Search This Blog

Feb 26, 2025

சிவ பதிகம்

சிவ பதிகம்

இன்றைய சிவராத்திரி தினத்தன்று வெண்டுறை வடிவில் நான் முன்பொருநாளில் சிவபிரானைத் துதித்து எழுதிப் பதித்த பத்துப் பாடல்களைமீண்டும் பதிவிடுகிறேன்.

முக்கண்ணனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

அன்புடன் 

ரமேஷ் 


சிவ பதிகம்


விடைவா கனமேறி வீற்றிருந் துமையவளை
இடமணிந்து  பாதியாய்  இணைத்தவனை  - சடைமுடிமேல்
படமெடுக்கும் அரவணிந்த பரமனைப் பணிந்தவரை
இடரெதுவும் தீண்டாது காண்.!                                                1.

   
ஆல மரத்தடியில் அமர்ந்த்திருந்து மோனத்தவக்
கோலம் தரித்த குருநாதன் -- நால்வேத
நாயகன்  தட்சிணா  மூர்த்தியின்  திருநாமம்
வாயுரைத்தல் நாளும் நலம்.                                                       2.

   
நெடிதுயர்ந்து விசுவத்தை நிறைத்திட்ட பசுபதியின்
அடிமுடியைக் காணவே முயன்றிட்டு --- முடியாமல்
பிரமனும்  நெடுமாலும் முடிதாழ்த்தி வணங்கிட்ட
பரமசிவன் பாதம்பணி வோம். .                                                 3.


பாகீ  ரதன்செய்த பெருந்தவத்தின்  பரிசாக
ஆகாய கங்கைதனை மேலிருந்து கொணர்ந்தவளின்.
வேகத்தைத்  தடைசெய்து  சடைமுடியில் பிடித்திட்ட
ஏகனை மனமே பணி .                                                              4.


ஒருகையில் உடுக்கெடுத்து ஒரு கையில் மானேந்தி
ஒரு கையில் சூலமெடுத்து ---  பிறைமதியை
விரிசடையில்   முடிதரித்து களிநடம் புரிகின்ற
திரிபுராந்  தகனைத்   துதி.                                                          5,


அவிமறுத்து அவமதித்த தக்ஷனின்  யாகத்தை
அழித்துப்பின் அருந்தவத்தில் அமர்ந்தவன்மேல்  தேவர்களின்
மன்னுதலால் மலரம்  பெறிந்தமன்  மதனைத்தன்
கண்ணுதலால் எரித்தோன் துணை.                                            6.


காலம் முடிந்ததெனக்  காலன் அழைத்திட்ட
பாலன்மார்க் கண்டேயன் உயிர்தனைப்-- பாலித்து
காத்தவற்கு சாகா வரம்தந் தருள்புரிந்த
கூத்தனடி நெஞ்சே  பணி .                                                          7.


நிலையிலது   இவ்வுலகு நிலையிலது   இவ்வாழ்வு
விலையற்ற  இவ்வுண்மை   விளக்குமுக மாகவே
இடுகாட்டின்  சுடுசாம்ப லுடல்முழு திலும்பூசி
நடமாடு வோனைத் துதி. .                                                           8.  


நிலமாகக்   காஞ்சியிலும் வளியாக ஹஸ்தியிலும்
ஜலமாக திருவானைக்  காவல் தலத்திலும்
ஒளிர்நெருப்   பாய்த்திரு வண்ணா மலையிலும்
வளியாக தில்லைத்திருச் சிற்றம் பலத்திலும்                                         


ஏகாம்ப ரேசனாய்  காளஹஸ் தீசனாய்
ஜம்புகே சுவரனாய் அண்ணா மலையனாய்
அம்பலத்தில் தாண்டவ நடமிடும் ராசனாய்
அமர்ந்தஐம்  பூதனைப் பணி.                                                        9.
.      

