சென்ற வருடம் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று 1970 ஆம் ஆண்டு தேர்வு பெற்ற என்னுடைய பொறியியல் கல்லூரி கல்லூரிக் குழு நண்பர்கள் அனைவரும் கோவையில் சந்தித்துப் பொன்விழா கொண்டாடினோம்.
அந்த சமயத்தில், அந்த வருடம் தேர்வு பெற்ற எல்லா நண்பர்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து, அதனோடு அவர்கள் குடும்பப் புகைப்படத்தையும் இணைத்து எங்கள் கல்லூரித் தோழன் எக்ஸ். துரைராஜால் ஒரு நினைவுப் புத்தகம் , "பிறவிப் பயன்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
அந்த பொன்விழா நிகழ்வு நடைபெற்று இன்னும் சில நாட்களில் ஒரு ஆண்டு நிறைவடையப் போகிறது.
அதை நினைவு கூறும் வகையில் , பிறவிப் பயன் என்ற தலைப்பில் ஒரு வெண்பா பாடல் தொகுப்பை பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
அன்புடன்
ரமேஷ்
பிறவிப் பயன்
வீடு மனைவாங்கி வங்கிப் பணம்சேர்த்தால் தேடும் மனஅமைதி கூடுமோ?- வாடும் நலிந்தோர்க்கு நாம்செயும் நல்லுதவி மூலம் பலிக்கும் பிறவிப் பயன் .
நேற்றைய இரு நிகழ்வுகளில் ஒன்று சாதனை; மற்றொன்று வேதனை.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை அதிரடியாக வெற்றி கொண்டது சாதனை.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மருத்துவர் சாந்தா இறைவனடி அடைந்த செய்தி வேதனை.
இவைகளைப் பற்றி வெண்பா வடிவில் ஒரு பதிவு.
அன்புடன்
ரமேஷ்
சாதனை
முன்னணி வீரர்கள் ஐவர் ,அடிபட்டு ஆட்டத்தில் பங்கேற்க முடியாமல் இருந்தபோதும், அனுபவமே அற்ற மாற்று விளையாட்டு வீரர்களைக் கொண்ட அணியொன்றை அமைத்து , எவரும் கனவிலும் நினைத்திராத முறையில் சிறப்பாக விளையாடி, ஆஸ்திரேலியாவை தோற்கடித்தார்கள்!
அஞ்சுபேர் நோயால் அணியிலில் லாபோதும்
அஞ்சாமல் ஆடியே வென்றார் விளையாட்டில் !
"ஆசி"யரின்* ஆணவத்தை நீக்கி முகத்திலே
பூசினார் நன்றாய் கரி.
(பலவிகற்ப இன்னிசை வெண்பா)
* ஆஸ்திரேலியர்கள் " ஆசீஸ் " என்று சுருக்கி அழைக்கப்படுவர்.
பல மாதங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரைக்குச் சென்றோம். இதற்கு முக்கிய காரணம் பெங்களூரிலிருந்து சென்னை வந்திருக்கும் எங்கள் அன்புப் பேத்தி ஆதிரா! கடற்கரைக்குப் போயே தீரவேண்டும் என்று பிடிவாதம்!
அதிகாலையில் கூட்டம் கூடும் முன்பாக அங்கு கழித்த சில மணி நேரங்கள் சொர்க்கம்தான்!
முகமூடியைக் கழற்றிவிட்டு, சில்லென்ற காற்றின் ஸ்பரிசத்தில் நடக்கும் சுகமே தனி ! கூடவே கைகோர்த்து நடக்க பேத்தியும் இருந்ததால் ஆனந்தம் இரண்டு மடங்கு!
இந்த அனுபவத்தைப் பற்றி ஒரு கவிதை, இதோ!
அன்புடன்
ரமேஷ்
கடலோரக் காட்சி
கடலலைகள் கரை தடவும் ; அலைமுடியில் நுரை மகுடம்;
உடல் தழுவும் குளிர் காற்று; இளம் சூட்டில் கதிர் கீற்று .
காஞ்சி காமகோடி பீடாதீச்வர ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்வாமிகள் அஷ்டோத்ரம்
இன்று மகாபெரியவா என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனை. மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு எல்லா மதத்தினராலும் ஞானியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உத்தமர் அவர்.
இந்த நன்னாளில் அவரைத் துதித்து சமஸ்க்ருத மொழியில் எழுதப்பட்ட அஷ்டோத்ர சத நாமாவளியை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். என்னால் முடிந்த அளவு மூலத்தின் கருத்தை சிதைக்காமல் , தமிழ்ப்பாடல் வடிவில் அமைத்திருக்கிறேன். இதன் சமஸ்கிருத மூலத்தின் இணைப்பை(லிங்க்) கீழே பகிர்கிறேன்.
மஹா ஸ்வாமிகள் சிவபெருமானின் அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரரின் மறு உருவே என்பது பக்தர்களின் திண்ணமான எண்ணம். இந்தத் தோத்திர மாலையில் இந்தக் கருத்து பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இன்றைய பிரதோஷ தினப் பாடலாக இதைப் பதிவு செய்கிறேன். அடியேனின் இந்த முயற்சியில் ஏதேனும் குறைகள் இருப்பின் மஹாஸ்வாமிகள் மன்னித்தருள்வார் என்று திடமாக நம்புகிறேன். பக்தர்களின் மன்னிப்பையும் கோருகிறேன்.
அன்புடன்
ரமேஷ்
பி.கு: இந்த மொழிபெயர்ப்பில் எனக்கு உதவி செய்த திரு ராமசுப்பிரமணியத்திற்கும் அவரது பிற நண்பர்களுக்கும் என் நன்றி.
ஆண்டு 2020 க்கான என் நாட்குறிப்பேட்டில் எழுதி நிறைத்த பக்கங்களை விட எழுதப்படாத வெறுமையான பக்கங்களே அதிகம். ஏழெட்டு மாதங்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும்போது, எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான் ! இப்படி இருக்கையில் எதற்காக ஒரு தினநாட்குறிப்பு? இந்த நிலைமை சீக்கிரம் மாற இறைவனை வேண்டுவோம்.
அன்புடன்
ரமேஷ்
இரண்டா யிரத்திருப தாண்டின்குறிப் பேட்டை
புரட்டிப் பார்க்கிறேன் நான்பட்ட பாட்டை !
கருமையின்* கறைபடிந்த பக்கங்கள் சிலவே! * (கரு+மை =கரிய மை)
குறிப்பேட்டை வாங்கியது வீணான செலவே!!
ஒவ்வொரு நாளுமதன் முன்னாளின் நகலே!
இதிலிருந்து விடுபடவே இங்கேது புகலே ?
நோய்நம்மைத் தாக்குமோ என்றுபயப் பட்டு,
வாய்மீதும் முகமீதும் முகமூடி இட்டு
வீட்டுள் அடைபட்டு, உள்ளம் உடைபட்டு
நாடோறும்* நாம்செய்யும் செயல்கள் தடைபட்டு (* நாள் தோறும் )