Search This Blog

Jan 14, 2018

பொங்கலும் பிரதோஷமும் - (பிரதோஷப் பாடல் 3)

பொங்கலும் பிரதோஷமும் 
(பிரதோஷப் பாடல் 3)

அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
இன்று தை  மாத முதல் நாளும் - பொங்கலும் - பிரதோஷமும் சேர்ந்து வருகின்றன.
இந்த நாளில் சிவபெருமான் பொங்கலன்று நடத்திய ஒரு திருவிளையாடலைப்  பார்க்க (கேட்க)லாமே !

அன்புடன் 
ரமேஷ்.



முன் குறிப்பு :

பாண்டிய அரசன் அபிஷேக  பாண்டியன் மதுரையை ஆண்டு வருகையில், மாநகர் மக்களை  மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் விதமாக, சிவபெருமான் ஒரு சித்தர் வடிவில் வந்து, பல சித்துகள்  புரிந்து வந்தார். இது பற்றி கேள்விப்பட்ட அரசன், அவரே சிவபெருமான் என்று அறியாததால், அவரை தனது அரசவைக்கு அழைத்தான். சித்தர் , " முற்றும் துறந்த எனக்கு அரசனால்  ஆவது என்ன ? என்னை  சந்திக்க அவனல்லவோ வரவேண்டும் " என்று கூறி அதை மறுத்தார். 

இதன் பின்னர், மகர சங்கராந்தி அன்று சோமசேகரக் கடவுளைத் தரிசிக்க கோவில் சென்ற அரசன் அங்கு சித்தரை சந்தித்தான். சந்திக்கையில், அவரை சோதிக்கவும் எண்ணினான். அப்போது நடந்த கதை இது 

பாடல்

தைத்திங்கள் முதலாம்நாள்  சித்தரைச்  சந்தித்து சோதிக்க அவரை* எண்ணி
மத்தகக் கல்லிதுவும்**  கரும்பினைக் கவ்வுமோ காட்டெனக்   கேள்வி கேட்க
சித்தரின் சித்தத்தால் சீவன்^   அடைந்தமா   கரும்பினை உண்ணக் கண்டு
சித்தரே சிவனென்று புத்தியும்  தெளிந்தனன் பாண்டியன் அபிஷேகனே.

சோதிக்க அவரை = அவரை சோதிக்க என்று அறிய 
** மத்தகக் கல் =  கல் மத்தகம்= கல்லால் ஆன யானைச் சிற்பம் 
^ - சீவன்=ஜீவன்= உயிர் 
^^ மா=விலங்கு, யானை 

பாடற்பொருள் :

தைமாத முதல் நாளன்று, சித்தரை சந்தித்த மன்னன் அபிஷேக பாண்டியன், அவரை சோதிக்க எண்ணி, கோவிலில் இருந்த ஒரு கல்யானையின் சிற்பத்தைக் காட்டி , " உம்மால் இந்த யானையை, ஒரு கரும்பை உண்ணச்  செய்ய இயலுமா?" என்று வினவினான்.  உடனே சித்தரும் யானையை நோக்க , அது உயிர் பெற்று , கரும்பைக்  கவ்வி உண்டது. இது கண்ட அரசன், சிவனே சித்தர் வடிவில் வந்திருக்கிறார் என்று உணர்ந்து அவரை வணங்கி அருள் பெற்றான்.

2 comments:

  1. அன்புடைய நண்பா

    உன் கவிதைகள் மூலமாக நான் நிறைய புராண கதைகளை தெரிந்துகொண்டு வருகிறேன், இன்றய கதையையும் சேர்த்து.. எப்பொழுதும் போல் இன்றய கவிதையும் நன்றாகவே உள்ளது. நன்றி.

    உன் அன்புள்ள நண்பன் ராம்மோகன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ராம்மோகன் .

      Delete