அசுரர்களும் தேவர்களும் அடிபணியும் வேதியனை
விசும்புவெளி படைத்தவற்றைக் காக்குமொளிச் சோதியனை
அணங்குதனை இணங்கித்தன் உடல்கொண்ட பாதியனை
வணங்கியே    முக்தியடை வோம்,                                                     10    

Feb 11, 2025

நண்பன் முரளிக்கு வாழ்த்து

நண்பன் முரளிக்கு வாழ்த்து 


கோவை அரசினர் பொறியியல் கல்லூரியின் 1970 ஆண்டில் தேர்வுற்ற  மாணவர்களின் -  55வது ஆண்டு நிறைவுக் கூடல் மைசூர் நகரில் இம்மாதம் ஏழாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடைபெற்றது. அப்போது மிக அருமையாக அதை நிகழ்த்திய நண்பர் முரளியின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து வியந்தோம். அவர் தலைமையில், அவரது முழு ஈடுபாட்டுடன் இயங்கும் பல நிறுவனங்களை நேராகப்   பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.  அவரை வாழ்த்தி ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்டுறை வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 





பட்டப் படிப்பு படித்ததொடு நிற்காமல் 

பட்டறிவும் கூடவே பெற்றதன் பயனாலே 

பட்டறைகள் பலநிறுவித் தொழில்துறையில் பேருயரம் 

எட்டியவென் நண்பனுக்கு வாழ்த்து 




படித்துப் பட்டங்கள்   பலரும்  பெற்றிடவே 

படிக்கல்லாய் அமைகின்ற கல்விக் கூடங்கள் 

நடத்தி வருகின்ற நண்பன் முரளிக்கு 

கடவுளருள் கிட்டிட வாழ்த்து 




பற்பல வருடங்கள் உழைத்துக் களைத்துப்பின்

தற்போது தனைத்தாங்கி  நிற்கின்ற தூணெதுவும்

இல்லா திருப்போர்க்கு இல்லங்கள்  அளிக்கும் 

நல்மனத்து நண்பனுக்கு வாழ்த்து.




  

   

Jan 31, 2025

GCT 70 நண்பர்களின் கூடல்

GCT 70 நண்பர்களின் கூடல் 

கோவை அரசினர் பொறியியற்கல்லூரில் இருந்து 1970 -ம் ஆண்டு பட்டம் பெற்று நாங்கள் வெளியே வந்து இப்போது 55 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிகழ்வை நினைகூறும் விதமாக நண்பர்கள் பலரும் மைசூரில் ஒன்று கூட ஆயத்தமாகி வருகிறோம். 

ஐந்து  ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொன் விழாக் கூடலுக்குப் பிறகு, பெரிய அளவில் நண்பர்கள் இணையப்  போகும் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தவும், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்கவும் முன்வந்திருக்கிறார் நண்பர்                                எம்.ஜீ.எம் போர்ஜிங் பாரத் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான  முரளிதர்  பகவத். 

இந்நிகழ்ச்சியைப் பற்றியும், நண்பர் முரளியின் நேர்த்தியான செயலுக்கு நன்றியுரைக்கும்  விதமாகவும் ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 



தந்தைவழி தாய்வழியும்  கைப்பிடித்த கன்னிவழி 

வந்தடைந்த சொந்தங்கள் மட்டும் உறவல்ல

ஒன்றிணைந்து கல்வியினைக் கற்றிட்ட நண்பர்கள் 

என்றும் உறவென் றறி.


ஆண்டுகள் ஐம்பத்து ஐந்து  கழிந்தபின் 

மீண்டும் முரளியின் முன்னெடுப்பால்  - ஈண்டிங்கு

பண்டுநாட் பல்கதைகள் பேசிக் களிக்கவே

நண்பர்கள் சேர்வார் பலர்.                 


