GCT 70 நண்பர்களின் கூடல்
கோவை அரசினர் பொறியியற்கல்லூரில் இருந்து 1970 -ம் ஆண்டு பட்டம் பெற்று நாங்கள் வெளியே வந்து இப்போது 55 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிகழ்வை நினைகூறும் விதமாக நண்பர்கள் பலரும் மைசூரில் ஒன்று கூட ஆயத்தமாகி வருகிறோம்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த பொன் விழாக் கூடலுக்குப் பிறகு, பெரிய அளவில் நண்பர்கள் இணையப் போகும் இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தவும், அதற்கான மொத்தச் செலவையும் தானே ஏற்கவும் முன்வந்திருக்கிறார் நண்பர் எம்.ஜீ.எம் போர்ஜிங் பாரத் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான முரளிதர் பகவத்.
இந்நிகழ்ச்சியைப் பற்றியும், நண்பர் முரளியின் நேர்த்தியான செயலுக்கு நன்றியுரைக்கும் விதமாகவும் ஒரு சிறு பாடல் தொகுப்பு - வெண்பா வடிவில்!
அன்புடன்
ரமேஷ்
தந்தைவழி தாய்வழியும் கைப்பிடித்த கன்னிவழி
வந்தடைந்த சொந்தங்கள் மட்டும் உறவல்ல
ஒன்றிணைந்து கல்வியினைக் கற்றிட்ட நண்பர்கள்
என்றும் உறவென் றறி.
ஆண்டுகள் ஐம்பத்து ஐந்து கழிந்தபின்
மீண்டும் முரளியின் முன்னெடுப்பால் - ஈண்டிங்கு
பண்டுநாட் பல்கதைகள் பேசிக் களிக்கவே
நண்பர்கள் சேர்வார் பலர்.
வெவ்வேறு நாடுகள் வெவ்வே றிடங்களில்
எவ்வெவர் எங்கெங் கிருப்பினும் - அவ்வவர்
தந்தேகத் தொந்தரவை சற்றும் கருதாமல்
சந்திப்பில் சேரவரு வார்
தங்க இடத்தோடு உண்ண அறுசுவையும்
எங்களுக் கன்போ டளிப்பவன் - தங்கத்தை
ஒத்த மனத்தினன் நண்பன் முரளிக்கு
மெத்தவும் நன்றியுரைப் போம்