உரசல்
மலையோடு முகிலுரச மழை பிறக்கும்
மலரோடு காற்றுரசி மணம் பரப்பும்.
கல்லோடு உளியுரச சிலை பிறக்கும்
சொல்லோடு கருத்துரச கவி பிறக்கும்
மண்ணோடு நீருரச பயிர் தழைக்கும்
உண்மையெது என்கின்ற ஞானம் பிறக்கும்.
அன்புடன்
ரமேஷ்
சதுரங்க வேட்டை --சாதனை படைக்கும் இந்திய பெண்கள்
இப்போது நடைபெற்று வரும் உலக மகளிர் சதுரங்கப் போட்டியின் இறுதிச் சுற்றில் முதல் முறையாக இரு இந்தியப் பெண்கள் மோதுகிறார்கள்- கொன்னூரு ஹம்பியும் , திவ்யா தேஷ்முக்கும் .
இதைப் பாராட்டி ஒரு சிறு பாடல் வெண்பா வடிவில்!
அன்புடன்
ரமேஷ்
பின் குறிப்பு : இதைப் பதிக்கும் இந்நேரத்தில் வந்த செய்தி ---- ஹம்பி இறுதிப் போட்டியில் வென்று விட்டார்.
பன்னாட்டு பெண்டிர் சதுரங்கப் போட்டியிலே
கொன்னூரு ஹம்பியுடன் முன்னேறி மோதுகிறாள்
இன்னாளில் இன்னுமொரு இந்தியப்பெண்* ; ஈவர்க்கு
கண்ணேறு நேராமல் வேண்டு.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
* திவ்யா தேஷ்முக்
பிரதோஷப் பாடல் 51
ஆதியனே வேதியனே மங்கையுடற் பாதியனே
மீதியுடல் மின்னுகின்ற வேதகப்பொன்* சோதியனே
காதினிக்க சாமமெனும் வேதமறை ** நாதத்தை
ஓதுவரைக் காதலித்து ஆதரிக்கும் நாயகனே
நட்டநடு நள்ளிரவில் உடலெரியும் சுடலையிலே
சுட்டெரித்த சாம்பலையே பூசி நடம் புரிபவனே
பிட்டுக்கு மண்ணெடுத்து பணிபுரிந்த சேவகனே
மொட்டவிழ்ந்த மலர்தூவி பனிந்துனையே பூசிப்பேன்!
* புடமிட்ட பொன்
** சாமவேதம்
அன்புடன்
ரமேஷ்
என்னுடைய சித்தி கீதாவின் இன்றைய 80-ஆவது பிறந்தநாளன்று நான் எழுதிப் பகிர்ந்த ஒரு வாழ்த்துப் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
கீதா -80
எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் எங்கள் அருமை கீதாவே
இந்நன்னாளில் உன்னை வாழ்த்தி இந்தப்பாடல் எழுதுகிறேன்
ஐந்து பேர்களில் கடைக் குட்டி ; அவர்களுள் இவளே படு சுட்டி!
வாய் பேசுவதில் வெகு கெட்டி; அனைவரும் கேட்பார் கைகட்டி!
தனித்துவத் தன்மை படைத்தவளாம், சரியெனப் படுவதை செய்பவளாம்
எந்த எல்லைக் கோட்டுள்ளும் இவளை வரையிட இயலாதே.
வாழ்க்கைப் பாதையில் வழுக்கல்கள் பலவும் இருந்தது உனக்கெனினும்
வீழ்ந்து விடாமல் எழுந்திட்டு வாழ்ந்து அவற்றை வென்றிட்டாய்.
மகனும் மகளும் உறவுகளும் உனக்குத் துணையாய் இருக்கையிலே
மகிழ்வுடன் மிகப்பல நாளின்னும் வாழ்ந்திட வாழ்த்துகள் பாடுகிறோம்
தடைகளை உடைக்கும் திட மனதை விடைவா கனத்தான் அருளிடுவான்!
உடலுறு குறைகள் விடுபடவே உமையொரு பாகன் உதவிடுவான்!
எனது நீண்ட நாள் நண்பன் ராமகிருஷ்ணனின் 50 தாவது திருமணநாள் நிகழ்வன்று ( 22-5-2025) - தம்பதிகளுக்கு நான் எழுதிப் படித்த வாழ்த்துப் பாடல்.
அன்புடன்
ரமேஷ்
ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியருக்கு வாழ்த்துகள்
காதல் மனைவியின் கைத்தலம் பற்றி
மாதினைப் பாதியாய் மனதில் ஏற்றி
மேதினி யோர்க்கு மாதிரி யாக
ஆதர வாக ஒருவரோ டொருவர்
புரிதல் பெருக்கி இருதயம் ஒன்றி
இருமனம் இணைந்து இனிதே வாழ்ந்து
அரைநூ றாண்டுகள் ஆகும் இந்நாள்
நிறைவுடன் சிறக்க நண்பனென் வாழ்த்து!
அன்புடன்
ரமேஷ்
பெற்றவர் இருவரும் பெருங்களிப் படைய
வெற்றிபெற் றவரும் வாழ்வினில் சிறந்தார்!
எடுத்த கடமைகள் அனைத்தையும் நன்றாய்
முடித்தபின் மீண்டும் தொடங்கிய வாழ்க்கை,
உடல்திடம் மனநலம் நிம்மதி யோடு
தொடர்ந்திட இறைவன் நல்லருள் புரிக!
ஐ.பி.எல் போட்டிகள் - ஒரு மறைவும் ஒரு உதயமும்
நேற்று நடந்த போட்டியில் மீண்டும் வெற்றிகரமாகத் தோல்வியுற்று சி.எஸ்.கே அணி இறுதிக் கட்ட ஆட்டங்களுக்குப் போகும் வாய்ப்பை இழந்தது.
இது குறித்து ஒரு பாடல்!
இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு, 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி, மிகச் சொற்பமான பந்துகளிலேயே சதமெடுத்து சாதனை புரிந்தார்!
இது பற்றியும் ஒரு பாடல்!
இரண்டும் வெண்பா வடிவில்.
அன்புடன்
ரமேஷ்
வந்தாரை வாழவைக்கும் சென்னைநகர் பண்பினையே
பந்தாட்டப் போட்டியிலே காட்டுவதேன்? - நொந்துமிக
நூல்தன்னைப் போலானார் மாநகரின் மக்களெலாம்!
பால்தன்னைப் பத்தாம்நாள் ஊற்று
(இருவிகற்ப இன்னிசை வெண்பா)
பால்வடியும் தோற்றத்தால் ஏமார்ந்தே போகாதே!
'பால்'^அடிக்கும் மட்டை பலத்தால் எதிரணியை ^ ball
பாழடிக்கும் *"வைப(வ்)"வத்தை பார்த்தேநாம் பூரிப்போம் * vaibhav
வாழட்டும் **சூர்யகுலத் தான்! ** suryavanshi
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)