வெவ்வேறு நாடுகள் வெவ்வே  றிடங்களில் 

எவ்வெவர் எங்கெங் கிருப்பினும் -  அவ்வவர் 

தந்தேகத்  தொந்தரவை  சற்றும் கருதாமல்  

சந்திப்பில் சேரவரு  வார்


தங்க இடத்தோடு உண்ண அறுசுவையும்

எங்களுக் கன்போ டளிப்பவன் - தங்கத்தை 

ஒத்த மனத்தினன் நண்பன்  முரளிக்கு

மெத்தவும் நன்றியுரைப் போம் 


   



Jan 27, 2025

பிரதோஷப் பாடல் - 50

பிரதோஷப் பாடல் - 50 

இன்றைய பிரதோஷத்தன்று நாகலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்கையில் எண்ணத்தில் எழுந்த பாடல்.

இந்த ஐம்பதாவது பாடலுடன்,  இதுவரை எழுதி வந்த பிரதோஷப் பாடல் தொடரை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் 

ரமேஷ் 



அகரஉகர மகரங்கள் ஒன்றிணைந்த ஓமினை 

சிகரமாகச் சேர்த்துச் சொல்லும் ஐந்தெழுத்து மந்திரம்  *

பகருவோர்க்கு பலமுறை பலனளிக்கும் மந்திரம் 

நகரவேண்டி நந்தியை நந்தன் சொன்ன மந்திரம் 

சிதம்பரத்தில் நடனமாடும் திகம்பரனைத் துதித்திடும்  

நிகரில்லாத மந்திரம் நமச்சிவாய மந்திரம் 

உகந்து நாளும் காலை மாலை வேளைதொறும் ஓதுவர் 

இகபர மிருவுலகிலும் இன்பமாக வாழுவர்!


* ஓம் நமசிவாய  

Jan 16, 2025

நாளுமோர் நற்கவிதை


நாளுமோர் நற்கவிதை 

என் கல்லூரி நண்பர்கள்பலரும்  இணைந்துள்ள வாட்ஸஅப் தளத்தில் நண்பர் வேலாயுதம் தினந்தோறும் ஒரு கவிதை எழுதி பதித்து  மகிழ்வித்து வருகிறார்! அன்னாரின் திறமையை வியந்துப் போற்றி ஒரு பாடல் - வெண்பா வடிவில்!

அன்புடன் 

ரமேஷ் 


மடையுடைத்துப் பாய்கின்ற வெள்ளம்போல் -  தங்கு 

தடையின்றி வீசுகின்ற தென்றல்போல் -  நாளும்  

இடைவெளிகள் இல்லாமல் பாடல் புனைந்தளிக்கும் 

சொல்வேலை நான்போற்று வேன்.

(பலவிகற்ப இன்னிசை வெண்பா)

Dec 26, 2024

மத நல்லிணக்கம்

 மத நல்லிணக்கம்




25-12-2024

இன்று கிருஸ்துமஸ்!

பள்ளிகள், அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை.

கூட்டம் அலைமோதுகிறது- 

இங்குள்ள 

பிள்ளையார் கோவிலில்!

யார் எந்தக் கடவுளைத்  தொழுதால் என்ன?

எல்லாமே ஒன்றுதானே!

மெர்ரி கிருஸ்துமஸ்!


அன்புடன் 

ரமேஷ் 

Dec 10, 2024

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்!

வயது கூடக்  கூட , நாம் நமது  குழந்தைப் பருவத் தூய்மைகளையும் , அப்பருவத்திற்கே உரிய குதூகலங்களையும் தொலைத்துவிட்டு உழலுகிறோம்.  நம்மில் பலரும் அவ்வப்போது உணரும் இந்த உணர்வை  ஒரு  பாடலாக வடித்திருக்கிறேன்! 

சற்று நீளமான பாடல்! இருந்தாலும் கேட்டும்  படித்தும்   ஒத்துணர்வீர்கள் என்று நம்புகிறேன்!

அன்புடன் 
ரமேஷ் 

என்னுள் இருந்த சின்னக் குழந்தையை 
எங்கோ தொலைத்து விட்டேன்!




