விடை தெரியாக் கேள்விகள்
கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, "இவை இப்படித்தான்" என்று நிறுவப்பட்டு நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அடிப்படை உண்மைகள் சில. அவை வளி, ஒளி, நிலம் நீர்,நெருப்பு போன்ற இயற்கைக் சக்திகளின் தன்மைகள்!
அதேபோல் , இம்மனித வாழ்வில் நாம் புரிந்து ஏற்றுக்கொண்டிருக்கிற, தத்துவ விவாதங்களுக்கு அப்பாற்பட்ட, சில உணர்வுகளும் மதிப்புகளும் சில உண்டு.. அன்பு, நட்பு, கருணை போன்ற இவைகளும் கேள்விக்கு அப்பாற்பட்டவை.
ஆனால் நம் வாழ்வின் இம்மை, மறுமை பற்றிய சில விடை தெரியாக் கேள்விகள் காலம் காலமாக கேட்கப்பட்டு வருகின்றன. நசிகேதன் என்ற இளைஞன் எமதர்மனிடன் கேட்ட கேள்விகளும் இவைதான்.
இந்த கேள்விகளுக்கு பதில், தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதை விட, OK அறநெறிக்கு உட்பட்ட வாழ்க்கை வாழ்தல் மூலமே கிடைக்குமோ?
இது பற்றிய, அலைந்து திரியும் எண்ணங்கள் கொண்ட, ஒரு பாடல்.
அன்புடன்
ரமேஷ்
தென்றலுக்குத் தடையில்லை
ஒளிக்கதிர்க்கு எடையில்லை
தண்ணீருக்கோர் வடிவில்லை
விண்வெளிக்கோ உடையில்லை
----------இந்தப் பிறவியின் பொருள் என்ன
----------என்றவென் கேள்விக்கு விடை இல்லை
நட்பை வாங்கக் கடையில்லை
கருணைக் கென்றும் மடையில்லை
அன்பை வெல்லப் படையில்லை
உயிரை மிஞ்சிய கொடையில்லை
----------இப்பிறவிக் கப்பால் இருப்பதென்ன
----------என்றவென் கேள்விக்கு விடை இல்லை
நசிகே தனுமே எமனிடம் எழுப்பிய
இந்தக் கேள்விகள் புதிதில்லை
பன்னூல் படித்தும் பண்டிதர் உரைத்தும் -நான்
உணர்ந்து புரிந்திடும் பதிலில்லை
விடையே யில்லா, திருப்பினும் புரியாக்
கேள்விகள் இங்கே பலவாகும்
அவற்றின் புரிதலைத் தேடி அலைந்தால்
வாழ்நாள் முழுதும் செலவாகும்
நல்லதை நினைத்து நல்லதைச் செய்து
நன்றே வாழ்வை நடத்திடுவோம்
இன்றோ என்றோ இக்கேள் விக்கு
பதிலும் தானே கிடைத்துவிடும்
அன்புடன்
ரமேஷ்
மகிழ்ச்சி.. இறைவன் போதுமானவன் .
ReplyDeleteராஜன் பாபு.
DeleteNice Conclusion
ReplyDeleteNice Conclusion
ReplyDelete