ்சள் மலர்களால் ஆன வேகத் தடை.
படித்துப் பாருங்களேன்!
அன்புடன் 
ரமேஷ் 


வேகத் தடைகள்







தெருவின் மருங்கில் உறங்கும் மரங்கள்
இரவில்  உதிர்த்த மஞ்சள் பூக்கள்
குறுக்கே தெருவில்  விரித்துப் பரவி
இருக்கும் அழகிய வேகத் தடைகள்

கருத்த சாலைப்  பரப்பின் மேலே
திரண்டு குவிந்த பூக்களின் கோர்வை
விறுவிறு வென்று நடக்குமென் நடையை
மறுத்து நிறுத்திய  மென்மலர்ப்  போர்வை

இவை

விதிக்கப் பட்ட ஆயுள் முடிந்து
முதிர்ந்து முற்றும் மரித்த பின்னாலே
உதிர்ந்து கீழே விழுந்து  சாலையில் 
சிதறிக்  கிடைக்கும் சடல மலர்களோ?

இதயத் துடிப்பு இன்னும் கொஞ்சம்
பதுங்கி அவற்றுள் புதைந்து இருக்குமோ?
பாதம் அவைமேல் பதித்து நடந்தால்
வேதனை யுற்று வலியால் வெதிர்க்குமோ?

பதித்துக் காலை பூமேல் வைத்து 
மிதித்து வதைக்க  மனமோ இல்லை.
இந்த வழியே செல்வதை விடுத்து
வந்த வழியே திரும்பி நடந்தேன்!



வெதிர்த்தல் = நடுங்குதல்


May 5, 2018

எவரும் செய்யாத ஊழல்கள் ( அல்லது ) எல்லாம் அவன் செயல்!

எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

நாட்டில் நடக்கும் ஊழல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. 1950 முதல் 1980 க்கு உட்பட்ட 30 ஆண்டுகளில்  நடந்த  பெரிய அளவு ஊழல்கள் மொத்தம் 11. ( போபோர்ஸ் உட்பட). இந்த பெரிய அளவு ஊழல்கள்,  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக , 1990 முதல் 2000 வரையிலான  10  ஆண்டுகளில் 18 ஆகவும் , 2000 முதல் -2010வரையிலான 10  ஆண்டுகளில் 29 என வளர்ந்து 2010-2018 க்கான 8 ஆண்டு கால அளவில் 138 ஆக உயர்ந்திருக்கிறது. 
இதில் வருந்தத்தக்க விஷயம், ஊழல்கள் நடந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும்,  பெரும்பான்மையான ஊழல்களில் யார் செய்தது என்று இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை! வரும் நாட்களிலும் இது நிரூபணம் செய்யப்படும் என்றும் நம்புவ தற்கு முடியவில்லை. 
எவரும் செய்யாத , ஆனால் நடந்த, ஊழல்கள் இவை! 
நடக்கும் எல்லாவற்றிற்கும் இறைவனே காரணம் என்று நாம் நம்புவதைப்போல , இவற்றிற்கும்  இவன் மேலேயே பழியைப் போட்டுவிட்டு , அடுத்து வரப்போகும் ஊழல்களை பற்றி அலசவேண்டியதுதான்! 

இது பற்றி ஒரு பாடல்.

அன்புடன் 

ரமேஷ் 




எவரும் செய்யாத  ஊழல்கள் ( அல்லது ) 
எல்லாம் அவன் செயல்!

டூஜீ  கேசில் ஊழல் ஆனால் 
மாஜி மந்திரி செய்யவில்லை 
ஊரே அறிந்த பீரங்கி ஊழல் 
யார்செய்  தாரதை ?  தெரியவில்லை 

கார்கில் போரின் தியாகி களுக்கு 
சேர வேண்டிய வீடுகளும் 
யார் யாருக்கோ சேர்ந்தது ஆனால் 
யாரும் குற்றம் செய்யவில்லை! 

நிலக்கரி ஊழல்  உண்மை ஆனால் 
தலைவர்கள் தவறெதும் செய்யவில்லை.
காமன் வெல்த்விளை யாட்டுக் கணக்கில் 
ஏமாற் றியவர் யாருமில்லை!

கல்லறைப் பெட்டி ஊழலில் எவரும் 
சில்லறை ஒன்றும்  வாங்கவில்லை.
கனிமம் எடுப்பதில் ஊழல்,  உண்மை ; 
எனினும் எவரும் செய்யவில்லை !

கல் எடுக்கும் ஊழலில் எவரின் 
கல்லாப் பெட்டியும் ரொம்பவில்லை!
நதியடி  மணலும் காணாய்ப் போச்சு, 
சதிகாரர் அதில் எவருமில்லை ! 

வங்கியில் பெரும்பணம் வாங்கிய வர்கள்  
இங்கே எங்கும் தங்காமல் 
இங்கிலாந் ஹாங்காங் ஓடிச் சென்றால் 
எவரைச்   சாடி  என்னபயன்?

ஊழல் என்னும் ஆழல்*நம்  நாட்டை 
அரித்து பாழாய்ச் செய்கிறதே!
விழலுக் கிறைத்த நீர்போல் மக்கள் 
வரிப் பணங்களும் போகிறதே !

ஊழல் எல்லாம் நடந்தது உண்மை 
ஆனால் செய்தவர் யாருமில்லை 
பாழாய்ப் போன ஊழின் செயலிவ் 
வூழல்க ளென்றே  உணர்ந்துவிடு 

நினைத்ததைப் பார்த்து நாளும் வருந்தி 
நடக்கப் போவது ஒன்றுமில்லை 
அனைத்து மவன்செயல் நாமென் செய்வோம் 
நாட்டின் ஜாதகம் சரியில்லை!





ஆழல் - கறையான்