என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

  

சின்னச் சின்ன குறும்புகள் செய்து மகிழ்ந்ததை மறந்து  விட்டேன் 

வன்மம் நில்லா வெள்ளை மனதை வெளியே துறந்து  விட்டேன்

துள்ளல் சிரிப்பை உள்ளக்  களிப்பை  என்றோ  துறத்தி  விட்டேன்  

கள்ளம் கபடம் இல்லா உள்ளம்  எங்கோ  விரட்டி  விட்டேன்

       என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

      உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 

 

விழுந்து காயம் பட்ட இடத்தில் அப்பா  முத்தம் இட்டால்     

விலகிடும் வலிகள் என்று  நம்பிய அப்பா வித்தன உறுதி  !  

புத்த கத்தில்   பத்திர மாக பதுக்கி வைத்த மயிலிறகு

சத்தியமாக  போடும் மறுநாள் குட்டி என்ற நம்பிக்கை!      

இத்தகு   உறுதியும்  நம்பிக் கைகளும்  இருந்த வெள்ளை மனதை  

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


ஏமாற் றங்கள் ஏற்பட் டாலும் அதையே மனதில் நிறுத்தி  

ஏமா ராமல்* உடனே அடுத்த  அனுபவம்  தேடும் குணங்கள்  

சூழ்ச்சி களங்கம் குற்றம்  இவைகள் எதுவும் இல்லா மனது   

தாழ்த்துதல் உயர்த்துதல் காழ்ப்புகள் இனப்பிற குணமெதும்  சேராப்  பண்பு  

வாழ்க்கையின் உயரிய  இத்தகு  முறைமைகள்  நிறைந்து  இருந்த மனதை   

          என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

          உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


வண்ணப் பூச்சிகள் பறப்பதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்த   காலம்  

விண்ணில் மின்னும் விண்மீன்களை  எண்ணி வியந்த நேரம் 

நண்பர் களுடன் நேரம் தெரியாமல் பேசிக் கழித்த பருவம்  

கொண்டாட் டங்கட்கு  குறைவில் லாமல் குதித்துக் களித்த காலம்   

இவைகளை நினைவில் நிறுத்திச் சிரித்துக் களித்த காலம் கடந்து  

கவலைகள் மட்டும் ஏனோ மனதில் நிலைகொண் டிருக்குமிந்  நேரம்

எல்லாம் இருந்த போதும் எதுவோ குறைந்ததைப் போல் தோன்றும் 

எதுவும் புரியா தேனெனத் தெரியா நெஞ்சை   நெருடிடும் பாரம்

         என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

         உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


இன்றையப்  பொழுதை   இனிதாய்க் கழித்து இருப்பதை  முற்றும் மறந்து

முன்தினம் நடந்து முடிந்த  ஒன்றை   மனதில் இருத்தி வருந்தி 

நாளையப் பொழுதின் நடப்புகள் நினைத்து கவலையில் மூழ்கிக் கழித்து

நாளின் றிதையே  நன்றாய் கழிப்பதை    நானே மறந்து விட்டேன். 

        என்னுள் இருந்த சின்னக் குழந்தையை எங்கோ தொலைத்து விட்டேன்-

       உன்னுள்  இருக்கும்  குழந்தையை நீயும்   இழந்து  விடாதே நண்பா! 


என்னுள் எங்கோ புதைந்து கிடைக்கும் சின்னக் குழந்தை மனதை 

இன்றே தேடி எடுத்து அதனை மீண்டும் மீட்டு  வருவேன் 

எங்கும் இன்பம் எதிலும் இன்பம் காணும் அந்த மனதை 

தங்கல்** தவிர்த்து எந்தன் மனதில் இன்றே உயிர்க்க வைப்பேன்.

 

ஏமாராமல் = மனம் கலங்காமல்

**தங்கல்=தாமதித்தல்