Search This Blog

Dec 20, 2016

பாத்திரமறிந்து செய்தோமா? ------- ஒரு குழப்பம்


பாத்திரமறிந்து  செய்தோமா? ------- ஒரு குழப்பம் 

வீடு தோறும் வந்து , பல்வேறு காரணங்களைக் கூறி உதவி கேட்டு நம்மை பலர் அணுகுகிறார்கள். இப்படி அணுகுபவர்களும் , அவர்கள் கூறும் காரணங்களும் பலவிதம். "அவர்கள் எல்லோரும் உண்மையாக உதவி தேடி வருபவர்களா, இல்லை , நம்முடைய இளகிய இதயத்தை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களா , அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா ? " என்ற கேள்வி ஏற்படுவது இயற்கையே!  தேர்ந்தெடுத்து உதவி செய்த பிறகு , பாத்திரமறிந்து உதவி செய்தோமா? என்ற ஒரு குழப்பமும் ஏற்படுகிறது எனக்கு. உங்களுக்கும் கூட இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை , இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன் - ஒரு பாடல் மூலம் !

அன்புடன் 
ரமேஷ் 

மதியவேளை உணவைமுடித்து  ஓய்வெடுக்கும்  நேரத்தில்
கதவுமணியை இடைவிடாமல் ஒலித்துநம்மை எழுப்பியே
உதவிகேட்டு  நிதமும்வந்து நாமும்நம்பும் வகையிலே
கதைகள்பலவும் சொல்லிக்கண்ணில் நீரைநிறைப் பவர் பலர்.

கோவில்கட்டி  கூழைஊற்ற காசுகேட்டு வருபவர் 
நாவில்அலகு குத்திமஞ்சள் துணியணிந்து வருபவர் 
காவடியைத் தோளில்தூக்கி ஆட்டமாடி வருபவர் 
மாவிலையைக்  குடத்தில்கட்டி கலசம்சுமந்து வருபவர் 

திருமணத்தின் அழைப்பைக்காட்டி தாலிதருமம் கேட்பவர் 
இருதயநோய் சிகிச்சைக்காக  இரந்துகேட்டு வருபவர் 
மருந்துவாங்கி நோயைநீக்க சீட்டைஎடுத்து  வருபவர் 
இறந்துபோனோர் உடலைஅடக்கம் செய்யஉதவி கேட்பவர்

நீரகங்கள்  கெட்டதாலே நீரிழிவு நோய்எனக் 

கூறிக்குருதி சுத்தம்செய்ய காசுவேண்டி வருபவர்
பரிட்ச்சைக்காக  நாளைக்குள்ளே  பணத்தைக்கட்டி மட்டுமே 
உரிமைச்சீட்டு  வாங்கவேண்டும்  என்றுவரும் மாணவர் 

சிலசிலைகளை முச்சக்கர வாகனத்தில்  ஏற்றியே
திலகமிட்டு மாலைபோட்டு தூபதீபம் காட்டுவோர்
மலைக்குப்போக மாலைபோட்டு விரதம்இருந்து வருபவர் 
தலையைமொட்டை அடித்துநடந்து திருப்பதிக்குச் செல்பவர்

என்றுபலரும்  வீட்டில்வந்து உதவிஎன்னைக் கேட்கையில் 

ஒன்றிஇவர்கள் கூறும்கதையில் உள்ளம்உருகிப் போகிறேன்!
அனைவருக்கும் உதவிசெய்ய ஆசையே இருப்பினும் 
 இன்றென்கையில் இருக்கும்காசு  போதுமாக இல்லையே!


அவர்கள்சொல்லும் கதையைக்கேட்டு  ஆவணங்கள் பார்த்தபின் 
இவர்கள்தகுதி உடையோரென்று சிலரைத்தேர்ந்து உதவுவேன்.
கவர்ச்சிப்பேச்சு வார்த்தைஜாலம் பலரிடம் இருப்பினும் 
விவரம்சற்றுக் குறைவுஎன்று அவர்களை விலக்குவேன்.


தேர்ந்தெடுத்து  உதவிபெற்ற  மக்களிலும் ஒருசிலர்- (அவரைச்)  
சேர்ந்தபணம் குறைவுஎன்று ஏளனமாய்ப் பார்க்கிறார்.- உதவி 
இன்றிச்சென்ற பலரில்சிலரும் நையஎன்னை வைகிறார்.
நன்றிசொல்லி நகைமுகத்துடன் செல்பவரோ வெகுச்சிலர்.

ஆய்ந்துதேர்வு செய்யப்பட்டோர் பணத்தைப்பெற்று சென்றபின்
சாய்ந்தமர்ந்து சிறிதுநேரம் சிந்தித்துப் பார்க்கிறேன்.
தேர்ந்தெடுத்து உதவிபெற்றோர் தக்காரோ  உண்மையில்?
இல்லையென்று தள்ளப்பட்டோர் நல்லவரோ உண்மையில்?

இக்குழப்பம் எப்போதும் என்மனத்தில் உறுத்தலாய்
செக்குசுற்றும் மாட்டைப்போல சுற்றிச்சுற்றி வருகுதே!
அக்கறையாய் மற்றவர்க்கு உதவிசெய்த பின்னரும்
உதவிசெய்த மகிழ்ச்சியில்லை; குழப்பமொன்றே மிஞ்சுதே!








2 comments:

  1. பார்த்துஇருந்து செய்வோம் , பத்திரமாக கொடுப்போம் என்றல்லாம் பார்க்கமுடியாது தர்ம பார்வை கொண்டவர்கள் ! பாத்திரம் பற்றி விஜாரிக்காமல் பணத்தை கடனாக கொடுத்து பரிதாபமாக ஏமார்ந்தவரிகளில் ஒருவனான நான் அதையும் ஒரு தர்மமாக கருதி என்னை சமாதான படுத்தி கொள்கிறேன் ! வெளியில் சொல்லிக்க முடியாத ஒரு தர்மசங்கடமான நிலை !!

    ReplyDelete
  2. "கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் " என்று கம்பர் சொன்னது பொய், இன்று " கடன் கொடுத்தார் நெஞ்சம் போல " என்று திருத்தி எழுத வேண்டுமோ?

    ReplyDelete