Search This Blog

Jun 11, 2016

குற்றாலத்தில் ஓர் காலை விடியல் !



குற்றாலத்தில் ஓர் காலை விடியல் !


ஜூன் மாதம் !
தென்கிழக்குப் பருவக் காற்று வீச ஆரம்பித்து விட்டது.  சில நாட்களாக இங்கும் மழை பெய்து வெய்யிலின் தாக்கம் சற்றே குறைந்தது.
ஒவ்வொரு ஜூன் மாதமும், இந்த சமயத்தில் குற்றாலம் நினைவுக்கு வருவது உண்டு.
நான் தூத்துக்குடியில் பணிபுரிந்து வருகையில், ஒவ்வோரு வருடமும்  குற்றாலம் செல்வது உண்டு.
அதிகாலைப் பொழுதில், அந்த அருவியின் சாரலில்  நனைந்தவண்ணம் , ஒரு புதிய நாளின் ஜனனத்தை அனுபவித்தல் ஒரு தனிச் சுகம்.!
அந்த சுகத்தை,  பல வருடங்களுக்குப் பின் நினைவு கூறுவதே இந்தப் பாடல்..

அன்புடன்
ரமேஷ்.



கரிநிகர் கருநிற இரவு  கழிந்து
வருபரு தியின்கிரணம் வானில் முளைக்க
சலசல சலவென் றோடிடும் சிறுநதி
நெடுநெடு  வான்தொடு முகட்டை  விடுத்து
படிவடி வத்தில் அமைமலைச் சரிவில்
இடைவரும் பாறைகள் பொடிபட விரைவில்
கிடுகிடு எனவிழும் அருவியும் போடும்
டமடம டமவெனும் மேளத்தின் தாளம்.


துளித் துளித் துளியாய் தெறிக்கு(ம்) நீர்த் திவலை 
விண்மண்  இடையே வெண்திரை விரிக்கும்.
பளபள வெனமி(ன்)னும் பருதியின் கதிர்கள்  
வெண்திரை ஊடே  நடமா டுகையில் 
எழுமெழு நிறம்நிறை வண்ணக் கலவை
கண்ணினைப் பறிக்குமிக் கவினுறு காட்சி
  வானவில் லொன்று வானம் விடுத்து 
விழுந்ததோ இங்கென  வியப்பை யளிக்கும்.    


சிறுசிறு பறவைகள் கூடுகள் விடுத்து
கீச்சுக் கீச்சென கூவிப் பறக்கும்.
கமகம கமவென மலர்களின் சுகந்தம்
சிலுசிலு சிலுவெனும்  காற்றை நிறைக்கும்.
பொலபொல பொலவென வானம் வெளுக்க 
கலகல கலவென நிலமகள் நகைக்க
செவ்வரிக் கரைகொண்டு மேகங்கள் தவழ 
இவ்வண்ணம் புலரும்  இன்றையப் பொழுதே !.

No comments:

Post a Comment