Search This Blog

Jan 20, 2018

ஒரு நீண்ட ரயில் பயணம்

வாழ்க்கையே ஒரு நீண்ட ரயில் பயணம்.
அப்பயணம் இப்பிறவியுடன் முடிந்து விடுவதில்லை.
அது பற்றி

அன்புடன்
ரமேஷ்



ஒரு நீண்ட ரயில் பயணம்


புறப்பட்ட இடம்விட்டு இறுதியாய் இறங்குமிடம்
சேர்ந்தடைய சிறப்புரயில்  இல்லாத காரணத்தால்
மாறிப் பலரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக
ஏறித்   தொடர்ந்தால்தான்  இப்பயண மேநிறையும்


முந்திப் பலபயணம் முடித்த பின்னாலே
இந்த வண்டியிலே ஏறிப்  பயணித்தார்.
இந்நாள்  பயணத்தில் இறங்க வேண்டுமிடம்
வந்து  சேர்ந்தபின்  வேறோர் ரயில்பிடிப்பார்.

உடுத்து முடித்ததெடுத்த பழைய துணிகளையும்*
மடித்து எடுத்துவைத்த மீதித் துணிகளையும்**
அடைத்த பையிரண்டை கையில் பிடித்திழுத்து 
 இடத்தைக் காலிசெய்து இறங்கப் போகின்றார்.

படித்து முடித்துவிட்ட  நாட்செய்தித் தாள்களையும்
குடித்து முடித்துவிட்ட காலிநீர்க் குவளையையும்
படுத்துக்  கலைத்துவிட்ட  படுக்கை  விரிப்பினையும்
பிடித்துப் பழகிப்போன  பயண உறவுகளையும்

விடுத்துத் துறந்துகீழே ரயிலை விட்டிறங்கி
அடுத்த ரயிலிலேற   செல்லுவதைக்  காணுகின்றோம்.
கடைசி ரயில்நிலையம் சென்று சேரும்வரை
இடைவெளிக லில்லாமல்   இப்பயணம் தான்தொடரும் .


*, **, சேர்த்த பாவ, புண்ணியங்கள்



1 comment:

  1. அன்புள்ள ரமேஷ்

    நம்முடைய இந்த ரயில் பயணத்தில் எஙகு போகவேண்டும் என்று எனக்கு தெரிகிறது.
    எதை நோக்கி போகிறேன் இன்னும் எவ்வளவு காலம் பயணிக்க வேண்டும் என்று தெரிவதில்லை.
    இதற்கு உதவுது வழி இருந்தால் சொல்லேன்.

    அன்புடைய ராம்மோகன்

    ReplyDelete